Thursday, August 11, 2011

மற்றவை - திரையுலகில் வாழ்ந்து கெட்டவர்கள்

              * திரையுலகில் வாழ்ந்து கெட்டவர்கள் *

ன்று எதேச்சையாக சிவாஜி , சாவித்திரி நடித்த பாசமலர் படத்தில் வரும் "மலர்ந்து மலராத" பாடலை டி.வி.யில் பார்த்தேன். சாவித்திரியின் நடிப்பைப் பார்த்து வியந்தேன். அப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகையின் திரையுலக வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கைப் பற்றிய கட்டுரைகளை இணையத்தில்  தேடிப்பார்த்தேன். படித்தவற்றை தொகுத்து கொடுத்திருக்கிறேன். படித்த பின் புத்திசாலித்தனம் இல்லாமல் அப்பாவியாக இருந்ததால்தான் நடிகை சாவித்திரியின் பிற்பகுதி வாழ்க்கை மிகவும் சோகமாக போனது என்ற விசயம் என் மனதிற்கு தோணியது.

படித்துப் பாருங்கள்.



* நடிகை சாவித்திரி ஆந்திராவின் குண்டுர் மாவட்டத்தில் உள்ள சிறாயூரில் பிறந்தவர். நாடகதுறையில் அறிமுகமாகி அங்கிருந்து சினிமாவிற்கு வந்தவர். எட்டாம் வகுப்புவரை படித்திருக்கிறார்.

* எல்.வி. பிரசாத்தின் சம்சாரம் என்ற படத்தில் அறிமுகமானார்.

* தமிழ் தெலுங்கு ஹிந்தி என்று முந்நூற்று பதினெட்டு படங்களில் நடித்திருக்கிறார்.

* தமிழில் குழந்தை உள்ளம் பிராப்தம் ஆகிய இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். தெலுங்கிலும் நான்கு படங்களை இயக்கியிருக்கிறார்.

* மகாகவி பாரதியின் மீது மரியாதை கொண்டு எட்டயபுரத்தில் குடிநீர்க் கிணறு ஒன்றை உருவாக்கி தந்திருக்கிறார் சாவித்திரி.



திரையுலகில் கொடி கட்டிப் பறந்த அவர் காதல் மன்னன் என்றழைக்கப்படும் ஜெமினி கணேசனை "மணம் போல் மாங்கல்யம்" என்ற படத்தில் நடித்த போதுதான் காதலிக்க ஆரம்பித்தார்.   கி.பி. 1956-ல் அவரை ரகசிய திருமணம் செய்து கொண்டார். அன்றைய நாட்களில் வெளி வந்த லக்ஸ் விளம்பர அட்டையில் சாவித்திரி கணேசன் என்று கையெழுத்துப் போடும் போதுதான் ஜெமினி கணேசனை திருமணம் செய்தது அனைவருக்கும் தெரிந்தது. ஏற்கனவே திருமணமான ஜெமினி கணேசனை அவர் இரண்டாம் திருமணம் செய்த பின் சில காலம் சந்தோசமாகச் சென்றது. அவர் விஜய சாமுண்டேஸ்வரி மற்றும் சதீஸ் என்ற இரண்டு குழந்தைகள் பெற்றெடுத்தார். குழந்தைகள் வளர்ப்பில் ஸ்டிரிக்டாகவும், ஒழுக்கமாகவும், மிகுந்த அன்பாகவும் இருந்தார். தொலைகாட்சிகளே இல்லாத அந்தக் காலத்தில் தனது குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக 16MM புரஜெக்டரை வீட்டில் வைத்திருந்தார். இடது கை பழக்கம் உடையவர். கிரிக்கெட் மேல் அலாதி பிரியம் கொண்டவர். சென்னையில் சிவாஜி கணேசனுடன் ஸ்டார் கிரிக்கெட் மேட்சில் கலந்து விளையாடி இருக்கிறார். சாவித்திரி பொதுவாக இரக்க சுபாவம் உடையவர். எல்லோருடனும் அன்பாகவும், மரியாதையாகவும் பழகுவார். ஆனால் அப்பாவி. நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர்.  அவரது அப்பாவித்தனத்தை நிறைய பேர் சுயலாபத்துக்காக பயன்படுத்தினர். உதவும் மனப் பான்மை கொண்டவர். ஒரு முறை பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியைச் சந்தித்து தனது தங்க, வைர நகைகளை பிரதமரின் ரிலீஃப் பண்ட்-க்காக கொடுத்திருக்கிறார்.

