Tuesday, July 05, 2011

எனது படைப்புகள் -10 : கடவுள் இருக்கிறாரா?


* கடவுள் இருக்கிறாரா? - அத்தியாயம் 1 *










ப்பானில் இருக்கும், நண்பன் சுரேஷ் கிரிம் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். கடவுள் இருக்கிறாரா? இல்லையா?. இந்த கேள்விக்கு அவரின் மனதிற்குள்ளும் நிச்சயம் ஒரு பதில் இருக்கும். அவரின் மனதில் இருப்பது ( இருக்கிறார்/இல்லை/குழப்பமாக இருக்கிறது ) இந்த மூன்றில் ஒன்றுதான் என நான் நினைக்கிறேன். ஒரு வேளை இருக்கிறார் என்று நினைத்திருந்தால் , என்னிடம் இந்தக் கேள்வியை கேட்க காரணம் என்ன? ஒரு வேளை கடவுள் பற்றிய விசயத்தில் குழப்பமா? எது எப்படியோ, அவர் கேட்ட இந்தக் கேள்வி என்னை பலவாறு யோசிக்க வைத்தது. கடவுளைப் பற்றிய முடிவை கூறும் அளவிற்கு நான் ஒரு பெரிய அப்பா டக்கர் கிடையாது.(அப்பா டக்கர் பற்றி தெரிந்து கொள்ள எனது முந்தைய பதிவு Link முதல் முத்தம்  பார்க்கவும்).

பட் அவரின் கேள்வி என்னை நிறைய யோசிக்க வைத்தது. அப்படி நான் யோசித்த பின்பு ஒரு முடிவுக்கு வந்தேன். " பிரபலமான எழுத்தாளர்களும் , ஆன்மீகவாதிகளும், அறிவியலறிஞர்களும், பிரபலமான மனிதர்களும் கடவுளைப் பற்றி எப்படியெல்லாம் எழுதியிருக்கிறார்கள் என்று பார்ப்போம். அப்புறம் முடிவு எடுப்போம் ", என்று நினைத்துக் கொண்டு அவர்கள் எழுதிய புத்தகங்கள் , கட்டுரைகளை படிக்க ஆரம்பித்து இருக்கிறேன். படித்துக் கொண்டு இருக்கும் போது எனக்குள் தோன்றிய எண்ணங்களை கட்டுரையாக எழுதுகிறேன். படித்து வாருங்கள். பின்பு முடிவெடுக்கலாம்.

இனி...

உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள் நிச்சயம் " கடவுள் இருக்கிறாரா? " என்று தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் தனக்குள் கேட்டுக் கொண்டிருப்பர். தான் நினைத்தது நடக்கும் போது கடவுளின் மீது நம்பிக்கை கொள்வதும், அப்படி நடக்காமல் போனால் அந்த நம்பிக்கையைத் தளர்த்துவதும் பெரும்பான்மை மனிதர்கள் செய்பவை. இது மனரீதியாக பார்த்தால் இயல்பான விசயம் தான் என்று எண்ணத் தோணும். உதாரணமாக நமக்கு மிகவும் பிடித்தமானவர்கள் நாம் நினைத்தவற்றை செய்யும் போது அவர்களின் மேல் மிகுந்த அன்பு கொள்வதும், நாம் நினைத்தவற்றை செய்யாமல் போனால் அவர்களின் மேல் கோபம் கொள்வதும் வழக்கமாக நிகழ்வது. இது எப்படி இயல்பான விசயமாக இருக்கிறதோ. கடவுளைப் பற்றிய அன்பும், கோபமும் அப்படித்தான் என்று நான் நினைக்கிறேன். கடவுள் என்பவர் நிச்சயம் நமக்குப் பிடித்தமானவராகத்தான் இருப்பார் அதனால்தான் அவரின் மேல் அன்பு கொள்வதும், வெறுப்பதும் நிகழ்கிறது.

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, நடந்த நிகழ்வுகடவுள் தொடர்பான ஒரு விசயம். செமஸ்டர் விடுமுறை நாட்களில் நான் எனது சொந்த ஊரான சின்னதாராபுரத்திற்கு வருவேன். அங்கு எனது வீட்டிற்கு அருகில் குடியிருக்கும் ஒரு குடும்பத்தினர் கிறிஸ்தவர்கள். அந்தக் குடும்பத்தின் தலைவர் எங்கள் ஊரில் உள்ள ஒரு அரசு ஆசிரிய பயிற்சி பள்ளி + கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக இருந்தார். அவரின் மனைவி குடும்பத் தலைவி. அவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள். மகன் மூத்தவர். எனது நெருங்கிய நண்பன். எனவே அவர்களுக்கு நான் ஒரு செல்ல பிள்ளை.

