Friday, July 15, 2011

மற்றவை - விமர்சனம்

* விமர்சனம் - தெய்வத் திருமகள்  *

 

கிருஷ்ணா(விக்ரம்) உருவத்தில் சராசரி மனிதனாகவும், மன நிலையில் ஆறு வயதுடைய குழந்தையாகவும் இருப்பவர். ஊட்டியில் " அவலாஞ்சி  " என்னும் ஒரு கிராமத்தில் உள்ள ஒரு மன நிலை காப்பகத்தில் வாழ்ந்து வருகிறார். சாக்லேட் தயாரிக்கும் வேலையை செய்து கொண்டிருப்பவர். அவரை கோடீஷ்வர பெண் ஒருவர் காதலித்து , அப்பாவின் சம்மதம் கிடைக்காததால் வீட்டை விட்டு வெளியேறி , திருமணம் செய்து கொள்கிறார். பிரசவத்தின் போது கிருஷ்ணாவின் மனைவி , ஒரு பெண் குழந்தையை பெற்று விட்டு இறந்து விடுகிறார். அந்தக் குழந்தையை மிகவும் அக்கறையுடனும், அளவுக்கதிகமான பாசத்துடனும் அந்த காப்பகத்தில் வளர்த்து வருகிறார். அந்தக் குழந்தையை வளர்ப்பதற்கு கிருஷ்ணாவுடன் வேலை செய்யும் மூர்த்தியின்(எம்.எஸ்.பாஸ்கர்) மனைவி ராஜி உதவி செய்கிறார். இருவரின் உறவையும் சந்தேகத்தோடு பார்க்கும் மூர்த்திக்கு இதனால் கிருஷ்ணாவின் மேல் கோபம் வருகிறது.

குழந்தை நிலா(சாரா) வளர்ந்து 5 வயது ஆனதும் பள்ளியில் சேர்ந்து படிக்கிறாள். இந்நிலையில் நிலாவிற்கு அந்தப் பள்ளியின் கரெஸ்பாண்டென்ட் ஸ்வேதா(அமலா பால்) படிப்பதற்கு உதவி செய்கிறார். இருவரின் நட்பும் தொடர்கிறது.

ஒரு சமயத்தில் நிலா தனது அக்காவின் குழந்தைதான் என்பது ஸ்வேதாவிற்கு தெரிய வருகிறது. அக்கா இறந்து போனதும் தெரிய வருகிறது. அப்போது மூர்த்தி ஸ்வேதாவிடம் கிருஷ்ணா குழந்தையை வளர்க்கத் தெரியாமல், கொடுமை படுத்துவதாக சொல்லி விடுகிறார். அதனால் ஸ்வேதா நிலாவை, தனது அப்பாவின் உதவியுடன் கிருஷ்ணாவிடமிருந்து பிரித்து தன்னுடன் வைத்துக் கொள்கிறார்.



நிலாவைப் பிரிந்து கிருஷ்ணா வருந்துகிறார். நிலா அப்பாவை பார்க்க வேண்டுமென்று ஸ்வேதாவை வற்புறுத்துகிறாள். இருவரும் ஒருவரையொருவர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர்.

இந்த சமயத்தில், வக்கீல்களான அனு(அனுஷ்கா ஷெட்டி)-வும், அவரது நண்பர் சந்தானமும் வாதாடுவதற்கு ஒரு கேஸ் கூட இல்லாமல், எதாவது ஒரு கேஸ் வருமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கிருஷ்ணா அவர்களை நாடி, நிலாவைப் மீட்டுத் தர வேண்டுகிறார். கிருஷ்ணாவின் மன நிலை சரியில்லாத இயல்பை பற்றி அறிந்ததும், அனுவும் சந்தானமும் அவரை விட்டு விலக முயற்சிக்கின்றனர். பின்பு கிருஷ்ணாவின் முழுக்கதையும் இருவருக்கும் தெரியவருகிறது.

