Wednesday, February 22, 2012

மாற்றம் தேவை - கல்வி முறையிலும், சமுதாயத்திலும்


ந்தப் பதிவு நான் எழுதக் காரணம், என்னை யோசிக்க வைத்த, சமீபத்தில் நடந்த மூன்று விசயங்கள். அவைகள்;

1. பிப்ரவர் -9 ந்தேதி அன்று சென்னை எக்மோரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை உமா மகேஸ்வரியை, 9ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்த கொடூரம்.

2. நான் படித்த உடுமலைப்பேட்டை ஏ.நாகூர், ஆர்.கே.ஆர் பள்ளியில் ,பிப்ரவரி -15 அன்று அனுஜ் என்ற 11ம் வகுப்பு மாணவனை எக்கனாமிக்ஸ் ஆசிரியர் "மஹேஸ்வரன்" பயங்கரமாக அடித்து உடலாலும் மனதாலும் துன்புறுத்தியதால், ஹாஸ்டலில் நைலான் கயிற்றில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்.



3. அதே பள்ளியில் அதற்கு முந்தைய மாதம் கிரிஷ்ணகுமார் என்ற 10ம் வகுப்பு மாணவனும் இறந்த சம்பவம்.


இனி கட்டுரைக்கு செல்லலாமா!

இப்படிப்பட்ட கொடூரமான சம்பவங்கள் நிகழ்வதற்கு, எனது பார்வையில்  மூன்று காரணங்களை முன் வைக்கிறேன்.

ஒன்று நமது கல்வி முறை, இரண்டு பள்ளிகளின் வணிக நோக்கத்தை ஒட்டிய நிர்வாகம், மூன்று பெற்றோர்களின் கவனமின்மை.

இனி ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

1. பள்ளிக்கல்வி முறை:

மது பெற்றோர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடைய இளமை காலங்களில் எல்லாம் குருகுலம் என்ற பெயரில் தான் கல்வி கற்பிக்கப் பட்டது. அந்தக் காலக் கட்டங்களில் ஆசிரியர்களின் மீதான மரியாதையும் பயமும் மாணவ/மாணவியர்-களுக்கு நிறைய இருந்தது. அதற்கப்புறம் காலத்தின் மாற்றத்திற்கேற்ப கல்வி முறையில் மாற்றம் வந்தாலும் சமூகத்தில் ஆசிரியர்கள் மீதான மரியாதையும், பயமும் சில வருடங்கள் வரை அப்படியேதான் இருந்தது. இப்போது மரியாதை குறைந்து விட்டது. பயமும் குறைந்து விட்டது.

பொதுவாகவே, மாணவ/மாணவியர்-கள் ஆசிரியர்களைக் கண்டு பயப்படக் காரணம் ஒழுங்கின்மைக்கும், ஒழுங்காக படிக்காததற்கும் தரப்படும் தண்டனைகள்தான். ஒரு சில பள்ளிகளில் பிரம்பைக் கொண்டு சுமாராக அடிப்பது அல்லது கன்னத்தில் அறைவது என்ற வகையில் அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகள் நார்மலாக இருக்கும். அரசுப் பள்ளிகளில் பெரும்பாலும் இப்படித்தான் கொடுக்கப்படுகிறது. ஆனால் ஒரு சில பள்ளிகளில்(முக்கியமாக தனியார் பள்ளிகள்)  தண்டனைகள் பயங்கரமாக இருக்கும். கிட்டத்தட்ட போலிஸ் ஸ்டைல் என்று கூட வைத்துக் கொள்ளலாம். ரூமிற்குள் மாணவர்களை அடைத்து வைத்து, காட்டு மிராண்டித்தனமாக அடிப்பது. பெயில் ஆக்கிவிடுவேன். டி.ஸி கொடுத்து விடுவேன் என்று பயமுறுத்துவது போன்ற வகையில்தான்  மாணவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.

