Monday, December 12, 2011

மற்றவை - முல்லை பெரியாறு அணை


முல்லை பெரியாறு அணை சம்பந்தமாக அ.மார்க்ஸ் என்பவர் எழுதிய இந்தக் கட்டுரையை படித்து பாருங்கள். பெரியாறு அணையைப் பற்றிய  பிரச்சனையின் தாக்கம் நமக்கும் புரியும். 

முல்லைப் பெரியாறு அணை: கேரள தமிழக உணர்ச்சி அரசியல் அ.மார்க்ஸ்:

கோயம்புத்தூரிலிருந்து இதை எழுதிக் கொண்டிருக்கின்றேன். தமிழக கேரள எல்லை மாவட்டங்களில் ஒன்று இது. எல்லாக் கடைகளிலும் தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் பெயர்ப்பலகைகள் இருக்கும். மலையாளச் செய்தித் தாள்கள் எங்கும் கிடைக்கும். உள்ளூர் மக்களில் பெரும்பாலோர் மலையாள மொழியைப் புரிந்து கொள்வார்கள். ஒரு மணி நேரப் பேருந்துப் பயணத்தில் பாலக்காடு கணவாயைத் தாண்டினீர்களானால் இயற்கை அழகு கொஞ்சும் மலயாள பூமி தொடங்கிவிடும். பாலக்காடு நகரம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியைப் போலத்தான் காட்சியளிக்கும். எல்லோரும் அங்கே தமிழ் பேசுவார்கள். தென்கோடித் தமிழகமான கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. தொல்காப்பியரின் ஆசான் பிறந்த அதங்கோடு இங்கேதான் இருக்கிறது. இங்கே பேசப்படும் மலையாளங் கலந்த தமிழை ‘எல்லைத் தமிழ்’ என்பாருண்டு. அங்கிருந்து மேற்குக் கடற்கரையோரமாகப் பயணித்தீர்களானால் கேரளத் தலைநகரமான திருவனந்தபுரம் வரை நீங்கள் சரளமாக யாருடனும் தமிழ் பேசலாம்.
அரிசி, காய்கறிகள், பால், இறைச்சி எல்லாம் கேரளத்திற்கு தமிழகத்திலிருந்துதான் போகின்றன. தமிழகத்தின் எந்த ஊரிலும் ஒரு மலையாளத்தாரின் தேநீர்க்கடை இருக்கும். கிட்டத்தட்ட தமிழக முக்கிய நகரங்கள் எல்லாவற்றிலும்  மலையாள ஆலுக்காஸ் குழும நகைக் கடைகளும், முத்தூட் நிதி நிறுவனங்களும் சமீப காலமாகப் பரவியுள்ளன. மலையாளத்தார்கள் மத்தியிலுள்ள ஒற்றுமை உணர்வு, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமை, இன உணர்வு, தொழில் முனைவு ஆகியன குறித்து தமிழர்கள் மத்தியில் ஒருவகை ஏக்கமும் கோபமும்  உண்டு. சமீபத்தில் நான் சவூதி சென்றிருந்த பொழுது அங்கே மத உணர்வைத் தாண்டி தமிழர்கள் மத்தியிலுஞ்சரி, மலையாளிகள் மத்தியிலுஞ்சரி இந்த மொழி அடையாளம் கூடுதலாக இருந்ததைப் பார்க்க முடிந்தது.