சாவித்திரி வசதியாக இருந்த போது, காலில் தங்கக்கொலுசு அணிந்தார். 
"தங்க நகை என்பது லட்சுமிக்கு சமம். தங்க நகைகளை கழுத்திலும், கையிலும் அணியலாம். காலில் அணியக்கூடாது" என்று பெரியவர்கள் கூறியதைத் தொடர்ந்து, தங்கக் கொலுசுகளைக் கழற்றிவிட்டு, வெள்ளிக்கொலுசு அணியலானார்.

இந்த சமயத்தில் தனது காதல் கணவர் , தன்னை விட்டு பிரிந்து, முதல் மனைவியிடம் சென்றபின். நொடித்துப் போனார். அப்புறம் கடன் வாங்கி சொந்தமாகப் படங்கள் எடுத்து நஷ்டப்பட்டு, இருந்த வீடு, சொத்துக்களை விற்று அண்ணா நகரில் வாடகை வீடு எடுத்து குடியிருந்தார்.ஜெமினிகணேசனைப் பிரிய நேரிட்டதாலும் மனம் உடைந்த அவர், துக்கத்தை மறப்பதற்காக மது அருந்தலானார். நாளடைவில் மதுவுக்கு அடிமையானார். அதனால் அவர் உடல் நலம் சீர்கெட்டது.

இடையில் "புகுந்தவீடு", "வல்லவனுக்கு வல்லவன்" ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்தார்.

சுருக்கமாகச் சொன்னால், "பிராப்தம்" படத்துடன் தமிழ்ப்பட உலகில் சாவித்திரி சகாப்தம் முடிந்து விட்டது.
01-05-1980  அன்று மைசூரில் நடைபெறும் சினிமா படப்பிடிப்பிற்காக நடிகை சாவித்திரி பெங்களூர் சென்றார். பெங்களூரில் "சாளுக்கியா" என்ற ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார். உடல் நிலை சரியில்லாமல் அவர் அறையில் மயங்கி விட்டார்.

அப்புறம் அன்று காலை அவர் தனது அறையில் மயங்கிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சாவித்திரியை ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்தவர், சரோஜாதேவி. அன்றைய முதலமைச்சர் குண்டுராவை சந்தித்து, சாவித்திரிக்கு சிறந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.

உடனடியாக ஜெமினிகணேசன் பெங்களூருக்கு விரைந்து சென்றார். சாவித்திரியைப் பார்த்து கண் கலங்கி அருகிலேயே இருந்தார். கோமா நிலையில் இருந்த அவர் பின்னர் உணர்வு நிலைக்குத் திரும்பினார். இருப்பினும் சில மாதங்கள் சிகிச்சை தொடர்ந்து பெற்றார். இடையில் "ஆ..அம்மா" என்ற வார்த்தையை மட்டும்தான் உச்சரித்தார்.

டிசம்பர் 26, 1981 அன்று மறைந்து விட்டார்.

அவரின் கடைசி நேரத்தில் எடுத்த புகைப்படம் இது.


இவரைப் பற்றி ஒரு பிரபல எழுத்தாளர் சிவசங்கரி தனது அனுபவத்தை எழுதியுள்ளார்……..கீழே வெளியிட்டுள்ளேன்.

அன்று…
அப்போது எனக்கு என்ன வயசிருக்கும்?
பத்து..? பதினொன்று..?

என் ஸ்நேகிதிக்கும் எனக்கும் ரொம்ப நாட்களாக ஒரு ஆசை… குண்டு முகமும், வண்டுக் கண்களும், ஈர உதடுகளும், அருமையான நடிப்புமாய் இருக்கும் சாவித்திரியை எப்படியாவது நேரில் பார்த்து ஒரு சில வார்த்தைகளாவது பேச வேண்டும் என்று!

எங்கு பார்ப்பது? எப்படிப் பேசுவது?

”பாண்டிபஜார் ராஜகுமாரி தியேட்டருக்குப் பக்கத்துலதானாம் சாவித்திரி வீடு.” தெருப் பெயர், வீட்டு நம்பர் தெரியாது. யாரையாவது நிறுத்தி ‘நடிகை சாவித்திரி வீடு எது?’ என்று கேட்கக் கூச்சம். தணிகாசலம் செட்டி தெரு, டாக்டர் சிங்காரவேலு தெரு என்று ஒவ்வொன்றாகப் புகுந்து புறப்பட்டோம். பெரிசாய்க் காணப்பட்ட வீடுகளின் முன் நின்று, சாவித்திரியின் முகம் தெரிகிறதா என்று தேடினோம்.

