Monday, August 15, 2011

தெரிஞ்சுக்கோங்க - சிந்தனை செய் மனமே

             *  சிந்தனை செய் மனமே *

காங்கிரஸின் அடக்குமுறை அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்திற்கு டெல்லி போலீசார், கடுமையான 22 நிபந்தனைகளை விதித்திருக்கின்றனர். அதில் 6 நிபந்தனைகளை அன்னா ஹசாரேவின் தரப்பு ஏற்கவில்லை. 5000 பேருக்கு மேல் உண்ணாவிரதம்  இருக்கும் இடத்தில் கூடக் கூடாது. 3 நாட்கள் மட்டுமே உண்ணாவிரதம்  நடத்த வேண்டும் இரவு 9 மணிக்கு மேல் ஒலி பெருக்கி பயன்படுத்தக் கூடாது. இது போன்ற நிபந்தனைகள் அந்த 6-ல் அடக்கம். டெல்லி போலிஸார் எல்லாம் ஏன் இப்படி செய்கிறார்கள்? யாருக்காக  அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போகிறார்? நமக்காகத்தானே.!.மக்களுக்காகத்தானே.!.
 

சராசரி மக்களில் ஒருவர்கள்தானே அவர்களும்;ஏன் இப்படி செய்கிறார்கள்? அது சரி எய்தவன் இருக்க அம்பை நோவானேன். வெள்ளையர்களிடம் வாங்கிய சுதந்திரம் இன்று அரசியல் அதிகார வர்க்கத்தினரின் கையில் தானே இருக்கிறது. ஆகஸ்டு மாதத்திற்குள் லோக் பால் மசோதாவை கொண்டு வர ஏற்பாடு செய்வோம் என்று சென்ற முறை பிரதமர் தரப்பில் கொடுத்த வாக்குறுதி இப்போது என்ன ஆயிற்று. இதுதான் ஜனநாயக ஆட்சிமுறையா? அடக்க அடக்க , தறிக் கெட்டு ஓடும் என்று காங்கிரஸ் கட்சிக்கு தெரியாதா? இந்த விசயத்தில் ஏன் பயப்படுகிறது?

தனது எண்ணத்தை காங்கிரஸ் கட்சி மாற்றிக் கொண்டு லோக்பால் மசோதாவினை நிறைவேற்றினால் மக்களிடத்தில் கொஞ்சம் நல்ல பேரை வாங்கலாம். இல்லையேல் தி.மு.க வின் நிலைதான்.

###################################################
              * கேட்டால் கிடைக்கும் *

ங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் பாக்கெட்டுக்குள் கைவிட்டு உங்கள் பணத்தை நூதன முறையில் அபகரிக்கும் அநியாயம் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதனை எதிர்த்து நம் உரிமையை நாம் கேட்டுப் பெறும் வகையில், வலைப்பூவின் சீனியர்கள் சுரேகா சுந்தர் மற்றும் கேபிள் சங்கர் என்று செல்லமாக அழைக்கப் படும் சங்கர் நாராயண் அவர்களும் ஃபேஸ் புக்கில் ஒரு கம்யூனிட்டியை ஆரம்பித்துள்ளார்கள். அதுதான் " கேட்டால் கிடைக்கும்" . நமது உரிமையை விட்டுக் கொடுக்காமல், நாம் கேட்டுப் பெறுவதுதான் இந்த கம்யூனிட்டியின் நோக்கம். அதன் ஃபேஸ் புக் லிங்க் இதுதான் .

http://www.facebook.com/groups/249616055063292/


தற்போது நிறைய நண்பர்கள் இதில் உறுப்பினர்களாகக் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர ஆரம்பித்துள்ளனர். உதாரணத்திற்கு சிலவற்றை இங்கு வெளியிட்டிருக்கிறேன்.