அனு கிருஷ்ணாவிற்கு, நிலாவை மீட்டுத் தருவதாக உறுதி கூறி அவரை தன் வீட்டில் தங்க வைத்துக் கொள்கிறார். நிலாவை அப்பாவிடம் ஒப்படைக்க வேண்டுமென்று ஸ்வேதாவின் தந்தை மீது அனு கேஸ் போடுகிறார். தொழிலதிபரான ஸ்வேதாவின் தந்தை அவரை எதிர்த்து வாதாட அனுபவமிக்க மிகப் பெரிய செல்வாக்கு பெற்ற வக்கீலான பாஷிர்(நாசர்)-ஐ அமர்த்துகிறார்.

 

நிலாவை கிருஷ்ணாவிடம் ஒப்படைக்கும் கேஸில் வெற்றி பெற, அனு, சந்தானம் மற்றும் அவர்களது நண்பர்கள் ஏகப்பட்ட தகிடுதத்தம் வேலைகளை செய்கின்றனர். இறுதியில் அனு தனது கேஸில் வெற்றி பெற்றாரா? கிருஷ்ணாவும் நிலாவும் இணைந்தார்களா? என்பதற்கான பதிலை வெண் திரையில் காண்க..!

விக்ரமின் நடிப்பு :
பாராட்ட வார்த்தைகளில்லை. மனிதர் அந்த அளவிற்கு நடித்திருக்கிறார். கிருஷ்ணா என்ற கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் என்று கூட சொல்லலாம். 6 வயதுடைய குழந்தையாகத்தான் திரையில் தெரிகிறார். குழந்தை தன்னை முதன் முதலில் அப்பா என்று அழைக்கும் போது அவர் படும் சந்தோசமாகட்டும், குழந்தையை பிரிந்து ஏங்குவதாகட்டும், ஒவ்வொரு ஃப்ரேமிலும் அவரது நடிப்பு எக்ஸெலன்ட்(excellent). கடைசி காட்சியில் அவருக்கும் ,  நிலாவிற்கும் இடையே நிகழும் அந்த உணர்ச்சிப் பூர்வமான காட்சியைக் கண்டு அழாதவர்கள் நிச்சயம் தியேட்டரில் இருக்க முடியாது. விக்ரமிற்கு நேசனல் அவார்ட் நிச்சயம் கிடைக்கும். மொத்தத்தில் இந்தப் படம் அவரது கேரியரில் ஒரு மைல்ஸ்டோன்(Milestone) .

சாராவின் நடிப்பு : நிலாவாக வரும் குழந்தை சாரா அம்சமாக நடித்திருக்கிறார். விக்ரமிற்கும் அவருக்கும் இடையே நிகழும் பாசப் பிணைப்பைக் கண்டு ரசிக்கலாம்.


அனுஷ்கா  : கிளாமர் ஹீரோயினாக வலம் வந்த அனுஷ்கா இந்தப் படத்தில் நிறைவான நடிப்பைத் தந்திருக்கிறார். " விழிகளில் ஒரு வானவில் " பாடலில் அனுஷ்கா அழகு தேவதையாக காட்சியளிக்கிறார்.

அமலா பால் : அழகான குடும்ப பாங்கான முகம். மைனாவில் இயல்பான பெண்ணாக இருந்த இவர்,  இதில்  ஒவ்வொரு ஃப்ரேமிலும் சோ க்யூட். நடிப்பும் சிறப்பு.

சந்தானம் : இயல்பான காமெடியில் கலக்கி இருக்கிறார். படம் முழுவதும் வருகிறார். நெகிழ்வான நடிப்பிலும் நன்றாக நடித்திருக்கிறார்.

நாசர், அமலா பால் தந்தை, எம்.எஸ்.பாஸ்கர், அவரின் மனைவி ராஜி, அனுஷ்காவின் தோழி, அவரது காதலன் , அனுஷ்காவின் அப்பா ஒய்.ஜி.மகேந்திரன், விக்ரமின் கார்டியன் அனைவரின் நடிப்பும் அவ்வளவு யதார்த்தம்.


