நான் கனவுகள் காண்பவன் என நீங்கள் கூறலாம். ஆனால் நான் ஒருவன் மட்டுமே கனவுகள் காண்பவனல்ல.
மிகவும் புகழ் பெற்ற அமெரிக்க இசைக் கலைஞர் ஜான் லெனான் எழுதிய இந்த வரிகள் ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு மிகவும் பிடித்தமானது. ஜான் கண்ட கனவுகள் பலவற்றை, ஏன் அனைத்தையும் நனவாக்கிக் காட்டியவர். அவர் நனவாக்கிக் காட்டிய முயற்சியின் பலன்கள் நமக்கு நன்றாக தெரிந்தவை. பலரும் அன்றாடம் பயன்படுத்துபவை. ஆனால் அவற்றைப் பற்றித் தெரிந்த அளவு நமக்கு அவரைப் பற்றித் தெரியாது. அவரது வாழ்க்கை, கனவிலும் கற்பனை செய்ய முடியாத திருப்பங்களையும் விசித்திரங்களையும் கொண்டது.
நம் வீட்டில் கணிப்பொறி இருப்பதற்குக் காரணமானவர் பில் கேட்ஸ் என்று முடிவுக்கு வர வேண்டாம். பில் கேட்ஸ் நடை பழகிக் கொண்டிருந்த காலத்தில் அவர் ஒலிம்பிக்ஸ் ஒட்டத்தில் தங்கப் பதக்கம் வாங்குமளவு முன்னேறியிருந்தார். பில் கேட்ஸ் அவ்வளவு பணம் சம்பாதிக்க அவரும் ஒரு காரணம். ஏன், அவர் தான் காரணம் என்றும் சொல்லலாம்.. மென்பொருள் எழுதுபவரா என்று கேட்க வேண்டாம். சம்பிரதாயத்திற்குக் கூட மென்பொருள் மொழிகளில் ஒரு வரி அவர் எழுதியதில்லை. மென்பொருளின் மகத்துவத்தை மிகவும் லேட்டாகவே புரிந்துக் கொண்டவர்!
கணினியை வீட்டிற்குள் கொண்டு வந்த அவரால், வீட்டுக்குள் வரும் உலகமான இணையத்தில் இணைய முடியவில்லை. ஆனால் இணையம் சிருஷ்டிக்கப்பட்டதே அவரின் சிருஷ்டியில்தான்.
கணினித் துறையின் முதல் அடியை எடுத்து வைத்த அவர், தமது முதல் கனவான கணினியைக் கடந்து மூவிஸ், மியூசிக், மொபைல் என மூன்று உலகங்களின் தலையெழுத்தை மாற்றி எழுதி விட்டார்.
தற்காலத் தலைமுறை குழந்தைகள் கண்டுகளிக்க கார்ட்டூன் படங்களைத் தயாரித்தார், பலர் ஆஸ்கர் விருது வாங்கக் காரணமானார். உலகில் மொத்தமாக இருக்கும் பாடல்களை நம் பாக்கெட்டிற்குக் கொண்டு வந்தார். இசை இப்படித்தான் விற்கப்படும் என்ற வியாபார விதிகளை உடைத்தெறிந்தார். அமெரிக்க செல்போன் துறையைத் திகைக்க வைத்தார்.
ஸ்டீவ் ஜாப்ஸ் பெயர் உருவான விதம்:
சென்ற நூற்றாண்டில் உலகை மாற்றிய பெரும்பாலான கண்டுபிடிப்புகள் பிறந்தது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில்தான். ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்ததும் அங்கே தான்.
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஜோயன் கரொல் சியபல்-க்கும் (Joanne Carole Schieble) சிரிய நாட்டை சேர்ந்த அப்துல் பட்டா ஜான் ஜன்டாலிக்கும் (Abdulfattah John Jandali) உண்டான காதல் கருவாகியது.
அமெரிக்காவிலும் அக்காலத்தில் மணமாகாமல் குழந்தை பெற்றுக் கொள்வதைக் கேவலமாகத்தான் பார்ப்பார்கள். நாட்டை விட்டுப் போகமுடியாது. ஆனால் இடம் மாறலாமே? நம் ஊரில் குழந்தை பெற்றுக் கொள்வதை விட, ஏதாவது கண் காணாத ஊரில் பெற்றுக் கொள்வோம் என்று அவர்கள் முடிவு செய்த இடம் சான் பிரான்சிஸ்கோ!
படிப்பை முடித்து பட்டம் வாங்கினால்தான் கல்யாணம் என்று அவர்கள் இருவருக்குமிடையே உறுதிமொழி இருந்திருக்க வேண்டும். அல்லது கல்யாணமே வேண்டாம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் குழந்தை உண்டாகிவிட்டது. அந்நாளில் ‘கருக்கலைப்பு' உண்டு என்றாலும் அதுவும் ஆபத்தானது. எனவே, பிப்ரவரி 24, 1955-ல் பிறந்த அந்த ஆண் குழந்தையைத் தத்து கொடுப்பது என முடிவு செய்தனர்.
தத்தெடுக்கத் தயாராக இருந்த லாயர் ஒருவர், ஆஸ்தி இல்லாமல் இருந்திருப்பார் போல. பெண் பிள்ளைதான் வேண்டும் என ஆசையை மாற்றிக் கொள்ள, தத்தெடுக்க பதிவு செய்திருந்தவர்களில் அடுத்த இருந்த பவுல் ஜாப்ஸ் பவுலா ஜாப்ஸ் தம்பதிக்கு குழந்தை கைமாறியதன் விளைவு, அந்த குழந்தைக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற நாமகரணம் ஆனது.
பவுல் ஜாப்ஸ் யார்?
