Friday, August 12, 2011

எ.பி.க - 12 - விலைமதிப்பில்லா மாது

               * விலை(மதிப்பில்லா) மாது(18+) *

த்தனையோ கவிதைகளை நான் நித்தமும் படித்து வருகிறேன். காதல், கோபம், சமூகம், வெறுப்பு இன்னும் நிறைய வகையறாக்களில் வெளி வந்த கவிதைகள் நிறைய என்னக் கவர்ந்திருக்கின்றன. வாழ்க்கையின் நிதர்சனமான ஒரு நிகழ்வை தன் ஷார்ப்பான வார்த்தைகளில் நெற்றிப் பொட்டில் தட்டியது போல ஒருவர் இந்தக் கவிதையை எழுதியிருக்கிறார். எழுதியவர் பெயர் தெரியவில்லை. இருப்பினும் என்னை மிகவும் கவர்ந்த இந்தக் கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு படைப்பாளிக்கும் ஒரு விலைமாதுக்கும் நடக்கும் உரையாடலை மிக மிக நாஷுக்காகவும் நயமாகவும் சொல்லியிருக்கிறார். இதில் காமமும் கலந்திருப்பதால் 18+ போட்டு விடுகிறேன். படித்துப் பாருங்கள். நிச்சயம் பிடிக்கும்.

விலைமதிப்பில்லா மாது



தொலைக்காட்சி,குளிரரூட்டி,நாற்காலி,கணினி
என எல்லாமிருந்த அறையில் அவர்களுக்கு
கட்டில் மட்டுமே தேவைப்பட்டது....

அவன் முயன்று முன்னேற
அவள் முனங்கிப் பின்வாங்கினாள்..

மனிதஇனத்தின் மகரந்த சேர்க்கை அங்கே
நடந்துகொண்டிருக்கிறது...
யார் பூ யார் வண்டு ஆராய்தல்
அவசியம் இல்லை..

ஆதாம் கண்டுபிடித்த ஆட்டம்
நிறைவு பெற்றது.
இளைத்துக் கலைத்தனர்- வியர்வை
முத்துக்கள் உடல் முழுக்க கோலம் போட்டது.

அவன் கலைமகன்.
அவள் விலைமகள்..

கற்பனையை பேனாவுக்குள் ஊற்றி
காட்சிகள் படைப்பவன் அவன்.
தன் உடலை பொதுவுடைமை
ஆக்கியவள் அவள்..

நாற்பதை தொட்டவன் அவன்.
இலக்கியம் இறுமாப்பு இரண்டும்
இரு கண்கள் அவனுக்கு...
குடும்பம்,பொறுப்பு போன்ற
இமைகள் கிடையாது..

பட்டினத்தாரையும் காதல் பாட்டு எழுத
வைக்கும் அழகு அவளது..
இந்த அவசர உலகம் கொடுத்த
"ஒரு மணி நேர மனைவி"- இவள்.
 

ஜன்னல்களை திறந்தான். வானத்தை ஆராய்ந்தான்..
பேனா புத்தி அது
நிலவு நட்சத்திரங்கள் ஏதுமின்றி வானமும்
நிர்வாணமாய் இருந்தது......

புகைக்க தொடங்கினான்.
அவள் கோபம் கொண்டாள்.
கூடிய பின் புகைப்பது
அவனது நெடுநாள் பந்தம்.
ஆனால் புகைக்கக்கூடாதென்பது அவர்கள்
முன்னமே செய்த ஒப்பந்தம்!!!

அவனை ஏசினாள்.
காற்றை கற்பழிக்காதே என்றாள்.
அவனுக்கு கோபம் பற்றியது.
"வேசை தானே நீ... பலர் தொடும் பரத்தைக்கு திமிறென்ன??"
தீப்பிழம்பை கக்கினான்.
அவளோ எரிமலையானாள்.

அவள் கண்கள் சிவப்பானது.
அவனை ஏறிட்டு அற்பமாய் பார்த்தாள்.
"ஆம்.வேசை தான் நான்.." என
ஆரம்பித்து தொடர்ந்தாள்.