எங்கள் அதிர்ஷ்டம்… மாரீஸ் மைனர் காரை தானே ஓட்டிக்கொண்டு சாவித்திரி எங்களைக் கடந்து சென்றார். ஓட்டமும் நடையுமாக அந்த வண்டியைத் தொடர்ந்தோம். நல்லவேளையாக, நாலாவது வீட்டு காம்பவுண்டுக்குள் அந்தக் கார் நுழைந்துவிட்டது.

பொசு பொசுவென்று மூச்சுவிட்டுக்கொண்டு, கேட்டைத் தாண்டி, போர்ட்டிகோவில் நின்றோம்.

”எவரும்மா அதி?” – தெலுங்கில் ஒரு பெரியவரின் வினவல்.

”சாவித்திரியைப் பார்க்கணும்.”

”அதெல்லாம் முடியாது. அவங்க வீட்டுல இல்லே!”

”இப்பப் பார்த்தோமே, தானே வண்டியை ஓட்டிண்டு வந்தாங்களே..!”

”அது சாவித்திரி இல்லே, அவங்க அக்கா! போங்க, போங்க..!”

மனுஷர் பொய் சொன்னதும் எங்களுக்கு அழுகையே வந்துவிட்டது. ஆனால், அடுத்த நிமிஷம்… யார் செய்த புண்ணியமோ, சாவித்திரியே வாசலுக்கு வந்து விட்டார்.

மேக்கப் போட்ட முகம்; கோடு போட்ட ஷிபானோ ஏதோ… மெல்லிய புடவை; திலகம்; சிரிப்பு; அழகு.

”யாரும்மா?”

”நாங்க உங்க ஃபேன்ஸ். ரொம்ப நேரமா வெயில்ல காத்திட்டிருக்கோம்.”

”அப்படியா? ஷூட்டிங்லேர்ந்து நேரா இப்பதான் வரேன். சாப்டுட்டுத் திரும்பப்
போகணும். சொல்லுங்க, என்ன வேணும்?”

”ஆட்டோகிராப்…”

”அவ்வளவுதானே… கொடுங்க.”

நீட்டிய புத்தகத்தை மாரீஸ் மைனர் கார் மேல் வைத்து ‘சாவித்திரி’ என்று இடது கையால் கையெழுத்துப் போட்டார்.

கிட்டத்தில் – ரொம்பக்கிட்டத்தில், அவர் சேலை நம் மேல் படுமளவுக்குக் கிட்டத்தில் நின்று பார்த்தபோது பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

நாங்கள் ”மனம்போல மாங்கல்யத்தில் உங்க நடிப்பு பிரமாதம்” என்று சொல்லவும், அவர் சிரித்தார். ”தாங்க்ஸ்” என்றார்.

அந்தச் சிரிப்பும் குரலும் ரொம்ப நாட்களுக்கு மனசில் பசுமையாக இருந்தது நிஜம்.

இன்று…

சாவித்திரி உடம்பு சரியில்லாமல் படுத்து ஒரு வருஷமாகிவிட்டது!

அண்ணா நகர்; சின்ன வீடு; வாசலில் பழசாகி, உதிரும் நிலையில் ஒருதென்னங்கீற்றுப் பந்தல்.

நுழைந்ததும் ஒரு ஹால்.

மேஜை மேல் – ஒருக்களித்து உட்கார்ந்து, தலையை மேலே நிமிர்த்தி, கூலிங்கிளாஸ், பூப்போட்ட சேலையில் அழகாய்க் காட்சி தரும் சாவித்திரியின் படம். ஈரம் பளபளக்கும் உதடுகளோடு சிரிக்கும் சாவித்திரியின் இன்னொரு ஓவியம்! மங்கி,
பாலீஷ் இழந்த கேடயங்கள் ஓரிரண்டு…

கிழிந்த அழுக்கு சோபாக்கள், காற்றில் ஆடும் பழைய கர்ட்டன்கள், சொறி பிடித்த வெள்ளை நாய் ஒன்று….

முன்கூட்டியே தெரிவித்துவிட்டுச் சென்றதால் மகன் சதீஷூம், உறவினர்
வெங்கடரத்தினம் பாபுவும் வரவேற்று அமரச் சொன்னார்கள்.

