Tuesday, August 02, 2011

எ.பி.க - 10

                * எ.பி.க - 10 *

விதை வகைகளில் ஒவ்வொன்றும் ஒரு விதம். அது மரபுக்கவிதையாகட்டும், புதுக்கவிதையாகட்டும். ஹைக்கூ  வகைக் கவிதைகள் கூட ரசிக்க வைக்கும்.  மரபுக்கவிதையின் சந்தங்கள் அதை வாசிக்கும் போதே நயமாக வெளிப்படும். எளிமையான புதுக்கவிதைகள் படிக்கும் போது அதன் பொருளும், வார்த்தைகளும் ரசிக்கும் விதத்தில் இருக்கும்.

ஹைக்கூ வகைக் கவிதைகள்  மிக மிக எளிமையாக இருக்கும். அதன் அர்த்தங்கள் ஷார்ப்பாக(Sharp) இருக்கும். பொதுவாக கவிதைகள் படிக்கும் போது ஒவ்வொரு வரிகளுக்கும் கொஞ்சம் கற்பனையை நினைத்துக் கொண்டால் நிச்சயம் ரசிக்கும் வகையில் இருக்கும்.

கவிதைகள் எழுதும் பழக்கம்  ப்ளஸ் டூ படிக்கும் போதே எனக்கு ஆரம்பித்து விட்டது. எனது தமிழாசிரியரின் ஊக்குவிப்பில் நான் மரபுக்கவிதைகள் கூட எழுத ஆரம்பித்தேன். அறுசீர் ஆசிரிய விருத்தத்தில் கவிதைகள் எழுதுவது எனது அப்போதைய வழக்கம். எனது பதிவை வாசிக்கும் நண்பர்களுக்கு பின்னொரு நாளில் எனது மரபுக்கவிதை படைப்புகளை வெளியிடுகிறேன்.
இன்று நான் ரசித்த கவிதைகளை வெளியிடுகிறேன்.

ஹைக்கூ - 1

கறுத்த முகம்


யார் திட்டியது?
கறுத்து கிடக்கிறது
மேகத்தின் முகம்!

-சி.கலைவாணி

ஹைக்கூ - 2

உழைப்பு

நா வறண்டு
நிற்கிறான்
தண்ணீ­ர் பாக்கெட் விற்பவன்!

-பொதக்குடி ஜெ.வெற்றிமுரசு

ஹைக்கூ - 3

ஜன்னல்மெல்லத் திறந்தது கதவு
தேவி தரிசனம்
'எதிர் வீட்டு ஜன்னல்'

-பி.என்.ஜெய்சங்கர், திருவாரூர்

ஹைக்கூ - 4

அழுகை
பூமி அழுக்காவதைக் கண்டு
மேகம் அழுகிறது....
மழை!

-ந.சிவநேசன்

ரேவா(வித்யாசமான பெயர்) என்பவர் உரை நடை வடிவில் எழுதிய அவரது வருங்கால கணவன்(காதலன்) பற்றின இந்தப் புதுக் கவிதையில் யதார்த்தமான பெண்ணின் மன எண்ணங்களை அழகாக சொல்லியிருக்கிறார்.

முகம் தெரியா என் காதல் கணவனுக்கு!!!!!?... ரவிவர்மன் ஓவியம் போல்
என் மனதில் நான் வரைந்துவைத்த
கற்பனைக் காவியமே...
கண்ணிறைந்த காதலனே...

காலங்கள் கரைந்தோட,
கனவுகளும் எனையாள,-என்
கற்பனை நாயகனே,
என் காத்திருக்க வைப்பதேனோ?...

 அன்னையாக வருவாயோ?
எனையாளும் தந்தையாக வருவாயோ?
தோள்கொடுத்து அரவணைக்கும்
தோழனாக வருவாயோ?
மாயங்கள் தான் புரிந்து,
என் வாழ்வில் மாற்றங்கள் தருவாயோ?

 மருமகனாய் வந்து
மகனாகிப் போவாயா?
இல்லை,
இருக்கின்ற கூட்டத்தில்
நீயும் ஒன்றாகிப் போவாயோ?

என் கற்பனை வாழ்விற்க்கு
தூரிகையாய் இருப்பாயா?
இல்லை,
துயர்கொண்டு நிறைக்கும்
துன்பமாய்ப் போவாயோ?...