அந்த நண்பனின் அப்பா என்னுடன் நிறைய விசயங்களைப் பற்றி விவாதிப்பார். நானும் என் கருத்துக்களை கூறுவேன். நண்பனின் அம்மா குடும்ப சம்பந்தமான விசயங்கள் நிறையவும், சமூக சம்பந்தமான விசயங்கள் கொஞ்சமும் என்னிடம் விவாதிப்பார். ஜீசஸ் மேல் மிகுந்த அன்பு கொண்டவர்.

நண்பனின் அம்மா , ஜீசஸ்-ன் பெயரில் உண்டியலில் பணம் சேமிக்கும் பழக்கம் இருக்கிறது. எக்காரணத்திலும் அந்த பணத்தை தன் குடும்ப செலவுக்கு எடுக்க மாட்டார். வருட முடிவில் அவர் வேளாங்கண்ணிக்கு சென்று ஜீசஸை வணங்கி சேமித்த பணத்தை காணிக்கையாக அளிப்பார். அந்த வருட முடிவிலும் , வேளாங்கண்ணிக்கு பயணம் செய்ய முடிவெடுத்தனர். என்னையும் அழைத்தனர். நான் இந்து-வாக இருப்பினும், " எம்மதமும் எனக்கு சம்மதமே " என்ற எண்ணம் கொண்டவனாக இருந்ததால் நானும் அவர்களுடன் பயணதிற்கு சம்மதித்தேன்.


நிறைவான பஸ் பயணம். வழக்கம் போல நான் என் நண்பனிடம் பல கதைகள் பேசிக் கொண்டு பயணம் செய்தேன். இடையில் அவனின் அப்பாவிடம் சில விசயங்களை விவாதித்தேன். வேளாங்கண்ணிக்குச் அதிகாலை சென்றோம். முதன் முதலில் அப்போதுதான் வேளாங்கண்ணி எனக்கு அறிமுகம்.


காலையில் குளித்து முடித்து காலை உணவை முடித்து விட்டு, எல்லோரும் வேளாங்கண்ணி மாதாவை தரிசிக்க சென்றோம். அன்றைய தினத்தில் கூட்டம் அதிகமில்லை. வெளியிலும் சரி. உள்ளேயும் சரி. நான் அந்த சர்ச்சை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன். பின்பு அனைவரும் சர்ச்சின் உள்ளே சென்று அந்த பெரிய ஹாலின் முன் பக்கம் சென்றோம். முன் புறம் ஜீசஸ்-ன் பெரிய உருவ சிலை  போல ஒன்று சுவற்றில் பதிக்கப் பட்டிருந்தது. அந்த சிலையின் முன் புறம் சிறிது தூரம் தள்ளி  ஏராளமான மெழுகுவர்த்திகள் வித விதமான கலரில் எரிந்து கொண்டிருந்தன. மக்கள் தங்கள் மனதில் நினைத்ததை வேண்டிக் கொண்டு ஆளுக்கொரு மெழுகு வர்த்தியை அங்கு பற்ற வைத்து வணங்கிக் கொண்டிருந்தனர்.

அந்த இடத்தில் மட்டும் கொஞ்சம் கூட்டம் இருந்தது. நாங்கள் அனைவரும் ஆளுக்கொரு மெழுகுவர்த்தியை பற்ற வைத்துக் கொண்டு கண் மூடி பிரார்த்தனை செய்தோம். கையில் வைத்த மெழுகுவர்த்தியை அங்கு வைக்கவேண்டிய இடத்தில் வைத்து விட்டு, முன் புறத்தை விட்டு நகர ஆரம்பித்தோம். அப்போது திடீரென்று நண்பனின் அம்மா அழ ஆரம்பித்தார். தோளில் மாட்டியிருந்த அவரின் கைப்பை அறுக்கப் பட்டிருந்தது. கையில் மெழுகுவர்த்தியை வைத்துக் கொண்டு கண் மூடி பிரார்த்தனை செய்யும் போதுதான் யாரோ கைப்பையை அறுத்திருந்தார்கள் என்று அப்போதுதான் தெரிய வந்தது. அந்தக் கைப்பையில்தான் நாங்கள் தங்கியிருந்த ரூமின் சாவி + குடியிருந்த வீட்டின் சாவி + பீரோ சாவி + மொத்தப் பணமும் இருந்ததுஇனி வீடு திரும்பக் கூட கையில் பணம் இல்லை. ஒவ்வொருவரும் தங்களின் வேண்டுதலை ஜீசஸிடம் பக்தியோடு பிரார்த்தனை செய்த அந்தக் குடும்பத்தினரின் கவலை தோய்ந்த முகத்தை அப்போது நான் பார்க்கும் போது மனம் நிறைய கவலைப் பட்டது.