அனுபவம் 1:
 

 
சுரேகா சுந்தர்:

" திருச்சியிலிருந்து ஓசூர் செல்லவேண்டும். பெங்களூர் செல்லும் அரசுப்பேருந்தில் சென்று ஓசூர் டிக்கெட் கேட்டால், பெங்களூர் டிக்கெட் வாங்கிக்கொண்டால்தான் பயணிக்கமுடியும் என்றார் கண்டக்டர். பஸ்ஸுக்கு முன்னால் நின்றுகொண்டு, ஓசூர் டிக்கெட் கொடுப்பதுதான் சரி என்று வாதிட்டேன். (இரண்டுக்கும் 40 ரூபாய் வித்தியாசம்) முதலில் சண்டைபோட எத்தனித்தவரிடம், சரி நீங்கள் சொல்லுவதை அப்படியே உங்கள் பெயருடன் சொல்லுங்கள். எனக்கு ஒரு பேட்டி எடுத்த மகிழ்ச்சி கிடைக்கும் என்று பேச்சை பதிவு செய்ய ஆரம்பித்தேன். வாய் மூடிக்கொண்டு ,எங்களுக்கான 3 ஓசூர் டிக்கெட் கொடுத்தார். இதில் மிகக்கொடுமை, ஏற்கனவே 7 ஓசூர் டிக்கெட், பெங்களூர் செல்ல பணம் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருந்ததுதான்!! "

அனுபவம் 2:
 
 

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

" நம் வாழ்க்கையில் பல நேரங்களில், நாம் தெரிந்தே பலரை நம் பாக்கெட்டுக்குள் கைவிட்டு பணம் எடுத்துக் கொள்வதை  அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். அது ஒரு ரூபாயாகவோ, நாலணாவாகவோ சில சமயம் நம் வாழ்க்கையாகவோ கூட இருக்கலாம்.

சமீபத்தில் நானும் என் மகன்களும் பிட்ஸா சாப்பிடுவதற்கு டொமினோ பிஸ்ஸாவுக்கு போனோம். எங்களது ஆர்டருக்கு மொத்தமாய் 303.71 பைசா வரிகளோடு வர, அதை 303.75க்கு முழு இலக்கமாய் மாற்றி, பில் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர் கேட்டதோ 304 ரூபாய். நானும் அது தான் விலையோ என்று பில்லை பார்க்காமல் 304 ரூபாயை கொடுத்தேன். பின்னர் பில்லை பார்த்த போது ஏற்கனவே நான்கு பைசா ரவுண்ட் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இருபத்தியைந்து பைசாவை எடுத்துக் கொள்கிறார்களே என்று சுர்ரென கோவம் வந்தது.

“என்ன சார்.. அதிகமா வாங்கியிருக்கீங்க..?”

”சேஞ்ச் இல்லை சார்..”

“நீங்க மாத்தி வச்சிருக்க வேண்டியதுதானே..?”

“நாலனாதானே சார்..”

“சார்.. உங்களுக்கு ஒரு நாலணா.. அது போல ஐம்பது பேரோட நாலணா சேர்ந்தா எவ்வளவு ஆகும் தெரியுமா..?”

சிறிது நேரம் ஏதும் பேசாமல் அமைதியாய் இருந்துவிட்டு.. “நாலணாதானே சார்.. ஒரு ரூபாயா தர்றேன் வாங்கிக்கங்க.” என்றான் ஒரு விதமான ஏளனத்தோடு. எதோ நமக்கு அவன் பிச்சை போடுவதை போல,  நான் கொஞ்சம் கூட வெட்கபடவில்லை. என்னிடமிருந்து என் பணத்தை மிகுதியாக பிடுங்க வெட்கப்படாத நீயும், உன் கம்பெனியுமிருப்பதையும் பார்க்கும் போது எனக்கெதுக்கு வெட்கம் என்று நினைத்துக் கொண்டேன்.

”தாராளமா கொடுங்க நான் வாங்கிப்பேன். ஒன்ணு நீங்க சேஞ்ச் வாங்கி வைக்கணும். அப்படியில்லைன்னா.. நீங்க ரவுண்ட் பண்ற அமெளண்ட குறைச்சு 303 ரூபாயா ரவுண்ட் பண்ணனும். உங்க காசு ஒரு ரூபா கூட விட மாட்டீங்க.. ஆனா எங்க காசுன்னா.. அது வெறும் நாலணா தானேன்னு கேட்குறீங்க?.”