சமீபகாலமாக இருதரப்பிலும் இந்த இன உணர்வும் அதன் இன்னொரு பக்கமான இன வெறுப்பும் கூடுதலடைவதில் முல்லைப் பெரியார் அணைப் பிரச்சினை ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது. இரு பக்கத்திலும் இன உணர்வு இயக்கங்கள் மட்டுமின்றி எல்லா அரசியல் கட்சிகளுமே இதற்குக் காரணமாகியுள்ளன. கேரளத்தைப் பொருத்த மட்டில் பரம வைரிகளான கம்யூனிஸ்ட் கட்சிகளும் காங்கிரசும் இந்த விசயத்தில் ஒரே குரலில் முழங்குகின்றன. அங்கே இன உணர்வு இயக்கம் என்று பெரிதாக எதுவும் இல்லாவிட்டாலும் எல்லா மையநீரோட்ட அரசியல் கட்சிகளுமே அந்தக் ‘குறை’யைப் போக்கக் கூடியனவாகவே உள்ளன.
கடந்த நான்கைந்து  நாட்களாக இரு மாநிலங்களிலும் எல்லையோரங்களில் பதட்டங்கள் ஏற்பட்டுள்ளன. இரு மாநிலங்களிலும் மற்ற மாநிலத்தவர்களின் கடைகள் தாக்கப்படுகின்றன. இன்றைய நாளிதழ்ச் செய்திகளின்படி இங்கே கோவையில் மட்டும் 37 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து வேலைக்குச் சென்ற தொழிலாளிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களெல்லாம் கேரளத்தில் தாக்கப்படுன்றனர். தற்போது நடந்து கொண்டுள்ள இந்த வன்முறைகளையும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும் பொருத்த மட்டில் கேரள அரசியல்வாதிகளுக்கே பெருத்த பங்கிருக்கிறது. சென்ற மாதம் பெய்த கடும் மழையில் முல்லைப் பெரியார் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கிய உடனேயே கட்சி வேறுபாடுகளின்றி அணை உடையும் பீதிப் பிரச்சாரத்தைப் பல்வேறு வடிவங்களில் அவர்கள் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். பெரிய அளவில் போட்டிபோட்டுக் கொண்டு போராட்டங்களையும் கேரளக் கட்சிகள் நடத்தத் தொடங்கின. இது இங்கேயும் கடும் எதிர்வினைகளைத் தோற்றுவித்தது. இயக்கங்கள் நடத்திய போராட்டங்களுக்கு அப்பால் முல்லைப் பெரியாறு அணைப் பாசன விவசாயிகள் தன்னெழுச்சியாகத் திரண்டு கேரளத்திற்குச் செல்லும் வாகனங்களைத் தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாக அமைந்தது.
முல்லைபெரியாறு அணை 116 ஆண்டுகளுக்கு முன்னர் கேரள-தமிழ்நாடு எல்லையில், கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள தேக்கடியில் கட்டப்பட்டது. 1886ம் ஆண்டில் திருவிதாங்கூர் மன்னருடன் அன்றைய பிரிட்டிஷ் அரசின் சென்னை மாகாணம் செய்துகொண்ட  ஒப்பந்தத்தின்படி நீர்த்தேக்கத்திற்கென 8000 ஏக்கர் நிலத்தையும் அணைக்கென மேலும் 100 ஏக்கர் நிலத்தையும் 999 ஆண்டு குத்தகைக்கு திருவிதாங்கூர் அரசு அளித்தது. கேரளத்தில் ஒடுகிற பெரியாறின் மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதியான 4576 சதுர கி.மீட்டரில் 114 சதுர கி.மீ மட்டுமே தமிழக எல்லையில் அமைந்துள்ளது. எனினும் ஆண்டுதோறும் நீரோடும் இந்த ஆற்று நீர், அணை கட்டப்படுவதற்கு முன், எவ்விதப் பயனும் இன்றி கேரள எல்லைக்குள் ஓடி அரபிக் கடலில் கலந்தது. அதே நேரத்தில் மழை மறைவுப் பகுதியில் அமைந்துள்ள தமிழகத்தின் தென் மாவட்டங்களான மதுரை மற்றும் இராமானாதபுரத்தின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நீரின்றிக் காய்ந்து கிடந்ததை ஒட்டி பிரிட்டிஷ் அரசு முல்லை ஆறும் பெரியாறும் கலக்கும் இந்த இடத்தில் இப்படி ஒரு அணையைக் கட்டி, மேற்குத் திசையிலோடி அரபிக் கடலில் கலந்த பெரியாற்று நீரைக் கிழக்குத் திசையில் வங்கக் கடலை நோக்கித் திருப்பியது.

