Sunday, February 26, 2012

மாற்றம் தேவை - கல்வி முறையிலும், சமுதாயத்திலும்(2)

ள்ளிகளின் கல்வி முறையைப் பற்றியும் அதனை மாற்றுவது பற்றியும் சென்ற பதிவில்  நான் சொல்லியிருந்தேன். பதிவின் தொடர்ச்சியை உடனே வெளியிட முடியவில்லை(கொஞ்சம் வேலை இருந்ததால்..!). பதிவின் தொடர்ச்சியை இப்போது இங்கு வெளியிட்டுள்ளேன். படித்துப்பாருங்கள். அப்புறம் பதிவின் முதல் பகுதியைப் படித்து விட்டு இந்தப் பதிவைப் படிக்கவும். இல்லையேல் நான் பதிவு எழுதிய நோக்கம் நிறைவேறாது.


முதல் பகுதியின் லிங்க் :

மாற்றம் தேவை - கல்வி முறையிலும், சமுதாயத்திலும்


இதன் தொடர்ச்சி....

2.பள்ளிகளின் வணிக நோக்கத்தை ஒட்டிய நிர்வாகம்:

தனியார் பள்ளிகளின் செயல்களை வைத்துத்தான் இரண்டாவது காரணத்தை நான் இங்கு சொல்லியுள்ளேன். அதற்காக அரசுப் பள்ளிகளை நான் பாராட்டவில்லை என்றில்லை. அங்கும் தவறிருக்கிறது.

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பெரும்பான்மை ஆசிரியர்களுக்கு "எப்போது சம்பளம் வரும் 30ந்த் தேதியா?31ந்த் தேதியா?" என்ற விசயத்தில் இருக்கும் ஆர்வத்தை விட கற்பித்தலுக்கு தரும் ஆர்வம் மிகவும் குறைவு. மேலும் தான் ஒரு கவர்ன்மெண்ட் சர்வெண்ட்..தன்னை எவரும் அச்சுறுத்த முடியாது என்ற எண்ணத்தையும் அவர்கள் கொண்டிருப்பதால் கற்பித்தலை ஒரு தலையாய கடமையாக நினைக்காமல் இருக்கின்றனர். இதற்கு அரசுதான் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனால் எந்த அரசு ஒரு நல்ல முடிவை எடுக்கும்? என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. காரணம் அரசை ஆளும் அனைத்துக் கட்சிகளும் ஆசிரியர்களை தனது ஓட்டு வங்கியாக அல்லவா எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

பள்ளி மாணவ/மாணவிகளுக்கு ஒரே "சீருடை"  என்ற விசயத்தை எப்போது கொண்டு வந்தார்கள் என்று எந்தக் கல்வியமைச்சர்களுக்காவது தெரியுமா? தெரியவில்லையெனினும், அதனை பள்ளிகளுக்கு கொண்டு வந்ததன் நோக்கம் நிச்சயம் தெரிந்திருக்கும். நமக்கும் கூட தெரியும்.


 
ஏழை,பணக்காரன் என்ற வித்தியாசத்தை மாணவ/மாணவிகளின் மனதில் விதைக்கக் கூடாது என்ற எண்ணத்தில்தான் கி.பி. 1961-ல் "சீருடை" என்ற திட்டம் இயற்றப்பட்டது.

ஆனால் இன்றைய தனியார் பள்ளிகளோ சீருடை கொண்டு வந்ததின் நோக்கத்தை மறந்து விட்டு , வெறும் வணிக நோக்கத்தை மட்டும் எண்ணிக் கொண்டு ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சீருடை என்றெல்லாம் ரூலை கொண்டு வந்து இம்சிக்கின்றனர். இதில் அமைச்சர்கள் "பினாமி" பெயரில் ஆரம்பித்த தனியார் பள்ளிகளும் அடக்கம்.