விஜய்  இயக்கம் :
மதராசப் பட்டிணம் என்ற ஒரு அழகான படத்தை கொடுத்த இயக்குனர் விஜய்-க்கு இந்தப் படம் மேலும் ஒரு வெற்றி மகுடம். நேர்த்தியான திரைக்கதையில் , யதார்த்தமான மற்றும் உணர்ச்சிப் பூர்வமான படத்தை தந்திருக்கிறார். படம் கொஞ்சம் நீளம்தான். அமைதியாக ஒவ்வொரு காட்சியும் செல்கிறது. ஆனாலும் ஆரம்பம் முதல் கடைசி வரை நகைச்சுவையோடு கொண்டு சென்று, இறுதியில் உணர்ச்சிப் பூர்வமாக முடித்திருக்கிறார். எனவே படம் நீளமென்றாலும் போரடிக்கவில்லை.

 ஒளிப்பதிவு : நீரவ்ஷாவின் ஓளிப்பதிவு படம் முழுவதும் அவ்வளவு தெளிவு. ஊட்டியில் வரும் காட்சிகள் அவ்வளவு குளிர்ச்சி. " விழிகளில் ஒரு வானவில் " பாடலை எடுத்த விதம் கவிதை.

 
இசை : ஜீ.வி.பிரகாஷ்-ன் இசை படத்திற்கு மிகப் பெரிய பலம். பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட். BGM -ல் கலக்கி எடுத்திருக்கிறார். சில காட்சிகளில் BGM இல்லாமல் காட்சிகள் நகர்கின்றது. அதனைப் பார்க்கும் போது அவ்வளவு இதம். தேவைப்படும் காட்சிகளிலெல்லாம் தனது திறமையை நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார். விக்ரமிற்கும் , சாராவிற்கும் இடையே நிகழும் அந்த உணர்ச்சிப் பூர்வமான கடைசி காட்சியில் வரும் பிண்ணனி இசை கண்ணீரை வரவழைத்து விடும். ஹேட்ஸ் ஆப் பிரகாஷ்.

சந்தானத்தின் ஆர்ட் கன கச்சிதம் . கோர்ட் செட் ரியலான கோர்ட்டாகத் தெரிகிறது. ஆண்டனியின் எடிட்டிங் மிகவும் நேர்த்தி.


தெய்வத் திருமகள் - நகைச் சுவையாலும், உணர்ச்சிப்பூர்வமாலும் அனைவரையும் கவருவாள். Must watch.

டிஸ்கிஹாலிவுட்டில் வெளிவந்த I am Sam  என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல்தான் இந்தப் படமும்.

**********************************************************

7 comments:

Unknown said...

ok ok ....i will watch tonight .....

கடம்பவன குயில் said...

கிளைமாக்ஸ் தவிர முழுபடமும் பார்த்த திருப்தி உங்களின் விமர்சனத்தில். நாளை போலாம் என்று நினைத்துள்ளேன். பார்ப்போம்.

மகேந்திரன் said...

விமர்சனம் படித்ததும் படம் பார்க்கவேண்டும் போல உள்ளது.
ஊருக்கு போனதும் பார்த்துவிடுகிறேன்.

RAMA RAVI (RAMVI) said...

விமர்சனம் மிகவும் நன்றாக இருக்கிறது,குணா..படித்தவுடன் நல்ல படத்தை தவறவிடாமல் பார்க்க வேண்டும் என தோன்றுகிறது...

நிரூபன் said...

வணக்கம் சகோ தெய்வத் திருமகள் படத்தினைப் பார்க்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டும் வகையில் அருமையான ஓர் விமர்சனத்தைத் தந்திருக்கிறீங்க.

Angel said...

உங்கள் விமர்சனம் நல்லா இருக்கு .சீக்கிரம் படத்தை பார்க்கணும் .
உங்க ப்ளாகில் follower widget எங்கே ?

ஹேமா said...

உங்கள் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலைத் தருகிறது !

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...