1887- 1895 ஆண்டுகளில் இராணுவ உதவியுடன் மேஜர் பென்னிகுயிக் என்கிற பொறியாளர் சுண்ணாம்பையும் செஞ்சாந்தையும் கொண்டு இந்த அணையைக் கட்டி முடித்தார். அருகில் சிற்றணை ஒன்றும் இத்துடன் இணைந்துள்ளது. திருப்பப்பட்ட நீர் வைகை ஆற்றையும் அணையையும் நிரப்பித் தமிழ்ப் பகுதிகளில் பாசனத்திற்கு வழி செய்தது. பின்னர் மின்சார உற்பத்திக்கும் இந்நீர் பயன்படுத்தப்பட்டது. அணையைக் கட்டிய பென்னிகுயிக் இன்றளவும் இப்பகுதி தமிழ் விவசாயிகளால் நன்றியுடன் நினைவுகூறப்படுகிறார். மதுரையிலுள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தில் அவருக்கொரு சிலையும் உண்டு. அணையை கட்டிக் கொண்டிருந்தபோது ஏற்பட்டப் பணப் பற்றாக் குறையைச் சரிகட்ட தனது மனைவியின் நகைகளை அவர் விற்றார் எனவும் சொல்லப்படுகிறது.
தரை மட்டத்திலிருந்து 881 அடி உயரத்தில் அமைந்துள்ள இவ் அணை 176 அடி உயரம் உடையது. 22.5 டி.எம்.சி நீர் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு இதன் மூலம் கிடைக்கிறது. அணை கேரளப் பகுதியில் அமைந்துள்ள போதிலும் அணையின் நிர்வாகம், அணையின் நீர்ப் பயன்பாடு எல்லாம் தமிழகத்திற்கே உரியது. இதற்கென திருவிதாங்கூர் அரசுக்குச் சென்னை மாகாண அரசு ஆண்டொன்றுக்கு ஏக்கருக்கு 5 ரூபாய் குத்தகை அளிக்க வேண்டும் என்பது ஒப்பந்தம். பிரிட்டிஷ் ஆட்சி போனபின் (1947), ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கப் பலமுறை (1950, 58, 69) பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, இறுதியில் அச்சுதமேனன் கேரள முதலமைச்சராக இருந்தபோது (1970) ஏக்கர் ஒன்றிற்குக் குத்தகைத் தொகை ரூ 30ம், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு கிலோவாட்டுக்கு ரூ12ம் கொடுக்க வேண்டுமென ஒப்பந்தம் திருத்தப்பட்டது. இதன்படி தற்போது ஆண்டொன்றுக்கு 2.5 லட்ச ரூபாய் நில வாடகையாகவும், 7.5 லட்ச ரூபாய் மின்சார உற்பத்திக்காகவும் தமிழக அரசு கேரளத்திற்குக் கொடுத்து வருகிறது. எனினும் இந்த ஒப்பந்தம் கேரள அரசுக்குத் திருப்தியளிக்கவில்லை. வழக்குகள் நிலுவையிலுள்ளன.

999 ஆண்டு கால ஒப்பந்தம், தங்கள் ஆற்று நீரின் பயன்பாட்டைத் தமிழக மக்கள் அனுபவிப்பது ஆகியவற்றைக் கேரள அரசியல்வாதிகளின் மனம் ஏற்க மறுத்தது. இதை வைத்து ஒரு உணர்ச்சி அரசியலொன்று அங்கே கட்டமைக்கப் பட்டது. இதற்கிடையில் முல்லைப்பெரியாறு அணைக்குக் கீழாக 50 கி.மீ தொலைவில் மூன்று மடங்கு அதிகக் கொள்ளளவு உள்ள இடுக்கி அணையைக் கேரள அரசு கட்டியது. 1979ல் மோர்வி அணை உடைந்து சேதம் ஏற்படுத்தியதை ஒட்டி காலத்தால் பழசாகிப் போனதும், நீர்க்கசிவு உடையதும், ரொம்பப் பழைய தொழில்நுட்பத்தால் கட்டப்பட்டதும், புவி அதிர்ச்சிப் பகுதியில் அமைந்துள்ளதுமான முல்லைப் பெரியாறு அணை உடையும் பட்சத்தில் இடுக்கி, ஆலப்புழை, பந்தனந்திட்டாப் பகுதிகளில் வாழும் சுமார் 40 இலட்சம் மக்கள் அழிவது உறுதி எனப் பீதியூட்டிப் பிரச்சாரங்கள் செய்யப் பட்டன.  பெரியாறு அணை உடைந்தால் கீழே உள்ள இடுக்கி உட்பட மேலும் இரண்டு அணைகள் சேர்ந்து உடைந்து சேதத்தை அதிகமாக்கும் எனவும் அரிய உயிரினங்களும் இயற்கை வளங்களும் நிறைந்த பெரியாறு வனப் பகுதியும் அழியும் எனவும் பிரச்சாரம் செய்யப்பட்டது.
அணை உறுதியாக உள்ளது. அது உடைவதற்கு வாய்ப்பே கிடையாது. உடைந்தாலும் மும்மடங்கு அதிகக் கொள்ளளவு உள்ள இடுக்கி அணை நீர்ப்பெருக்கைத் தாங்கிக் கொள்ளும். முற்றிலும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கக்கூடிய புதிய அணை ஒன்றைக் கட்டுவதற்கான சதி முயற்சியாகவே கேரள அரசும் அரசியல் கட்சிகளும் இப்பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர் என்பது தமிழகத் தரப்பில் பேசப்படும் நியாயம். முல்லைப் பெரியாறு அணையைச் செயலிழக்கச் செய்தாலோ நீர் நிர்வாகத்தைக் கேரள அரசு வைத்துக்கொண்டாலோ அது மிகப்பெரிய இழப்பாக முடியும் என்கிற நியாயமான  அச்சம் தமிழக விவசாயிகளைச் சூழ்ந்தது.

