Monday, February 27, 2012

கேள்வி - பதில் : 10

1.கேள்வி: இன்றைய அரசியல்வாதிகளிடத்தில் லஞ்சம், ஊழல் நிறைந்திருப்பதுபோல், அன்றைய குறுநில மன்னர்களிடத்திலும் லஞ்சம் வாங்கும் பழக்கம் இருந்ததா?
[செல்வன்,கரூர்]


பதில்:
தாராளமாக! மனிதனுக்கு, மூளை வேலை செய்ய ஆரம்பித்ததிலிருந்து லஞ்சமும் ஊழலும் ஆரம்பித்து விட்டன. அந்தக் கால மன்னர்கள் "கப்பம்" என்ற பெயரில் லஞ்சம் வாங்கினார்கள்! சில மொகலாய மன்னர்கள் ஆட்சியில் இலஞ்சம் தலைவிரித்தாடியது உண்டு. ஒளரங்கசீப் மகன் காம்பக்ஷ், சிவாஜியின் வாரிசு ராஜாராமுக்கு செஞ்சியில் லஞ்சம் கொடுத்து "சமாதான உடன்படிக்கை" செய்து கொண்ட விசயம் ஒளரங்கசீப்பிற்கு தெரியவந்து, கோபத்தில் மகனையே சிறையில் தள்ளினார். பிறகு வெள்ளைக்காரர்களும், நம்ம குறுநில மன்னர்கள் பலருக்கு லஞ்சம் கொடுத்து தங்கள் வழிக்கு கொண்டுவந்தார்கள்.ஆகவே, அன்றைய மன்னர்களும் சரி, இன்றைய ஜனநாயக மன்னர்களுக்கும் சரி, லஞ்சமே மஞ்சம். அது இல்லாதவர்கள் மிகவும் அரிது.

2. கேள்வி:
டாக்டர், ஆசிரியர் - ஒரு சமூகத்தில் யாருடைய பங்கு மிக அவசியம்?
[சசி,கோவை]




பதில்:
ஆபத்து சமயத்தில் டாக்டர் தேவை. ஆசிரியர் எப்போதும் தேவை! ஆசிரியர்கள் எதிர்கால சமுதாயத்தையே உருவாக்குகிறவர்கள். அப்படி உருவாகும் சமுதாயம் ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றக்கூடிய வல்லமை பெற்றது.

3. கேள்வி:
"எனக்கு ஆயிரத்தெட்டு பிரச்சனைகள்" என்று அடிக்கடி கூறுகிறார்களே. அதென்ன ஆயிரத்தெட்டு! வேற நம்பர் இல்லையா? அதில் என்ன அப்படி விசேஷம்?
[சதிஷ்குமார்,திருச்சி]


பதில்:
என்னுடைய ஆராய்ச்சியின்படி அது ஆயிரத்தட்டு! அதாவது 'ஆயிரம் தட்டுகள்' கொள்ளும் அளவுக்குப் பிரச்சனைகள்! பிற்பாடு அது மருவி 'ஆயிரத்தெட்டு' என்றாகியிருக்கும்.

4. கேள்வி:
குழந்தைகள் சொல்வதை, காது கொடுத்துக் கேட்கும் வழக்கம் உண்டா?
[மனோ,கோவை]

 

பதில்:
நிச்சயமாக! சில சமயம் குழந்தைகள் பெரியவர்களுக்கேகூட வாழ்க்கையின் அர்த்தங்களைப் புரிய வைப்பார்கள்! பலர் காது கொடுத்து கேட்பதில்லை. அது அவர்களின் துரதிர்ஷ்டம். குழந்தைகளின் தூண்டுதலால் பெரிய சாதனைகள் நிகழ்ந்திருக்கின்றன. யூ.எஸ்.-ஸில், ஸாண்ட்டாஃபே என்கிற ஊரில் எட்வின்லேண்ட் என்பவர் தன் மூன்று வயது மகளோடு கண்காட்சி ஒன்றை, சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் தன் மகளை போட்டோ பிடிக்க, "இப்பவே அந்த போட்டோவைப் பார்க்கணும்!" என்று குழந்தை அடம்பிடிக்க, "உடனே போட்டோ வராதும்மா கண்ணா!" என்று தந்தை சமாதானப்படுத்த, "எல்லாம் வரவைக்க முடியும்.இல்லேன்னா உடனே போட்டோ வரமாதிரி ஒரு கேமரா வாங்கித்தாங்க!" என்று தொடர்ந்து பிடிவாதம் பிடிக்க, எட்வின் லேண்ட் கண்டுபிடித்ததுதான் இன்று உலலெங்கும் விற்பனையாகும் போலராய்டு கேமரா!