அமெரிக்காவின் இண்டியானா மாநில விவசாயி ஒருவருக்கு மகனாகப் பிறந்தவர், பவுல் ஜாப்ஸ். பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு கடற்படையில் சேர்ந்து, இரண்டாம் உலகப் போரில் சண்டை எல்லாம் போட்டு சான்பிரான்சிஸ்கோவிற்கு வந்து ஒய்வெடுத்துக் கொண்டு இருந்தார்.
ஒய்வாக ஒதுங்கிய இடத்தில் பவுலா என்ற பெண்ணைக் காதலித்து மணந்தார். மணந்த பின்பு பிறந்த ஊர்ப் பக்கம் போனாலும், கலிபோர்னியா காந்தமாய் கூப்பிட்டது. அது கலிபோர்னியாவின் மகிமை. மீண்டும் சான்பிரான்சிஸ்கோவிற்கே வந்து சேர்ந்தார். பவுலா, பவுல் ஜாப்ஸ் தம்பதிக்கு எல்லாம் நலமாய் இருந்தும் ஏனோ அவர்களின் கெட்ட நேரம் குழந்தை பிறக்கவில்லை. தத்து எடுக்கலாம் என்று அவர்கள் முடிவு செய்தபின் குழந்தை கிடைத்தும் கொஞ்ச முடியாத ஒரு சூழ்நிலை.
அம்மா கல்லூரிப் படிப்பை தாண்டவில்லை. அப்பா பள்ளிக்கூடத்தையே தாண்டவில்லை. இவர்களை நம்பி எல்லாம் எப்படிக் குழந்தையை தத்துக் கொடுப்பது என ஸ்டீவ் ஜாப்ஸை பெற்ற அம்மா பிடிவாதம் பிடிக்க, நாங்கள் படிக்கவில்லையென்றாலும் இவனைக் கல்லூரிப் படிப்பு வரை படிக்க வைப்போம் என்று பலவாறாக ஜாப்ஸ் தம்பதியினர் உறுதிமொழி தந்தபின்தான் தடங்கல் நீங்கி தத்து நிறைவேறியது. ஸ்டீவ் ஜாப்ஸிற்குப் பின்னரும் ஒரு பெண் குழந்தையை இவர்கள் தத்தெடுத்தனர்.
பள்ளிப் படிப்பு:
வாழ்வில் மிகப் பெரிதாக சாதித்தவர்களில் பெரும்பான்மையானவர்களுக்குப் பள்ளிப் படிப்பு பாகற்காயாகத்தான் இருந்திருக்கிறது. இவன் தேறாதவன் என்ற வாத்தியார்களின் வாக்கைப் பொய்யாக்கியவர்கள். இந்த விதிக்கு ஸ்டீவ் ஜாப்ஸும் விலக்கல்ல.
பள்ளிப் படிப்பு போரடிக்கிறதென வகுப்பில் பாம்புகள் விடுவது பட்டாசுகள் வெடிப்பது எனப் போக்கிரியாய் திரிந்துகொண்டிருந்தவரை வழிக்குக் கொண்டு வந்தவர். Imogene “Teddy” Hill என்ற அவரின் நான்காம் வகுப்பு வாத்தியாரம்மா. நன்றாகப் படித்தால் காசு, மிட்டாய், விளையாட்டுப் பொருள் எல்லாம் தருவதாகக் கூறி அவரின் கவனத்தை படிப்பின்பால் திருப்பினார். வாத்தியாரம்மாவின் வாக்குறுதிகளை எல்லாம் கேட்டு இந்த அம்மாவிற்கு கிறுக்காயிருக்குமோ என்று கூட சந்தேகப்பட்டதாகவும், அவர் மட்டுமில்லையென்றால் ஜெயிலுக்குப் போகுமளவு மோசமானவனாக மாறியிருப்பேன் என்றும் பிற்கால பேட்டியில் சொல்லி அந்தக் கல்விக் கடனை தீர்த்துக் கொண்டார் ஸ்டீவ் ஜாப்ஸ்.
வாக்குறுதியின் விளைவாக வீறுகொண்டு, விடாமல் படித்ததன் விளைவு, ஸ்டீவ்விற்கு டபுள் பிரமோஷன். ஆனால் மேல்வகுப்புகள் செல்லச் செல்ல, பள்ளி மீண்டும் பாகற்காயானது. பிறவிக் குணமான பிடிவாதம் எட்டிப் பார்த்தது. ஏன் எதற்கு எப்படி என்றெல்லாம் காரணமில்லை. பள்ளி பிடிக்கவில்லை. மாற்றினால்தான் ஆயிற்று என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தார். ஸ்டீவ் ஜாப்ஸின் பிற்காலப் பிடிவாதங்கள் போலவே இந்தப் பிடிவாதமும் பிரமாதமான பிள்ளையாரானது. சுபமான வாழ்விற்குப் பிள்ளையார் சுழியும் போட்டது.
புதுப் பள்ளிக்காக அவர்கள் குடியேறியிருந்த இடம் சுற்றி எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியர்கள். புதுப் பள்ளியும் எலக்ட்ரானிக்ஸ் கற்பிப்பதற்கு மிகவும் பெயர் பெற்றது. ஸ்டீவ் வளர்ந்தோரோ இல்லையோ அவரது எலக்ட்ரானிக்ஸ் அறிவு வளர்ந்தது..
[இன்னும் வளரும்...]
**********************************************
5 comments:
நல்ல கதைப்பா
இத்தனைத் தகவலும் ஒரே பதிவிலா? வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!!
ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய அருமையான தகவல்கள்.அவரின் வாழ்க்கையை பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது. தொடருங்கள்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்,குணா.
மேலும் தொடருங்கள்.......
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...