கேரள அரசு, அணைப் பாதுகாப்பு குறித்து எழுப்பிய பிரச்சினையை ஒட்டி மத்திய நீர் ஆணையம், அணையிலுள்ள நீரின் அளவை 142.2 அடியிலிருந்து 136 அடியாகக் குறைத்துக் கொள்ள ஆணையிட்டது. தமிழக அரசு பணிந்த போதும் அணையின் உயரத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் எனவும் அதன்மூலம் மேலும் 11.25 டி.எம்.சி நீர் தமிழகத்திர்குக் கிடைப்பதைத் தடுக்கக்கூடாது எனவும் கோரிக்கை வைத்தது. உச்ச நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. குறைந்த பட்சம்  145 அடி உயரம் வரையேனும் நீரைத் தேக்கி வைக்க அனுமதி வேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது. கேரள அரசு இதை ஏற்காததைத் தொடர்ந்து அணைப் பாதுகாப்பைக் கண்டறிய உச்ச நீதிமன்றம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது.  தமிழக, கேரள அரசுகளின் சார்பாக ஒவ்வொரு பிரதிநிதிகள் அக்குழுவில் இருந்தனர்.
அணை பாதுகாப்பாக உள்ளது எனவும், 142 அடி வரை நீரைத் தேக்கி வைக்கலாம் எனவும் நிபுணர் குழு அளித்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவ்வாறே ஆணையிட்டது. அணையில் தேவையான பராமரிப்புப் பணிகளச் செய்யவும் தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது. நீதிமன்ற ஆணையை ஏற்க மறுத்த கேரள அரசு சட்டமன்றத்தைக் கூட்டி சென்ற மார்ச் 2006ல் அணைப் பாதுகாப்புச் சட்டம் ஒன்றை இயற்றியது. அதன்படி 136 அடிக்கு மேல் தமிழக அரசு நீர்மட்டத்தை உயர்த்த அனுமதி மறுக்கப்பட்டது. சேதம் விளைவிக்க்க் கூடிய அணை தொடர்பான நடவடிக்கைகள் எதுவாயினும் கேரள அரசின் ஒப்புதலில்லாமல் மேற்கொள்ளக் கூடாது எனவும் அச்சட்டம் வரையறுத்துள்ளது. அணையில் பராமரிப்புப் பணிகள் செய்வதற்கும் கெரளத் தரப்பில் இடையூறுகள் செய்யப்படுகின்றன..