(நான் படித்த உடுமலைப்பேட்டை ஏ.நாகூர், ஆர்.கே.ஆர் பள்ளியில் போலிஸ் ஸ்டைலில் தான் மாணவர்களுக்கு தண்டனைகள் கிடைக்கும். அடிப்பதில் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு ஸ்டைல். மேலும்  கோவை, திருப்பூர், பொள்ளாச்சி முழுக்க அடிப்பதற்கு பேர் பெற்ற பள்ளி இதுதான். பரிட்சையில் பெயிலானால் சுமார் 20 நிமிடங்கள் அடி கிடைக்கும். தவறு செய்தால் போலிஸ் ஸ்டைல்தான். அப்போதெல்லாம் எங்கள் வகுப்பில் உள்ள அனைவரின் பேக்கிலும் புத்தகங்கள் இருக்கிறதோ இல்லையோ..நிச்சயம் "அயோடக்ஸ்" பாட்டில் இருக்கும். அடி வாங்க பயப்பட்டே, நான் பள்ளிப்பருவத்தில் தவறுகள் செய்யவில்லை. மேலும் ஆசிரியர்களிடத்தில் கொஞ்சம் நல்ல பேரையும் வாங்கியிருந்தேன்.அதனால் தப்பித்தேன்).

அதிக மெச்சூரிட்டி இல்லாத மாணவ பருவத்தில் , மாணவ/மாணவியர்-கள் பயங்கரமான அடிக்கப்படுவதாலும், பயமுறுத்தப்படுவதாலும்தான் , தற்கொலை, கொலை போன்ற விசயங்கள் அவர்களிடத்தில் நடக்கின்றன. இதனை கருத்தில் கொண்டுதான் அரசு, ஆசிரியர்கள் இனி மாணவர்களை அடிக்கக் கூடாது என்று 2006ம் ஆண்டு முதல் சட்டத்தை இயற்றியது. இது சம்பந்தமாக விசாரிக்க National Commission for the Protection of Child Rights (NCPCR) என்ற அமைப்பையும் கூட உருவாக்கியது. அது "கார்ப்பரல் பனிஷ்மெண்ட்"(Corporal Punishment) என்ற பெயரில் பள்ளிகளில் மாணவர்களுக்கு கொடுக்கும் தண்டனைகளை வரைமுறைப்படுத்தி எல்லா பள்ளிகளுக்கும் உத்தரவு அளித்தது. ஆனால் என்னதான் அமைப்பை உருவாக்கி, நெறிப்படுத்தினாலும், பழைய பாணியில் மாணவர்களுக்கு தண்டனைகளைத் தரும் தனியார் பள்ளிகள் இன்னமும் உள்ளன. அரசும் இதனைக் கண்டுகொள்வது இல்லை. நான் படித்த அந்தப் பள்ளியில் இன்னமும் அப்படித்தான் நடக்கிறது. அதனால்தான் மேற்சொன்ன தற்கொலை சம்பவம் நடந்திருக்கிறது.

அரசு பள்ளிகளில் தரப்படும் தண்டனைகள் நார்மலாகத்தான் பெரும்பாலும் இருக்கும். அதற்கும் காரணம் இருக்கிறது. அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள்
ஒரு சிலர், மாணவர்களின் நன்னடத்தை, படிப்பு போன்ற விசயங்களில் கவனம் செலுத்தி தன் கடமையைச் செய்தாலும்,  நிறைய பேர், வெறுமனேதான் தன் பணியைச் செய்கின்றனர். மாணவர்கள் படித்தாலும், படிக்காவிட்டாலும் அவர்களுக்கு 30 ந்தேதி சம்பளம் வந்து விடும். அவ்வப்போது அரசியல்வாதிகளின் சூட்சும தந்திரத்தால் இன்கிரிமெண்டும்(Increment) கிடைத்து விடும். இந்த எண்ணத்தில் அவர்கள் வேலை செய்வதால்தான் அப்படிப்பட்ட அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருக்கிறது.

ஆனால் தனியார் பள்ளிகளின் நிலைமை வேறு. இன்றைய நடைமுறை வாழ்க்கையில், தனியார் பள்ளி நிறுவனர்கள் எவரும் சமுதாயத்திற்கு தொண்டு செய்யும் எண்ணத்துடன் பள்ளிகளை ஆரம்பிப்பதில்லை. இன்கம்டாக்ஸ் -லிருந்து தப்பிப்பதற்காகவும், வருமானத்தை பெருக்கிக் கொள்ளவும்தான் பள்ளிகளை கட்டுகின்றனர். மேலும் 100% தேர்ச்சி கொடுத்து, டாப் ராங்கில் தனது பள்ளி வந்தால்தான் என்ரோல்மெண்ட்(Enrollment) அதிகரிக்கும். பள்ளிக் கட்டணத்தை அதிகரித்து, பண வளத்தை பெருக்கலாம் என்ற எண்ணம்தான் அவர்களிடத்தில் மேலோங்கி இருக்கிறது. இப்படி வணிக நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகளின் நிர்வாகம் வணிக நோக்கத்தில்தான் செயல்படுகிறது. அதனால்தான் அப்படிப்பட்ட தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நிறைய வகையில் பிரஷர் கொடுக்கப்படுகிறது. அவற்றுள் முக்கியமானது "எடுக்கும் பாடங்களில் 100% தேர்ச்சி காட்டினால்தான் ஆசிரியருக்கு பணி நிரந்தரம் அல்லது இன்கிரிமெண்டும்(Increment)". இந்த வழிமுறைதான் இன்னமும் நிறைய தனியார் பள்ளிகளில் நடக்கிறது.