”அம்மகாருவைப் பார்க்கிறீங்களா?”

உள்ளே இன்னொரு அறைக்குள் நுழைகிறோம்.

படுக்கையில் எலும்புச்சுருளாக அவர். ரொம்ப சூம்பிப் போன கை, கால்கள்…
கறுத்துப்போன தோல்… மூன்று வயசுப் பிள்ளையின் வளர்த்தி. மூடின கண்கள்; மூக்கிலிருந்து ஓடும் ரப்பர் குழாய்; மழமழவென்று வாரி இரட்டைப் பின்னலாகப் பின்னி, மடித்துக் கட்டப்பட்ட முடி; சிவப்புப் பொட்டு.

”அம்மகாரு ச்சூடு… அம்மகாரு இக்கட ச்சூடு! மீ ப்ரெண்ட் ஒச்சுண்டாரு…
ச்சூடும்மா” என்று நர்ஸூம் பாபுவும் குனிந்து குரல் கொடுக்க, சாவித்திரி
மெதுவாகக் கண்களைத் திறக்கிறார்.

உள்ளுக்குள் என்னமோ வேதனை இருக்கிற தினுசில் கைகளை இப்படியும், அப்படியும் சுழற்றுகிறார்; மஞ்சள் ஏறிப்போன பற்களை ‘நக் நக்’ கென்று கடிக்கிறார்; அரை நிமிஷம் என்னை உறுத்துப் பார்க்கிறார். திரும்ப கண்களை மூடி, அமைதியாகிறார்.

ஹோ… சாவித்திரியா! இவரா!

நவரசங்களையும் விழியோரத்தில் நிறுத்தி, உதட்டசைவால் அனைவரையும் ஆக்கிரமித்து, நடிகையர் திலகம் என்ற பட்டப் பெயரோடு பவனி வந்த சாவித்திரி இவரா?

இல்லை, இல்லை… நம்பமாட்டேன்! சத்தியம் பண்ணினாலும் இது சாவித்திரி என்று ஒப்புக் கொள்ளமாட்டேன்.

கண்ணில் ஊறிவிட்ட ஜலத்தைச் சமாளிப்பதற்காகத் தலையைக் குனிந்து கொள்கிறேன். கவனத்தை அறையின் மற்ற விவரங்களில் செலுத்துகிறேன்.

ஒரு பக்கமாய் ஸ்டெரலைஸ் செய்யும் பாத்திரம்… ஒரு மேஜையில் காம்ப்ளான், ப்ரொடீனெக்ஸ், மருந்துகள்… உடம்புப் புண்களைத் தவிர்க்க ‘ஆல்ஃபாபெட்’ என்ற படுக்கையை உபயோகிக்கிறார்கள்.

இது குமிழ் குமிழான ரப்பராலான படுக்கை. மின்சாரத்தில் இயங்கி, சிறு அலைகளை உண்டாக்குவதன் மூலம் காற்றோட்டத்தை உண்டாக்கி, நோயாளியின் உடம்பை ரணத்திலிருந்து காக்கிறது.

”இந்தப் படுக்கை இல்லேன்னா அம்மகாரு நிலைமை மோசமா ஆகி யிருக்கும்…”

இதைத் தவிர டானிக், மருந்து வகையறா… முழு நேர நர்ஸ் ஒருவர்…

சாவித்திரிக்கு பெங்களூரில் கோமா வந்தபோது அதை முதலில் பார்த்த நபர் சாவித்திரியின் பதினாறு வயசு மகன் சதீஷ் தான்.

”ஒரு வாரமா ராப்பகலா ஷூட்டிங் இருந்ததால, அம்மா இன்ஸூலின் போட்டுக்காம விட்டுட்டாங்க. பெங்களூர் போன அன்னிக்கு ராத்திரி வெறும் வயித்தோட இஞ்ஜெக்ஷன் போட்டுக்கிட்டுப் படுத்துட்டாங்க. மூணு மணி சுமாருக்கு நான் பாத்ரூம் போக எழுந்தப்ப அம்மா வாயில நுரையோட, நினைவிழந்து படுத்திருந்தாங்க. இதுக்கு முன்னால இரண்டு மூணு தடவை அம்மாவுக்கு ‘கோமா’ வந்து, உடனே கவனிச்சதுலே சரியாயிருக்கு. இந்த முறைதான் ஏனோ இப்படிப் பெரிசா படுத்துட்டாங்க” என்கிறார்.