பள்ளிகளை ஆரம்பிக்கும் அனைத்து நிறுவனர்களுக்கும், தனது பள்ளி நம்பர் ஒன் வரவேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இருக்கிறது. அதற்காக, ஆங்கிலேயர்கள் ஆரம்பித்து வைத்த "குமாஸ்தாவை உருவாக்கும் கல்வி முறையை" இன்னமும் பின்பற்றி அதில் சிறந்த குமாஸ்தாவை உருவாக்க  பல்வேறு விதமான கடுமையான விசயங்களை நடைமுறைப் படுத்தி வருகின்றனர். ஆசிரியர்களும் வேறு வழியின்றி தனது பணியைச் செய்கின்றனர்.
இதற்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது. மாணவ/மாணவிகளை "எதிர்கால தூண்கள்" என்று வெறுமனே சொல்லுவதை விட்டு விட்டு பல்வேறு திறமைகளையும், தன்னம்பிக்கையையும் , ஆளுமைத்திறமையையும்  கொண்ட எதிர்காலத் தூண்களாக மாற்றும் வகையில் தனது நிர்வாகத்தை சீர் படுத்தினால் நிச்சயம் மாற்றம் வரும். அனைத்துப் பள்ளி நிறுவனர்களும் சேர்ந்து நல்ல முடிவெடுத்து, நிர்வாகத்தில் அதனை நடைமுறைப் படுத்தினால் நிச்சயம் அவர்களது வணிக வளர்ச்சி பாதிக்காத வகையில் பள்ளியின் நலம் மேன்மை பெறும்.

3. பெற்றோர்களின் கவனமின்மை:

இன்றைய இயந்திர உலகில் , கழுத்தை இறுக்கும் விலை வாசி உயர்வு, பால் விலை உயர்வு, காய் கறி விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு,  பள்ளி/கல்லூரி கட்டண உயர்வு இப்படி ஒவ்வொரு விசயங்களிலும் உயர்வுகளைக் கண்டு, இவற்றையெல்லாம் சமாளித்து, தனது சமூக வாழ்க்கையிலும் உயரங்களைக் கொண்டு வருவதற்காகத்தான் ஒவ்வொரு குழந்தைகளின் பெற்றோர்களும் வேலைக்குச் செல்கின்றனர். ஆதலால்தான் தனது குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட இயலாமல் போகிறது. 

தனது குழந்தை என்ன பேசுகிறது. என்ன கேட்கிறது. என்னென செய்கிறது.என்ன விரும்புகிறது. என்பதை எல்லாம்  ஒவ்வொரு பெற்றோர்களும் அறிந்து கொள்ள நினைத்தாலும்,  அதனை தினமும் கவனித்து, குழந்தையை வளர்த்த நேரமின்மையால் அவதியுறுகின்றனர். இப்படி அவதிப்படக் காரணமும் அவர்களேதான்.

காரணம், சென்ற பதிவில் நான் சொன்னது போல், கூட்டுக் குடும்பத்தை தவிர்த்து, தான் , தன் கணவன் , தன் குழந்தை என்று சிறு குடும்பமாகவும், தனிக்குடும்பமாகவும் வாழ ஆரம்பித்ததால்தான் இன்றைய ஆண்களும், பெண்களும் இப்படியெல்லாம் அல்லோலப்படுகின்றனர். ஒரு விதத்தில்  தனிக்குடும்பம் என்பது நிச்சயம் அவரவர் விருப்பம் தான். ஆனால் குழந்தையின் நலனையும் மனதில் நினைக்க வேண்டும். இந்தச் சமூக வாழ்க்கையில், ஈகோ என்ற விசயம்தான்  ஒவ்வொருவரையும்  தனிக்குடும்பத்திற்குள் கொண்டு வந்திருக்கிறது. இதனை நான் ஆணித்தரமாக சொல்கிறேன்.