இப்போது இருக்கும் விலைவாசி ஏற்றத்தினால், இந்த மாதிரி நிர்வாகம் கொடுக்கும் பிரஷர்களை , ஆசிரியர்கள் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டு, அதற்காக உழைக்கின்றனர். ஆனால் அவர்களால் அத்தனை மாணவர்களையும் தேர்ச்சி பெற வைக்க முடியுமா? இது கொஞ்சம், முடியாத விசயம்தான். காரணமும் நமக்கு  தெரிந்ததுதான். ஒவ்வொரு மாணவனுக்கும் அல்லது மாணவிக்கும் அறிவுப்புலமை, புரிந்து கொள்ளும் தன்மை, ஞாபக சக்தி அனைத்தும் நிச்சயம் வேறுபட்டு இருக்கும். ஆரம்பத்திலிருந்தே சரியான அரவணைப்பு, கவனிப்பு இல்லாத மாணவர்கள்/மாணவிகளுக்கு தேர்வில் தேர்ச்சி பெறுவது கொஞ்சம் கடினமான வேலைதான். அதற்கு ஆசிரியர்களை கடிந்து கொள்வது என்ன நியாயம்? இந்த சமயத்தில்தான் பெற்றோர்களின் அரவணைப்பும் ,கவனிப்பும் மாணவ/மாணவிகளுக்கு தேவைப்படுகிறது.

கூட்டுக் குடும்பமாக இருந்த வரை, பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் சென்றாலும் வீட்டிலிருக்கும் பெரியவர்கள் அல்லது உடன் பிறந்தவர்கள் குழந்தைக்கு பாடம் எடுப்பர். கவனித்துக் கொள்வர். ஆனால் தனிக்குடித்தனம் தான் நல்லது என்ற சுயநல எண்ணம் இன்றைய பெண்களுக்கும் , ஆண்களுக்கும் இருக்கின்ற காரணத்தால்,  தனிக்குடித்தனத்தில் இருந்து கொண்டு, வேலைக்குச் செல்வதால் குழந்தைகளைக் கவனித்து, அரவணைக்க நேரமில்லாமல் அவதிப்படுகின்றனர்.

இப்படியிருக்கையில் குழந்தைகளின் அறிவுக் கூர்மை, புரிந்து கொள்ளும் தன்மை, ஞாபக சக்தி போன்றவற்றை கவனித்து, அவர்களை மேம்படுத்துவம் பணியை  முதலில் பெற்றோர்கள் செய்ய வேண்டும். அதற்கப்புறம்தான் ஆசிரியர்களின் பங்கு வருகிறது.

மேலும் இன்றைய சூழலில் ஒரு மாணவனுக்கோ அல்லது மாணவிக்கோ பாடங்கள் புரியாவிட்டாலும் கூட அதனை மனப்பாடம் செய்ய வைத்து, தேர்வு எழுதி அதிக மார்க் வாங்கும் நடைமுறையைத்தான் ஒவ்வொரு பள்ளியும் செய்கிறது. ஒரு மாணவனால் அது முடியாத பட்சத்தில்தான் இது போன்ற தண்டனைகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு அறிவில்லாதவர்களாகவும், முட்டாளாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். அந்த மாணவனிடத்தில் தாழ்வு மனப்பான்மையை பள்ளி பருவத்திலேயே விதைத்து விடுகின்றனர், அதனால் பாதிக்கப்படும் மாணவன் அல்லது மாணவி கடைசி வரை அதே தாழ்வு மனப்பான்மையுடனே வளர்ந்து ஆளாகி, திறமையற்றவர்களாக நினைக்கப்படுகின்றனர். எவ்வளவு பெரிய கொடுமை இது. இதுதான் இன்றைய கல்வி முறை செய்கிறது. அதனால்தான் தாழ்வு மனப்பான்மை விதைக்கப்பட்ட ஒரு மாணவன்  கொலை செய்யும் அளவுக்கு மாறி விடுகிறான்.