5. கேள்வி:
ஒவ்வொரு விசயங்களையும் குழந்தைகளுக்கு எப்படி கற்றுத்தரவேண்டும்?
[மனோ,கோவை]

 

பதில்:
ஒரு குட்டிக் கதை.
பள்ளி முடிந்து வந்த தன் குழந்தையை உட்கார வைத்து வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தார் அம்மா. ஒவ்வொன்றையுமே ஒரு முறைக்கு இரு முறை சொல்ல வேண்டி இருந்தது. இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருப்பதால் அம்மா சீக்கிரம் சலிப்படைந்து கத்த ஆரம்பித்தார். “ஒவ்வொன்னையும் எத்தனை தடவ சொல்லித் தர்றது. ஒரு தடவ சொன்னா புரிஞ்சுக்கிறதுல்ல.. உன் வயசுல உள்ள குழந்தைங்க எல்லாம் தானா உட்கார்ந்து ஹோம் ஒர்க் செய்யுதுங்க..” என்று துவங்கிய அர்ச்சனை இரவு உணவு வரை நீண்டது.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. புதிதாக வாங்கியிருந்த இரண்டு சக்கர வாகனத்தை எப்படி ஓட்ட வேண்டும் என்று குழந்தையின் அம்மாவுக்கு அவனது அப்பா சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். வண்டியை ஸ்டார்ட் செய்து காண்பித்து, ‘இப்போது நீ செய்’ என்று அம்மா கைக்கு வண்டி வரும். ஏறி உட்கார்ந்து பட்டனை அழுத்த, வண்டி ஸ்டார்ட் ஆவதற்கான சத்தம் எல்லாம் செய்து கடைசியில் போக்கு காட்டி அணைந்து விடும். அப்பா சலித்து விட்டார். கத்த ஆரம்பித்தார்.. “ஒவ்வொன்னையும் எத்தனை தடவ சொல்லித்தர்றது. ஒரு தடவ சொன்னா புரிஞ்சுக்கிறதுல்ல..”

இதை பார்த்துக் கொண்டிருந்த குழந்தை குறுக்கிட்டு, “திட்டாம சொல்லிக் கொடுங்கப்பா.. திட்டிக்கிட்டே சொல்லிக்கொடுத்தா பதட்டத்திலேயே தப்புத்தப்பாதான் வரும். பாவம்பா அம்மா. ப்ளீஸ் திட்டாம சொல்லிக் கொடுங்ப்பா.” என்று கூறியது.குழந்தை இப்படிச்சொன்னதும் வண்டியிலிருந்து தாவிக்குதித்த அம்மா குழந்தையை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து சொன்னார், “இனிமேல் நான் உனக்கு கற்றுக் கொடுக்கும் டீச்சர் இல்லை என்று.


இந்தக் கதையைப் படித்ததும் இப்போது, உங்களுக்கு "எதைச் செய்யனும்!எதைச் செய்யக்கூடாது" என்று தெரிந்திருக்குமே!

############################################################


6 comments:

ADMIN said...

ஒவ்வொரு கேள்வியும்.. கேள்வித்தொடர்பான பதிலும் அருமை..!!

RAMA RAVI (RAMVI) said...

அனைத்து கேள்வி பதில்களும் அருமை. கடைசி கேள்விக்கான பதில் கதை சிறப்பாக இருக்கு.

Unknown said...

மாப்ள விஷயங்கள் புரிந்தது..கடைசி பல்ப் நானும் வாங்கி இருக்கேன் ஹிஹி!

திண்டுக்கல் தனபாலன் said...

நான் உங்களிடம் இந்த பதிவை எதிர்ப்பாக்கவில்லை ! சூப்பர் ! நன்றி சார் !

N.H. Narasimma Prasad said...

ஒவ்வொரு கேள்வி பதிலும் ரொம்ப அருமையாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி.

kartiq roshan said...

தகவல்கள் அருமை நண்பரே எம் தளத்திற்க்கு தங்களை வரவேற்கிறேன்

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...