நாலு பேராய், பத்துப் பேராய் சாவித்திரிஅபிமானிகள் யார் யாரோ வந்து, ஜன்னல் வழியாக சாவித்திரியைப் பார்த்து விட்டுப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

இத்தனை பேரின் அன்புக்கும் பரிவுக்கும் பிரார்த்தனைக்கும் பலன் இருக்கவேண்டும். தனித்துத் தவிக்கும் பிள்ளைக்காகவாவது சாவித்திரி மயக்கத்திலிருந்து மீண்டு வரவேண்டும்.


** சிவசங்கரி **

அவரின் நினைவாக இந்திய அஞ்சல் துறை நினைவு தபால் தலையை பிப்ரவரி 13 2011 அன்று வெளியிட்டது.

அவரின் வாழ்க்கையைப் படித்துப் பார்க்கும் போது, எனக்கு ஒன்று மட்டும் புரிகிறது. புத்திசாலித்தனமாக பிழைக்க வேண்டும். எது நடந்தாலும் நொடித்துப் போகக் கூடாது.

10 comments:

இராஜராஜேஸ்வரி said...

புத்திசாலித்தனமாக பிழைக்க வேண்டும். எது நடந்தாலும் நொடித்துப் போகக் கூடாது.//

பகிர்வுக்கு நன்றி

மகேந்திரன் said...

நடிகையர் திலகத்தின் வாழக்கை
சற்று சிந்திக்க வேண்டிய ஒன்று.
பதிவுக்கு நன்றி நண்பரே.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
படித்தவுடன் மனசு கலங்குகிறது.

RAMA RAVI (RAMVI) said...

எனக்கு மிகவும் பிடித்த பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்கள்.அவருடைய வாழ்க்கையை பற்றிய மனதை கலங்க வைக்கும் பதிவு.பகிர்வுக்கு நன்றி குணா.

vidivelli said...

மனதை நெகிழவைக்கும் பதிவு..
வாழ்த்துக்கள் சகோ/


!!இக்கரை அடிக்கடி அக்கரையை மறக்கிறீங்க..
hehehe

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மலரும் நினைவுகள்..
பொக்கிஷமான பதிவு...

வாழ்த்துக்கள்...

N.H. Narasimma Prasad said...

உண்மையில் சாவித்திரி, கணவர் பிரிந்து போனதால் குடிக்கவில்லை. ஒருமுறை இந்தோனேசியாவுக்கு போயிருந்தபோது, அப்போதைய அந்நாட்டு அதிபர் சுகர்தோ கொடுத்த விருந்தில் கலந்துகொண்டார். அதிபரின் வற்புறுத்தலால் விருந்தில் மது அருந்திய சாவித்திரி, அதன்பிறகு மதுவுக்கு அடிமையாகிவிட்டார்.

கோகுல் said...

நெகிழ்ச்சியான பதிவு.பகிர்வுக்கு நன்றி.

அம்பாளடியாள் said...

நான் சாவித்திரி அம்மாவின் பரம ரசிகை.தங்களின்
ஆக்கத்தை படிப்பதற்கு முன்னர் அவர் குடிப்பழக்கத்தால்
இறந்தார் என்று கேள்விப்பட்டு சற்று வேதனை அடைந்தேன்.
அந்தக் குடிப்பழக்கத்துக்கு காரணமே அவரது இல்லற வாழ்வில்
ஏற்ப்பட்ட தோல்விதான் காரணம் என்று அறிந்ததில் மிகவும்
வேதனை அடைகின்றேன்.பெண்ணாய்ப் பிறந்துவிட்டால்
எத்தனை சோதனைகள் .அவரது இறுதியாக எடுத்த படத்தைப்
பார்ப்பதர்க்கு மனதிற்கு மிகவும் வேதனையாக இருந்தது.பாவம்
அவரது பிள்ளைகள்.அந்தநேரம் இதைப்பார்த்து என்ன துன்பமெல்லாம்
அனுபவித்தார்களோ!...எந்தப் பெண்ணுக்கும் ,எந்தப் பிள்ளைகளுக்கும்
இந்தநிலை ஏற்படக்கூடாது.மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு....

Sivakumar said...

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடிகை சாவித்திரி என்பதில் ஐயமில்லை. இறுதி நாட்கள் அவருக்கு இப்படி இருந்திருக்க வேண்டாம்.

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...