ஒரு பாடத்தை, மனப்பாடம் செய்து அதிக மார்க் வாங்குபவன் பெரிய அறிவாளி என்றும், அதை செய்ய முடியாத ஒருவன் முட்டாள் என்றும் கூறும் வழக்கத்தை பள்ளியும், சமுதாயமும் நிச்சயம் மாற்றிக் கொள்ளவேண்டும். இதைத்தான் சமீபத்தில் வெளி வந்த "தோனி" படம் ஆணித்தரமாக வலியுறுத்தியது. நல்ல கருத்தைச் சொன்ன இந்தப் படம் வியாபார ரீதியில் வெற்றி பெறவில்லை. ஏதோ ஒரு சில படங்கள்தான் சமூதாயத்திற்கு நல்ல நல்ல கருத்துக்களைச் சொல்கிறது. அதனை நாம் ஊக்குவிக்காமல் , காதலையும் , காமத்தையும், ரெளத்திரத்தையும், வன்மத்தையும் தூண்டும் திரைப்படங்களை கூட்டத்தோடு போய்ப் பார்த்து சமுதாயத்திற்கு "ரொம்ப்ப்ப" நல்லது செய்வதுதான் வாடிக்கையாகவே உள்ளது.

என் மனதில் நினைப்பது இதுதான்.
ஒவ்வொரு மாணவ/மாணவிக்கும் நிச்சயம் எதோ ஒரு விசயத்தில் அதிக ஆர்வமும், திறமையும் இருக்கும். அதனை தெரிந்து அதற்கேற்ப அவர்களை உருவாக்குவதுதான் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தலையாய பணி. வெறுமனே 100% தேர்ச்சி என்று சொல்லிக் கொண்டு மார் தட்டிக் கொள்வதை விட ஒவ்வொரு மாணவர்களிடத்திலும் தன்னம்பிக்கையை வளர்த்து, அவர்களுக்கேற்ற துறையில் தலை நிமிரச் செய்து, அதனை ஒவ்வொரு பள்ளியும் விளம்பர படுத்தினால் நிச்சயம் சமுதாயத்தில் மாற்றம் நடக்கும்.

எல்லாம் சரி..இந்தப் பூனைக்கு மணி கட்டுவது யார்? நிச்சயம் அரசுதான். அரசு செய்யாவிட்டாலும், தனியார் பள்ளிகள் சுயமாகவே செய்யலாம், நிச்சயம் அவர்களின் வணிகம் பாதிக்கப்படாது என்பது என் எண்ணம்.
(பதிவு நீ...ளமாக இருப்பதால் இதன் தொடர்ச்சியை நாளை வெளியிடுகிறேன்..)

##############################################################

6 comments:

deepak said...

guna san, really good article.. thought provoking.. in my school no such incidence took place as the management always protects the rights of the students. also the school mainly focus on bringing out the extra curricular talent of the students. they never force us to study but always encourage us studying by giving small gifts to students whenever we answer in class for the questions raised. these kind of encouragement always helped us to study well. and more importantly our school did not have any ranking system or grading system or even total marks scored. this is to avoid any discrimination between students. I studied in madurai TVS LAKSHMI...

jeeva said...

குணா சார் ரொம்ப நல்ல விசயத்தை சொன்னீர்கள். என்னுடைய நன்றிகளும் வாழ்த்துகளும். இது போன்ற நல்ல தகவல் மென்மேலும்
இடைவிடாது தர வேண்டும். ஒரு ஆசிரியராக என்ன செய்ய வேண்டும்
என்று தெரிந்தாலும் அதை என்னால் செய்ய முடியாது. ஒரு பெற்றோராக நான் என்ன செய்ய வேண்டுமென்று தெரிந்து கொண்டேன் அதை நிச்சயமாக சிறப்பாக செய்வேன். நன்றி வணக்கம்.

N.H. Narasimma Prasad said...

இன்றைய கல்வி முறையை பற்றி மிக அழகாகவும், ஆழமாகவும் அலசியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி நண்பரே.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பதிவு சார் ! தொடருங்கள் !

Unknown said...

sir wats ur mobile num am madhan chandran vijay tv program producer...kalvi kalam nu oru program start panrom...athuku unga interview vendum..so pls call my num 8939086764

Unknown said...

sir wats ur mobile num am madhan chandran vijay tv program producer...kalvi kalam nu oru program start panrom...athuku unga interview vendum..so pls call my num 8939086764

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...