ஒவ்வொரு பெற்றோர்களும் "தனது பிள்ளை கலெக்டர், விஞ்ஞானி, டாக்டர், எஞ்சினியர்,வக்கீல், பாடகன், பாடகி இப்படியெல்லாம் ஆக வேண்டும்" என்பதையெல்லாம் நினைப்பதை விட்டு விட்டு, அவர்களின் திறமையைக் கண்டு, அந்தத் துறையில் அவர்கள் சாதனை செய்ய ஒரு வழிகாட்டியாக மட்டும் தான்  இருக்க வேண்டும். அதேபோல் பிள்ளைகள் தங்கள் கருத்துக்களை பெற்றோர்களிடத்திலும், ஆசிரியர்களிடத்திலும் சுதந்திரமாக பகிர்ந்து கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். இப்படிச் செய்தால் நிச்சயம் ஒவ்வொரு பிள்ளைகளின் மன நிலையை பெற்றோர்களும்  ஆசிரியர்களூம் புரிந்து கொண்டு அவர்களை பக்குவப்படுத்தி வளர்த்த முடியும்.  ஒவ்வொரு மாணவ/மாணவிக்கும்  இருக்கும் பய உணர்வையும், தாழ்வு மனப்பான்மையயும் நிச்சயம் அழித்து விடலாம்.

மேலும் பொழுது போக்கு சார்ந்த விசயங்களை அளவோடு குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது. பெண்கள் யாரேனும் சீரியல்கள் பார்ப்பதை விரும்பினால், குழந்தைகளையும் உங்கள் விருப்பத்திற்குள் கொண்டு வராதீர்கள். சீரியல்கள் பார்ப்பதால் உங்களுக்கு நேர விரயம்தான். அதில் பெரும்பாலும்  குழந்தைகள் கற்றுக் கொள்ளும் நல்ல விசயங்கள் காட்டப்படுவதில்லை.

பிள்ளைகளுக்கு சிறந்த நண்பர்களாகவும், சிறந்த வழிகாட்டியாகவும் இருந்தாலே நிச்சயம் அந்தப் பிள்ளைகள் சிறந்த பெற்றோர்களாகப் எண்ணுவர்.


இனி, பிள்ளைகள் செய்யக்கூடாத சில விசயங்களைச் சொல்கிறேன்.

தனது பெற்றோர் படிக்காதவர்கள் என்பதற்காகத் "தான்" எல்லாம் தெரிந்தவன் போலக் கருதக்கூடாது.

தன்னால் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் பேச முடியும். தனது பெற்றோர்களால் முடியாது என்றெல்லாம் நினைத்து தலைக்கனம் கொள்ளக் கூடாது.

பெற்றோர்களை முட்டாள்களாகப் பார்க்கக் கூடாது.

"தான்" எடுக்கும் முடிவுதான் சரி என்ற மனப்பான்மையையும் ஆதரிக்ககூடாது. ஏனெனில் ஒவ்வொரு நேரத்திலும் நாம் எடுக்கும் முடிவுகள் மாறிக்கொண்டே இருக்கும். இன்று சரியாகத் தெரிந்த ஒன்று இன்னொரு நாளில் தவறாகத் தெரியும். எனவே "முடிவு" எடுக்கும் விசயத்தில், வாழ்க்கையில் பல விசயங்களில் பக்குவப்பட்ட பெற்றோர்களைக் கேட்டு விவாதிப்பது மிக்க நலம்.


இங்கு நான் சொன்ன விசயங்களை நாம் செய்ய முயற்சித்தால் நிச்சயம் நமது குழந்தைகள் தன்னம்பிக்கையும், ஆளுமைத்திறமையும் கொண்ட
அறிவாளியாகவும், ஒழுக்கமுள்ளவர்களாகவும் வருவர்.

(பதிவு முடிந்தது).
############################################################


3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பதிவு சார் !

RAMVI said...

சிறப்பான பதிவு,குணா.
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எது பிடிக்கும் என்பதை தெரிந்து,புரிந்து கொண்டு அதில் அவர்கள் முன்னேற உதவி புரிய வேண்டும்.

N.H.பிரசாத் said...

அருமையான பதிவு நண்பரே. இன்றைக்கு நடக்கும் 'கல்வி வியாபாரத்தை' பற்றி நானே ஒரு பதிவு போடலாம் என்றிருந்தேன். நீங்கள் முந்திக் கொண்டீர்கள். பகிர்வுக்கு நன்றி.

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...