அவர் ஏதும் பேசாமல் ஒரு ரூபாயை எடுத்துக் கொடுக்க, என் ஆர்டர் வருவதற்காக காத்திருந்தேன். பக்கத்தில் அவருடய ஆர்டருகாக நின்றிருந்த வயதானவர் “தம்பி.. எனக்கும் நீங்க எக்ஸ்ட்ராவா வாங்கியிருக்கீங்க..?” என்றார். அவரை பார்த்த இன்னும் சிலர்.. என்று ஒரு பத்து பேர் கூடிவிட்டார்கள். அத்துனை பேருக்கும் அவர் சில்லரை மிகுதியாக வாங்கியிருக்கிறார்.

நம்மில் பல பேருக்கு இந்த எண்ணம் இருக்கிறது. எவ்வளவோ செலவு செய்கிறோம். ஒரு நாலணா காசுக்கு போய் தகராறு செய்ய வேண்டுமா..? என்று.. இதை செய்வது தகராறு இல்லை.. உங்கள் உரிமை.. எவ்வளவோ இடங்களில் நம்மை தெரியாமல் ஏமாற்றுகிறார்கள். ஆனால் தெரிந்தே நம்மிடமிருந்து காசை எடுப்பவர்களை நாம் கண்டிக்காமல் விட்டால் அதை போல ஒரு சுரணை கெட்ட விஷயம் வேறேதுமிருப்பதாய் தெரியவில்லை.

இந்த மனோநிலைதான் நம் நாட்டை கொஞ்சம், கொஞ்சமாய் பலவீனப்படுத்தும் மனோநிலையாய் மாறி போகிறது. எதற்கும் நம் எதிர்ப்பை காட்டுவதில்லை. நமக்கெதுக்கு என்றிருப்பது, நான் ஒருத்தன்  கேட்டால் நடந்துடுமா? என்ற எண்ணங்கள். அரசியல்வாதிகள் ஊழல் செய்கிறார்கள் என்று அவர்களை குற்ற்அம் சாட்டுவது எந்தவிதத்தில் ஞாயம்?. நாம் ஒரு சிறு தவறு செய்தாலும் அதை பொது மக்கள் கேட்பார்கள் என்ற பயம் இருந்தால் தானே?. ஸோ.. நண்பர்களே.. Know Your Rights, Act Immediately…. "


அனுபவம் 3:

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

" ஆம் கேட்டால் நிச்சயம் கிடைக்கும். அதே பேமில் புட் கோர்ட் ஆரம்பித்திருக்கிறார்கள். சரி சாப்பிடலாமென்று என் நண்பர் போய் ஆர்டர் செய்துவிட்டு வந்தார். புட்கோர்ட் புதியதாய் ஆரம்பித்திருப்பதால் இரண்டொரு கடைகளே இருந்தது. சாப்பாடு வந்த பிறகு போய் தண்ணீர் எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று சொன்னேன். அவர் போய் தண்ணீர் கேட்டார். தண்ணீரெல்லாம் தரமாட்டோம். வேண்டுமென்றால் பேக்கேஜாக கோக் வாங்கிக் கொள்ளுங்கள். அல்லது பாட்டில் தண்ணீர்தான் வாங்க வேண்டும் என்று சொன்னார். இது என்ன அநியாயம்?. இவ்வளவு பெரிய  புட்கோர்ட்டில் குடிப்பதற்கு தண்ணீர் தர மாட்டோம் விலைக்குத்தான் வாங்க வேண்டும் என்று எப்படி கட்டாயப் படுத்தலாம்?. என்று கேட்ட போது ஊழியர் திரு திருவென முழித்தார்.