அழகாக காட்சியளித்துக் கொண்டிருந்த ஜீசஸையும், மேரி மாதாவையும் அப்போது நான் பார்த்த போது, மனம் வேரொன்றை நினைத்தது.

உண்மையிலேயே கடவுள் இருக்கிறாரா? இல்லையா?...

பயணம் தொடரும்......

9 comments:

இராஜராஜேஸ்வரி said...

அழகாக காட்சியளித்துக் கொண்டிருந்த ஜீசஸையும், மேரி மாதாவையும் அப்போது நான் பார்த்த போது, மனம் வேரொன்றை நினைத்தது.

உண்மையிலேயே கடவுள் இருக்கிறாரா? இல்லையா?...//

எதிர்பார்க்கிறோம் திருப்பத்தை..

மாலதி said...

கடவுள் பற்றிய செய்திகளும் மருதளிப்புகளும் இருக்கத்தான் செய்கிறன இருப்பினும் கடவுள் கொள்கை என்னணம் எப்போது தோற்றம் கொண்டது என வரலாற்றை ஆய்வு செய்தல் தேவையாகிறது . உபரி வந்தபோது மனிதன் மனிதனை அடிமைபடுத்த எண்ணினான் அடிமைபடுத்த்பட்ட மனிதன் காலம் காலமாக அடிமியில் கிடக்க வேண்டும் என்பதற்காக கடவுள் களும் மெய்மங்களும்( தத்துவம் ) தோற்றம் கொண்டது . ஆக கடவுள் கொள்கைகள் எல்லாமே போலித்தனமே ....

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் நண்பரே,

தேவையான ஆக்கம் தான்..
அடியவனும் இதே தலைப்பில் எழுதவிருக்கிறேன்.

காரணம் இந்த வாரத்தில் நான் சென்று வாசித்த எல்லா தளங்களும் கடவுள் மறுப்பை பறை சாற்றியிருந்தன..

கடவுளை யார் இங்கு கடவுளாக பார்க்கிறார்கள் ?
என்ற எண்ணம் தோன்றியது..

எனவே தாங்கள் சொல்வது போல கடவுள் குறித்து
விரைவில் ஒரு தொடர் எழுதப் போகிறேன்..

கடவுள் உண்டு..
அவனன்றி அணுவும் அசையாது

என்பதில் தீவிர நம்பிக்கையுடையவன்..

வாய்ப்பிருக்குமபோது எமது தளத்திற்கும் வருகை தந்து வாசியுங்கள்..

நன்றி.

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

RAMA RAVI (RAMVI) said...

மிகவும் சுவாரசியமாக ஆரம்பித்து இருக்கிரீர்கள்.தொடருங்கள்....

தமிழ் உதயம் said...

நான் கடவுளை பற்றி நினைப்பதில்லை. அதனால் கடவுள் இருப்பது குறித்து, இல்லாதது குறித்து எந்த கேள்வியும் எழ வில்லை.

Yaathoramani.blogspot.com said...

சுவாரஸ்யமாக ஆரம்பித்து இருக்கிறீர்கள்
சொல்லிச் செல்லும் விதமும் அருமை
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்

ஹேமா said...

குணா...தொடர்ந்து சொல்லுங்கள்.பார்க்கலாம் கடவுளை !

hamaragana said...

அன்புடன் வணக்கம் நண்பரே.
தொடருங்கள்?? கடைசியல் கடவுள் உண்டா? இல்லையா ?
சிவ சி ம ஜ போன்றவர்கள் இருக்கிறார்கள் பதில் சொல்லுவார்கள்..

'பசி'பரமசிவம் said...

தங்களின் இந்த முதல் பதிவு, நடுநிலையுடனும் தெளிந்த சிந்தனையுடனும் இனி எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
தன்னம்பிக்கை குன்றாமல் எழுதுங்கள்.
வாழ்த்துகள்.

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...