உச்ச நீதி மன்றத் தீர்ப்பிற்கு எதிராகக் கேரள அரசு இயற்றியுள்ள இச்சட்டம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்க வேண்டுமென தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தை அணுகியது. அப்படியான ஒரு ஆணையை இட மறுத்த நீதிமன்றம், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் மீண்டும் ஒரு குழுவை நியமித்தது. இரு அரசுகளும் ஒவ்வொரு உறுப்பினரை இக்குழுவில் நியமித்துக் கொல்ளலாம் என்பதைத் தமிழக அரசு புறக்கணித்துள்ளது. மேலும் ஒரு குழு எதற்கு என்கிற நியாயமான கேள்வியைத் அது எழுப்புகிறது. கேரள அரசோ ஓய்வு பெற்ற நீதிபதி கே.டிதாமஸை இகுழுவிற்கு நியமித்துள்ளது.
நில அதிர்வுப் பீதியைக் கேரள அரசு எழுப்பியதையொட்டி தமிழக அரசு அணைப் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய அமைத்த  நால்வர் குழு இந்தியத் தர நிர்ணயங்களின்படி அணை பாதுகாப்பாக உள்ளதாக அறிவித்தது. இப்பகுதியில் நில அதிர்வு மூன்றாம் அளவு நிலைக்குள்ளேயே உள்ளது என்பதால் ஆபத்துக்கு வாய்ப்பில்லை என்பதும் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
எனினும் கேரள அரசு ஐ.ஐ.டி நிறுவனத்தை ஆய்வு செய்யச் சொல்லி அது அளித்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.  அணை நில அதிர்வைத் தாங்காது என்பது அவ்வறிக்கையின் சாரம். இந் நிறுவனம் நீதிமன்றத்திற்கு வந்து அதன் கூற்றை நிரூபிக்கவில்லை என முன்னாள் முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டினார்.

இந்தப் பின்னணியில்தான் இன்றைய விரும்பத்தகாத நிகழ்வுகள் நிறைவேறியுள்ளன. இப்படியான ஒரு உணர்ச்சி அரசியல் உருவாகியுள்ளது மிகவும் கவலையளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. பீதியையும், உணர்ச்சியையும் தூண்டும் வகையில்  பேசுவதை இரு தரப்பு அரசியல்வாதிகளும், ஊடகங்களும் தவிர்க்க வேண்டும். கூடங்குளப் பிரச்சினையில் இரு மாநில மக்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ஒற்றுமையைக் குலைக்கும் நோக்குடன் இந்திய அரசு செயல்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளதை இரு தரப்பினரும் பொறுப்புடன் சிந்திக்க வேண்டிய தருணம் இது. தமிழக விவசாயிகளின் அச்சம், அணைப் பாதுக்காப்பு குறித்த கேரள மக்களின் கவலை இரண்டிலுமுள்ள நியாயங்களை இரு தரப்பும் பொறுப்புடன் யோசிக்க வேண்டும். வன்முறைகளைக் கைவிடுமாறு இரு தரப்பினரும் கூட்டறிக்கைகளை விட வேண்டும். உச்ச நீதி மன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, அதன்பின் கேரள அரசு தனது கவலைகள் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டும். தேவையானால் தமிழகப் பகுதியில் மேலும் இரு சிற்றணைகளைக் கட்டி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் கட்டுக்குள் வைக்கும் திட்டத்தையும் யோசிக்க வேண்டும். இதுபோன்ற பிரச்சினைகளில் பாரம்பரிய உரிமைகளை மதித்தலும், பேச்சுவார்த்தைகளும் மட்டுமே பலனளிக்கும். இனவாத உணர்ச்சி அரசியல், பிரச்சினைகளை மிகைப்படுத்துவதற்கே இட்டுச் செல்லும். ஆனால் அத்தகைய கருத்துக்களே இங்கு முகநூல் முதலான இணயத் தளங்களிலும் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. ‘மலையாள மனோபாவம்” என்றெல்லாம் வெறுப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவது கவலை அளிக்கிறது. இது போன்ற பிரச்சாரங்கள் அங்கும் மேற்கொள்ளப்படுகின்றன. முகநூல் பக்கங்களில் அறிவார்ந்த கட்டுரைகள் எழுதுகிற பல நண்பர்கள் காட்டும் மவுனமும் கவலை அளிக்கிறது.

இன் நிலையில் நேற்று (டிச 9) புதுச்சேரியில் தோழர் சுகுமாரன் ஏற்பாடு செய்திருந்த மனித உரிமைப் பயிற்சி முகாம் ஒன்றில் கலந்து கொண்ட தோழர் கல்யாணி ( பேரா. கல்விமணி ) அவர்கள் தமிழகத்தில் மலையாளிகளின் கடைகள் தாக்கப்படுவது குறித்தும், அங்கே தமிழர்கள் கடைகள் தாக்கப்படுவது குறித்தும் கண்டன அறிக்கை ஒன்றை நாம் வெளியிட வேண்டும் என்று் கருத்துத் தெரிவித்தது ஆறுதலாக இருந்தது.