நான் உள்ளே நுழைந்து என்ன ஏது என்று கேட்டுவிட்டு, “இதோ பாருங்கள். ஒரு ரெஸ்ட்ராண்ட் என்று வைத்துவிட்டால் நிச்சயமாய் உங்களின் உணவை சாப்பிடுபவர்களுக்கு தண்ணீர் கொடுத்தே ஆக வேண்டும். பாடில் தண்ணீரையோ, கோக்கையோ தான் குடித்தாக வேண்டும் என்று கட்டாயபடுத்தக் கூடாது. சட்டப்படி தவறு” என்றேன்.  ஊழியர் அதெல்லாம் எனக்கு தெரியாது, வேணும்னா வாங்கிக்கங்க.. இல்லாட்டி விடுங்க என்றார். அவர் எடுத்தெறிந்து சொன்னதும் எனக்கு கோபம் வந்துவிட்டது. பாதி சாப்பிட்ட அயிட்டங்களை திரும்பக் கொடுத்துவிட்டு எனக்கு சாப்பாடு வேண்டாம். காசை திரும்பக் கொடு என்று கேட்க ஆரம்பித்தேன். அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மேலும் விழிக்க ஆரம்பித்தார். உள்ளே போய் மேனேஜர் போன்ற ஒருவரை அழைத்து வர, அவரும்.. தேய்ந்து போன ரெக்கார்டாக அதே பதிலைச் சொல்ல, நானும் தண்ணீர் கொடுத்தால் சாப்பிடுவேன். இல்லை என்றால் சாப்பாடு வேண்டாம் என் காசைக் கொடு என்றேன்.

இப்போது என்னைச் சுற்றி வேடிக்கைப் பார்க்க கூட்டம் சேர்ந்தது. அதற்குள் ஒருவர் வந்து என்ன பிரச்சனை என்று கேட்க, ஊழியர்கள் சொன்னார்கள். உடனே சார்.. இது புட்கோர்ட் காமன் வாட்டர் வைக்க வேண்டியது நிர்வாகம். அதனால் அவர்களைப் போய் கேளுங்கள். என்றார். எனக்கு உணவு கொடுத்தது உங்களது கடை. சட்டப்படி, ரெஸ்ட்ராரண்ட் விதிகளின் படி, மாநகராட்சியின் விதிமுறைப்படி, ஒவ்வொரு உணவகமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நல்ல குடிதண்ணீர், டாய்லெட், வசதி ஆகியவைகளை கொடுக்க வேண்டும் என்று இருக்கிறது தெரியுமா? அப்படி கொடுக்கமுடியாது என்றால் எனக்கு உங்கள் சாப்பாடு வேண்டாம் என் காசை கொடுங்கள் நான் எனக்கு தண்ணீர் தருபவரிடம் போய் சாப்பிட்டுக் கொள்கிறேன். இல்லை நாங்கள் இங்கு தண்ணீர் தர மாட்டோம், பாட்டில் தண்ணீரையோ, அல்லது கோக்கையோதான் விலைக்கு வாங்க வேண்டும் என்று எழுதிக் கொடுங்கள். பிறகு நான் எங்கு போக வேண்டுமோ அங்கு போய் பார்த்துக் கொள்கிறேன் என்றதும்.  அவர் கண் அசைக்க, உள்ளேயிருந்து இரண்டு கிளாஸ் தண்ணீர் வந்தது. இது மாதிரி கே.எப்.சில கேட்டுருவீங்களா? என்றார். என் கூட வா.. இந்தியாவில் எந்த உணவகத்திலும் எனக்கு யார் தண்ணீர் இல்லை என்று சொல்கிறார்கள் என்று பார்போம் என்றேன். என் நண்பர் முதலில் கொஞ்சம் நெளிந்தாலும் சாப்பிடும் போது சொன்னார் ‘பரவாயில்லை சார். விடாம கொடுக்க வச்சிட்டீங்களே?” என்றதும் என் கோபம் அவர் மீது பாய்ந்தது.

“என்னா சார்.. இவ்வளவு சண்டை போடுறேன் கூட நீங்களும் கேட்க வேண்டாம். இங்க நம்மள வேடிக்கை பார்த்த ஆளுங்களைப் போலவே நீங்களும் இருந்திட்டீங்க.” என்றதும் தலை குனிந்தார். “நானா பத்து காசு கொடுத்து வாங்கிறது என் உரிமை. ஆனா அவங்க என் பாக்கெட்டுல கை விட்டு காசை எடுத்து இதைத்தான் சாப்பிடணும் சொல்றது அராஜகம்.” என்றதும் பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் அவர் சாப்பாட்டுக்கு தண்ணீர் கேட்க போனார்.