என்னிடம் வறுமைக்கதைகள் இல்லை.
நியாயப்படுத்தும் காரணங்கள் இல்லை.
உனக்குக் காமம் எப்படியோ
எனக்கும் அப்படியே...

துணை இழந்த வயதானவனின் வடிகால் நான்...
எங்கோ நடக்க இருக்கும் பாலியல் குற்றத்தைத்தடுக்கிறேன்...
உண்மையில் மிருகங்களின் காமங்களைந்து
மீண்டும் நாங்கள் தான் மனிதர்களாக்கி அனுப்புகிறோம்.
நாங்களில்லையேல் உன் சமுதாயம்
நாறி நாற்றமடிக்கும்....

இதுவும் ஒரு வியாபாரமே ....
ஏமாற்றில்லா...ஊழலில்லா... வியாபாரம்.
நீ அசைவம் கொலை என ஒத்துக்கொள்
நான் விபச்சாரம் தவறென ஏற்றுக்கொள்கிறேன்.

கற்பிழப்பவர் வேசை என்பது உன் சித்தாந்தமெனில்
நீயும் ஒரு வே
சி தானே......

"வேசி" பெண்பால் என
எவன் சொன்னது??...

அவனருகே வந்து தாழ்ந்த குரலில்
மீண்டும் சொன்னாள்....

"உனக்குக் காமம் எப்படியோ
எனக்கும் அப்படியே...."

பேசிவிட்டு அறையிலிருந்து
விடைபெற்றாள்....

அவன் கண்ணிமைக்காமல் அவள்
சென்ற திசை நோக்கிக்கொண்டிருந்தான்.

தாளில் அடுத்த நாவலுக்குத் தலைப்பிட்டான்.
விலை(மதிப்பில்லா) மாது!!!!!!!!!!


*********************************************

9 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சிலிர்க்க வைக்கும் கவிதை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கவிதை கரு..
கவிதைக்களம்..
கவிதைவடிவமைப்பு என அத்தனையிலும் மோலோச்சி நிற்க்கிறது கவிதை...

"உனக்குக் காமம் எப்படியோ
எனக்கும் அப்படியே...."


உண்மையான வார்த்தை

இதுபோன்ற விஷயங்களில் பெண்னைமட்டுமே நாம் குற்றவாளியாக்கி வேடிக்கைப்பார்க்கிறோம் இந்த குற்றத்தில் ஆணுக்கும் பங்குண்டு...


காற்றை மாசுபடுவதை கூட பொருக்காத மனம்
அழகிய சிந்தனை..

எழுதியாது யாராக இருந்தாலும் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..

அதை பகிர்ந்த தங்களுக்கு என் வாழ்த்துக்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உளவில் இணைத்துள்ளேன்...

N.H. Narasimma Prasad said...

அருமையான நடை, சூப்பர் கவிதை. நீங்கள் ஏன் உங்கள் பதிவுகளை இன்னும் திரட்டிகளில் இணைக்கவில்லை? சீக்கிரம் இணைத்திடுங்கள். அப்போது நான் ஓட்டு போட முடியும்.

சத்ரியன் said...

குணா,

சிறப்பானதொரு கவிதையைத் தேடி பகிர்ந்தமைக்கு நன்றி.

இக்கவிதை எனக்கும் மிகப் பிடித்திருக்கிறது.

Sivakumar said...

யதார்த்த சிந்தனை. கீப் இட் அப் குணா.

மகேந்திரன் said...

கவிதை நடையும் களமும் அற்புதம்.

kowsy said...

அருமையான கவிதை பகிர்வுக்கு நன்றி. அதனால்த்தானோ என்னவோ ஐரோப்பியநாடுகளில் சட்டரீதியாக்கி கௌரவப்படுத்தி இருக்கின்றார்கள். சிந்திக்க வைத்தது நன்றி குணா

Unknown said...

விலை மாது ஆம்!அவள்வ விலை இல்லா மாது!

பணத்தால் அன்று!
குணத்தால் நன்று!

வலைப் பக்கம் வருவதே இல்லை

புலவர் சா இராமாநுசம்

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...