Sunday, December 11, 2011

மற்றவை - நான்கு விசயங்கள்

                      ** நான்கு  விசயங்கள்  **

கனிமொழி ஜாமீன்:ற்கனவே எனது பதிவில்  சொல்லியிருந்தது போலவே கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்து விட்டது. எதோ விடுதலை கிடைத்துவிட்டது போல அவரது கட்சியினர் செய்த வரவேற்புக்கு அளவேயில்லை. விமான நிலையத்திலிருந்து வீடு வரை கனிமொழிக்கு அப்படி ஒரு வரவேற்பு அலப்பறைகள் செய்திருந்தனர். (அவர் ஏதோ நாட்டிற்கு நன்மை செய்தது போல!!!) மக்களின் பணத்தை கொள்ளையடித்து விட்டு, இப்போது ஜாமீனில் வெளி வந்த கனிமொழி தனது பேட்டியில் இனிமேல் தான் அதிரடி அரசியல் செய்யப்போவதாக சொல்லியிருந்தார்.ஆறு மாத சிறை வாழ்க்கையால், அவரது தாயார் , தன் மகளுக்கு கட்சியில் பெரிய பதவி தர வேண்டும் என்று பிடிவாதம் செய்கிறார். அதற்கு கலைஞர் குடும்பத்தில் உள்ள சிலர் எதிர்த்து வருகின்றனர். எனக்கென்னவோ கனிமொழி பேசாமல்  தனது இலக்கிய வாழ்க்கைக்கு செல்வது நல்லது என்று நினைக்கிறேன். பார்க்கலாம்... அவரின் அடுத்த மூவ்மெண்டை..

முல்லைப் பெரியாறு அணை:


பூதாகரமான பிரச்சனை ஆகிவிட்டது முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை. கேரளா அரசு தனது சைடில் சில விசயங்களை மக்களின் முன் வைத்து  புதிய அணை கட்ட முயற்சிக்கிறது. முல்லைப் பெரியாறு அணை ஆபத்தான கட்டத்தில் இருக்கிறதாகவும், அது உடைந்தால் , அணையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு, சுனாமியை விட பேராபத்து ஏற்படும். அதனால் இலட்சணக்கணக்கில் உயிர்சேதம், பொருட்சேதம் ஏற்படும் என்று பீதியைக் கிளப்பி விடுகின்றது. அது உடைந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைதான் "டேம்999" என்ற படம் வேறு பயங்கரமாகக் காட்டியிருப்பதாக சொல்லுகின்றனர். ஒரு வேளை இப்படியும் நடந்து விடுமோ என்ற அச்சத்தில்தான் கேரள மக்கள் உள்ளனர். இது இப்படி இருக்கையில் தமிழக அரசு பொதுப்பணித்துறை அதிகாரிகள், அணையைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்து அரசுக்கு ரிப்போர்ட் தந்திருக்கின்றனர். அதில் 1886ம் ஆண்டு இந்த அணையை சுண்ணாம்பு மற்றும் சிமெண்டு கொண்டு கட்டியிருப்பதாகவும், இது ஒரு புவியீர்ப்பு விசையினால் செயல்படும் அணையென்றும் சொல்லியிருக்கின்றனர். மேலும் அணையின் பாதுகாப்பிற்காக குறுகியகால பாதுகாப்பு திட்டம் மற்றும் நீண்ட கால பாதுகாப்பு திட்டம் என்ற  வகையில் அணையைச் சுற்றி பாதுகாப்பிற்காக என்னென்ன செய்திருக்கின்றனர் என்றெல்லாம் தெளிவாக சொல்லியிருக்கின்றனர். தேவையான பாதுகாப்பில்தான் அணை உள்ளது, அச்சம் கொள்ளத் தேவையில்லை என்ற முடிவையும் அதிகாரிகள் சொல்லியிருக்கின்றனர்.