தியேட்டர்களில் இருக்கும் பெரும்பாலான புட்கோர்டுகளில் இப்படித்தான் கொள்ளையை ஆரம்பிக்கிறார்கள். அதன் பிறகு இன்னொரு விதமான கொள்ளை எப்படியென்றால். தியேட்டருக்குள் விற்கப்படும் பொருட்களின் விலை எம்.ஆர்.பியை விட அதிகம் விற்கக்கூடாது என்று விதியிருக்கிறது. சமீபத்தில் கூட ஒருவர் இம்மாதிரி மல்ட்டிப்ளெக்ஸில் விற்பதை எதிர்த்து கேஸ் போட்டார். உடனே தில்லாலங்கடிகளாய் ஒரு யோசனை செய்தார்கள். பெரும்பாலான மல்ட்டிப்ளெக்ஸுகளில் பாப்கார்ன் முதற் கொண்டு எல்லா அயிட்டங்களும் அவர்களூடய தயாரிப்பாகவோ, அல்லது வெளியேயிருந்து ப்ராண்டட் பெயரில்லாத தயாரிப்பாகவோ, வரவழைத்து விற்க ஆரம்பித்தார்கள். அதையும் மீறி டின் கோக், பெப்ஸி, வாட்டர் பாட்டில்களில் அதன் ஒரிஜினல் விலை போட்டிருப்பதால் என்ன செய்வது என்று யோசித்த போது பெப்ஸி, கோக் தயாரிப்பாளர்கள் ஒரு வேலையை செய்தார்கள். ஒரு டயட் கோக்கின் விலை வெளியே எம்.ஆர்.பி 25 ரூபாய் என்றால் இங்கே தியேட்டரில் 50 ரூபாய். தண்ணீர் பாட்டில் அறுநூறு எம்.எல் குறைந்தது 20 ரூபாய். தியேட்டரில் விற்க்கப்படும் கோக், பெப்ஸி, தண்ணீர் பாடில்களில் மட்டும் தியேட்டரில் தற்போது விற்கப்படும் விலையை போட்டு, இது வெளியில் விற்பனைக்கல்ல என்பதையும் போட்டு விற்கிறார்கள். கேட்டால் இங்கே இதன் எம்.ஆர்.பி. இதுதான் என்று சொல்கிறார்கள்.

இதைப் படிக்கும் வாசகர்களே.. உங்களுக்கு ஒரு வேண்டுகோள். நிச்சயம் உங்களுக்கும் இம்மாதிரியான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால் என்ன செய்வது என்று மனதிற்குள் புழுங்கியபடி காசைக் கொடுத்து வாங்கியிருப்பீர்கள். இனி தயவு செய்து அம்மாதிரி இல்லாமல் உங்கள் உரிமைகளை கேட்டு வாங்குங்கள்.  நீங்கள் கேட்பது நீங்கள் உழைத்து சம்பாதித்த காசுக்காக, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் நினைக்காதீர்கள். மற்றவர்களுக்காக நாம் வாழ்வதில்லை. கேட்டால் நிச்சயம் கிடைக்கும். "

**************************************************


10 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஊழலுக்கு எதிராக யார் போராட்டத்தில் இறங்கினாலும் அவர்களை காங்கிரஸ் சும்மா விடாது...

என்ன கொடுமை பாருங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கேட்பது கிடைக்குமா.. நல்லது..

சத்ரியன் said...

அட! -”கேட்டால் கிடைக்கும்”- சூப்பர்.

கவி அழகன் said...

நல்லா இருக்குதே

மகேந்திரன் said...

என்ன கொடும சார் இது....
நாடு கேட்டு போச்சு
ஊழல் செய்தவரை தட்டிக்கேட்டால் தப்பா...

N.H. Narasimma Prasad said...

சூப்பர் பதிவு. பகிர்வுக்கு நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் தரப்படும்

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
நானும் அந்த குழுவில் சேர்கிறேன்.
நன்றி.

RAMA RAVI (RAMVI) said...

நல்ல பகிர்வு குணா.வாழ்த்துக்கள்.

சுரேகா.. said...

நன்றாகக் கோர்த்திருக்கிறீர்கள். உங்கள் அங்கீகாரத்துக்கு மிக்க நன்றி குணசேகரன்!

வாழ்த்துக்கள்!

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...