தூங்காமல் நான் சேர்த்துவைத்த
இரவெல்லாம் காதல் கொண்டு நிறைப்பாயா?
இல்லை,
தூக்கத்தை தூக்கிலேற்றி
துயர் கொண்டு நிறைப்பாயோ?

 இதுவரை வாழ்த்த வாழ்க்கை
வீணென்று சொல்வாயா?
இல்லை,
உனைப் பார்க்காமல் இருந்திருந்த
காலமே மேல் என்று சொல்வாயோ?

 நம் குடும்பத்தின்
வேராய் அன்போடு படர்வாயா?
இல்லை,
உன் குடும்பம் வேறு,
நம் குடும்பம் வேறு என்று
வேறு வேறாய்ப் பிரிப்பாயோ?

 எனக்கென்ற என் திறமைதனை
தட்டிகொடுத்து வளர்ப்பாயா?
இல்லை,
தனித் திறமை என்பதெல்லாம்
தனக்கு ஒத்துவாராதென்று,
தார்மீக தடைதனை விதிப்பாயோ?

சண்டைகள் வரும்போதெல்லாம்
சமாதனம் செய்வாயா?
இல்லை,
" சனியன் " வந்த வேலையென,
தாய்வீடு அனுப்புவாயோ?

அந்திநேரம் என் மடிசாய்ந்து
உன் அலுவலக கதைதனைச்
சொல்வாயா?
இல்லை,
ஆண்மகன் நானென்று ஆணாதிக்கம்
புரிவாயோ?

 எது எப்படியோ ...
முகம் தெரியா என் காதல்
கணவனே...
வருகின்ற காலத்தில்,
காதலோடு நானிருப்பேன்...
உனக்கொரு துயர் என்றால்
என் உயிர்க்கொண்டு
உன் துயர்  துடைப்பேன்...
உன் தாரமாக இல்லாமல்
உனக்கொரு தாயாக நானிருப்பேன்..
என் அன்னைக்கு மேல்
இவள் என்ற பெயர் எடுப்பேன்...
காதல் கொண்டே
நம் காலம் முடிப்பேன்..

ரவிவர்மன் ஓவியம் போல்
என் மனதில் நான் வரைந்துவைத்த
கற்பனைக் காவியமே...
கண்ணிறைந்த காதலனே..   
முகம் தெரியா தூயவனே
உனக்கே தான் இக்கவிதை..
உனக்கே தான் இக்கவிதை..
காத்திருக்கு காதலோடு...

- ரேவா

பணத்திற்காக எழுதும் தரம் கெட்ட படைப்பாளிகளை ஒருவர் சாடுகின்ற மரபுக்கவிதை படைப்பு இது. அவரின் கருத்தைப் பற்றிச் சொல்ல நான் இதை வெளியிடவில்லை. மரபுக்கவிதையின் நயத்தை சொல்வதற்காக வெளியிடுகிறேன். படியுங்கள்..


பொன்னென்றும் பூவென்றும் புதுப்பாட்டுத் தேனென்றும்
பொழுதெல்லாம் பாடிநிற்பான் – அவன்
புகழ்க்கூட்டம் கூடிநிற்பான் – அந்தத்
திண்ணென்ற தடியன்தான் திறம்கெட்டத் தமிழன்தான்
திசையெங்கும் மோடிவைப்பான் – தாய்க்கு
வசையெங்கும் தேடிவைப்பான்

எடுப்பார்கைப் பிள்ளைபோல் இருக்கின்றான் இவனாலே
இங்கிலீசு கூத்தாடுது – தமிழ்
இதுகண்டு வேர்த்தாடுது – உதை
கொடுப்பார்கள் கொடுத்தால்தான் குரங்காட்டம் நிற்குமெனில்
கொடுப்போமே எத்தாவது – ஓங்கிக்
கொடுப்போமே குத்தாவது!******************************************

4 comments:

vidhya said...

very very nice
post and write
beautiful

ரியாஸ் அஹமது said...

super boss...
ungal rasanai valamai pola arumai...
ungal pathivukalaal naan merukeruven ...
nanri nanri

Anandh said...

அருமயான பதிப்புக்கு பாராட்டுக்கள் .
நான் படித்ததில் பிடித்த முதல் ஹைகூ கவிதை உங்கள் பார்வைக்கு !!

" கடவுள் இல்லை "
என்ற தலைப்பு கட்டுரை பிள்ளையார் சுழி இட்டு துவக்கம் ..

கவி அழகன் said...

அருமயான பதிப்புக்கு பாராட்டுக்கள்

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...