எப்படியாவது இடுக்கி அணையின் தண்ணீர் வரத்தைப் பெருக்கி கொண்டு, தனது மாநிலத்திற்கு பயன்தரும் வகையில் கேரள அரசு செயல்படுவதாக சுற்றியுள்ள மக்கள் அம்மாநில அரசை குறை சொல்கின்றனர். புதிய அணை கட்டினால் நிச்சயம் கம்பம், தேனி மற்றும் பெரியாறு அணையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தேவையான தண்ணீரை கேரள அரசு தராது எனவும் இதனால் வேளாண்மையை நம்பியுள்ள பல இலட்சம் குடும்பங்கள் வறுமை நிலைக்குச் செல்ல வேண்டிவரும் என்று அப்பகுதி மக்கள் எண்ணிக் கொண்டு தங்கள் நலத்திற்காக போராடிக் கொண்டு இருக்கின்றனர். மத்திய அரசு இதுநாள் வரை வேடிக்கைப் பார்த்து கொண்டுதான் இருக்கின்றது. மத்திய அரசு தலையிட்டு இப்பிரச்சனையை தீர்த்து வைத்தால் இரு மாநில சகோதர சகோதரிகளுக்கும் இருக்கும் நட்புறவிற்கு பங்கம் ஏற்படாது. இந்தப் போராட்டமும் ஒரு முடிவுக்கு வரும்.

மீண்டும் உண்ணாவிரதம்-அன்னா:

வயசான இந்தப் பெரியவர் சும்மாவே இருக்க மாட்டேங்கிறார். ஏதாவது குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் என்று காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள் நினைத்துக் கொண்டு இருப்பர். லோக்பால் மசோதாவுக்காக நீண்ட காலமாக போராடி வரும் அன்னா ஹசாரேவிற்கு காங்கிரஸ் அரசு இன்னமும் பூச்சாண்டி காட்டிக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு வேளை அன்னாவுடன் அனைத்து மக்களும் சேர்ந்து போராடினால் மசோதா தாக்கல் செய்யப்படலாம். இனி வரும் தேர்தல் காலத்தில் காங்கிரஸுக்கு நிச்சயம் பேரிடிகள் காத்துக்கொண்டிருக்கின்றன. மக்களின் நன்மைக்கு சில விசயங்கள் செய்தால் அவர்களுக்கு நல்லது.

காமெடி பேட்டி:

ஒஸ்தி படத்திற்கான சன் டிவியில் நிகழ்ந்த நேற்றைய பேட்டியைக் காண சந்தர்ப்பம் கிடைத்தது. படத்தில் வரும் காட்சிகளைப் போலவே பேட்டியின் போது அலப்பறைகள் செய்தனர். அதிலும் தரணியின் அலப்பறைக்கு அளவேயில்லை. போதாக்குறைக்கு டி.ராஜேந்தரையும் பேட்டிக்கு அழைத்திருந்தனர். ஏண்டா அழைத்தோம் என்று தரணி நினைக்கும் அளவிற்கு டி.ஆரின். தம்பட்டம் தாண்டவாமாடியது. எது எப்படியோ , டி.ஆரின் தாண்டவத்தைப் பார்த்து நிகழ்ச்சி முடியும் வரை வந்த சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை. சூப்பர் காமெடி.

*******************************************************

Saturday, December 10, 2011

மற்றவை: ஒஸ்தி - விமர்சனம்

             **  ஒஸ்தி - விமர்சனம்  **


விண்ணைத்தாண்டி வருவாயாவில் அலட்டல் இல்லாத நடிப்பில் கவர்ந்த STR என்ற சிம்பு, வானம் படத்திலும் அதே போல் அமைதியாக நடித்ததால் நல்ல பெயரை அவருக்கு பெற்று தந்தது. இந்தப் படம் ஒஸ்தியும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தருமா?தொடர்ந்து படியுங்கள்.

ஹிந்தியின் தபாங்க் படத்தை ரீமேக் ஆக்கியிருக்கிறார்கள். திருநெல்வேலியில் இருக்கும் காட்டுப்பாக்கம் என்ற ஊரின் மாஸ் இன்ஸ்பெக்டர்தான் சிம்பு. கான்ஸ்டபிள்களுக்கும்,கலெக்டர்,கமிஷ்னர் மற்றும் ரவுடிகளுக்கும் சிம்புதான் மாஸ். சிம்புவைக் கண்டாலே பயம். அப்படி இருக்கையில் தேர்தலில் ஜெயிப்பதற்காக மக்களுக்கு கொடுக்கவிருக்கும் அரசியல்வாதியான வில்லன் சோனுவின் பணத்தை சிம்பு கைப்பற்றிக் கொள்கிறார். அதனால் சோனுவுக்கும் சிம்புவுக்கும் பகை. இதில் யார் ஜெயித்தார்கள்?வெண் திரையில் பார்க்க..!


சிம்புவின் நடிப்பு:

நெல்லை ஸ்லாங்,பாடி லாங்குவேஜ், டயலாக் மாடுலேஷன் என நிறைய வித்தியாசம் காட்டியிருக்கிறார் சிம்பு. க்ளைமாக்சில் சிக்ஸ் பேக் வேறு காட்ட முயன்றிருக்கிறார். இத்தனை உழைப்புக்கள் இருந்தும் மீசையில்லாத அவரது முகத்தைப் பார்க்கும் போது சின்ன பையன் போலத்தான் நினைக்கத் தோன்றுகிறது. அதனால் சிம்பு செய்யும் அத்தனை மாஸ் வேலைகள், பன்ச் டயலாக் போன்றவற்றை ஏற்க முடியவில்லை. அதுதான் படத்தின் பெரிய மைனஸ். மெச்சூர்டான ரோல்களை செய்வதற்க்கு இன்னும் சிறிது வருடங்கள்  பொறுத்திருந்தால் சிம்புவுக்கு நல்லது. மற்றபடி சிம்பு, ரிச்சா தொடர்பான காட்சிகள் இதம்.அவ்வப்போது கான்ஸ்டபிள் சந்தானத்தின் காமெடியால் முதல் பாதி படம் கொஞ்சம் நன்றாகப் போகிறது. பிற்பாதியில் சிவாஜி த பாஸ், ஒஸ்தி த மாஸ் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு சிம்பு அலப்பறை செய்வதால் வேறு வழியில்லாமல் படம் முடியும் வரை பார்க்கத்தான் வேண்டும்.


ரிச்சா நடிப்பு:
"மயக்கம் என்ன"-வில் அருமையான நடிப்பில் கவர்ந்த ரிச்சாவுக்கு இந்தப் படத்தில் நடிப்பதற்கு காட்சிகளே இல்லை. டயலாக்ஸ் ரொம்பக் குறைவு. ஒட்டியானம் அணிந்து கொண்டு இடையையும்,  பரந்த முதுகையும் காட்டியபடி வந்து சிம்புவை கவர்கிறார். நம்மையும் கிளாமர் கெட்டப்பில் கவர்கிறார். திருமணத்திற்கு  அப்புறம் வரும் ஒரு காட்சியில் சிம்புவிடம் "ஒஸ்தி வேலன்னா யாரு..உங்க பேரு காவல்துறைதானே?" என்று கேட்கும் போது திடீர் சிரிப்பை வரவழைக்கிறார்.


இயக்குனர் திறமை:
படத்தை நெல்லை களத்திற்கு கொண்டு சென்றதற்கு இயக்குனரைப் பாராட்டலாம். படத்தில் எல்லா வசனங்களையும் சிம்புவுக்கு கொடுத்துவிட்டாரா? சிம்பு வரும் அனைத்து காட்சிகளிலும் அவர் மட்டும்தான் வசன மழை பொழிகிறார். கொஞ்சம் குறைத்திருக்கலாம். தாங்க முடியவில்லை. மற்றபடி  தில், தூள், கில்லி படங்களில் வரும் விறு விறுப்பு இதில் மிஸ்ஸிங்க்.

இசை:
தமனின் இசையில் "நெடுவாழி" பாடலும் பாடலுக்கேற்ற நடன அமைப்பும் நன்றாக உள்ளது. சிம்புவின் நடனம் சிறப்பாக உள்ளது. பிண்ணனி இசையில்
படம் முழுக்க ஹே..ஏய்..ஒஸ்தி மாமு என்று சொல்லிக் கொண்டு இரைச்சலோடு அமைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவு ஓ.கே. சந்தானத்தின் காமெடி சில காட்சிகள் ஒ.கே.மற்றவை சுமார். வி.டி.வி. கணேஷ் நடிப்பு சுமார். சண்டைக் காட்சிகள் மசாலா பிரியர்களுக்குப் பிடிக்கும். வில்லன் , நாசர், ரேவதி நடிப்பு ஒ.கே. ஜித்தன் ரமேஷ் பாவம். சரண்யா மோகன் ஓரிரு காட்சிகளில் வந்து போகிறார்.

ஒஸ்தி - ஓவர் அலப்பறையில் நாஸ்தியான படம்.

*******************************************************