Wednesday, September 07, 2011

மற்றவை- ஸென் கதைகள்

         *  ஸென் கதைகள் *

பொதுவாக ஸென் கதைகள்  நீதி நியாயம் சொல்கிற கதைகள் அல்ல. கேட்டுவிட்டு மறந்து விடுகின்ற விடுகதைகள் அல்ல. ஆழ்ந்த தத்துவம் உள்ள அடக்கமான திருக்குறள் வடிவான கதைகள். இரண்டு வரியில் பெரிய தத்துவத்தை திருக்குறள் சொல்லவில்லையா. அதே போல ஒரு சிறுகதையை சொல்லி வாழ்வின் தத்துவத்தை, பிரமாண்டத்தை ஸென், க்வான் என்படும் இந்தக் கதைகள் முயற்சி செய்கின்றன.



உதாரணத்திற்கு ஒன்று. 

அது ஒரு மிகப் பெரிய மடாலயம். அதில் பல சீடர்களோடு ஒரு தலைமை துறவி இருந்தார். ஒவ்வொரு சீடராக ஞானம் பெற்று, குருவிடம் விடை பெற்று வெளியேறினார்கள். ஒரு சீடர் மட்டும் வெளியே போக அனுமதிக்கப்படவில்லை.அடுத்த வருடம் போகலாம், அடுத்த வருடம் போகலாம் என்று பல வருடங்கள் அந்த சீடனை இருக்க வைத்துவிட்டார்கள். அந்த சீடன் மனம் நொந்தான். ஒரு வருடத்தில் சின்ன பையன்கள் எல்லாம் வெளியேறி விடுகிறபோது, பண்ணிரண்டு வருடம் வேலை செய்தும் என்னை வெளியேற்றவில்லையே என்ன காரணம் என்று யோசித்தான். கோபமானான். நேரே குருவிடம் போனான்.
‘நான் நன்றாக பெருக்குகிறேன், நன்றாக வேலை செய்கிறேன், சுத்தமாக தோட்ட வேலை செய்கிறேன். உங்கள் துணிகளை எல்லாம் துவைக்கிறேன். சமையல் பாத்திரங்கள் எல்லாம் சுத்தம் செய்து வைக்கிறேன். அவ்வப்போது சமையலும் செய்து வைக்கிறேன். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருகிறேன். இவ்வாறெல்லாம் பணி செய்வதால் என்னை வெளியே அனுப்பாமல் நீங்களே எப்பொழுதும் என்னை வேலைக்காரனாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் வேலைக்காரனாக இருப்பதற்கு இங்கு வரவில்லை. இங்கு வந்தது ஸென் தெரிவதற்கு எனக்கு எப்பொழுது ஞானம் வரும். எப்பொழுது வெளியே அனுப்புவீர்கள். அவர்கள் எல்லாம் ஞானிகளா, நான் இல்லையா’ என்று உரத்த குரலில் கத்தினான்.

அவன் பேசத் துவங்கும் போதே குரு கெட்டிலில் உள்ள தேநீரை கோப்பையில் ஊற்றிக் கொண்டிருந்தார். அவன் தொடர்ந்து கத்திக்கொண்டிருந்தான். தொடர்ந்து குருவும் தேநீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அவன் இடையறாது கத்திக் கொண்டிருந்தான். குருவும் இடையறாது தேநீரை ஊற்றிக் கொண்டிருந்தார். தேநீர் கோப்பையில் வழிந்து, போப்பையிலிருந்து தட்டில் விழுந்து, தட்டிலிருந்து மேஜையில் விழுந்து, மேஜையிலிருந்து தரையில் விழுந்து மொத்த தேநீரும் கொட்டும் வரை குரு அசையவில்லை. தேநீர் மொத்தமும் கீழே வழிந்து ஓடியது. அந்த தேநீர் குவளையை டக்கென்று ஒரு சத்ததோடு அவர் மேஜையில் வைத்தார். அந்த சீடன் விழித்துக்கொண்டான். அவன் முகம் மலர்ந்தது. ‘எனக்கு ஞானம் வந்து விட்டது’ என்று சொன்னான். குரு அவனை வணங்கி ‘போய் வா’ என்று விடை கொடுத்தார்.

என்ன புரிகிறது. உள்ளுக்குள்ளே பொதிந்து வைத்துக் கொண்டிருந்து, இடையறாது மனம் பேசிக் கொண்டிருந்தால். மனம் பேசுவதை வாய் பேசிக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. உள்ளே இருப்பது மொத்தமும் வெளியே கொட்டி விடப்பட்டால், அப்பொழுது டக்கென்ற காலி ஓசை கேட்கும். உள்ளே காலியாக இருக்கிறது என்று எவனுக்கு தெரிகிறதோ அவனே ஞானி. இது போல பல கதைகள் இருக்கிறது.

இன்னொரு கதை.

அது ஒரு மடாலயம். அந்த மடாலயத்தில் பெரிய தோட்டம் இருந்தது. அந்த தோட்டத்தை சுத்தம் செய்யும் பணி ஒருவனுக்கு கிடைத்தது. அவன் அந்த தோட்டத்தை துப்புரவாக பெருக்கி, குப்பைகளை எல்லாம் ஒரு குழியிலே போட்டு வைத்திருந்தான். பசும்புற்களை வெட்டினான். செடிகளை சரியான இடத்திலே வைத்தான். தொலைவே நின்று பார்த்தான். தோட்டம் சுத்தமாக இருந்தது. வந்து குருவிடம் தோட்டம் சுத்தம் செய்து விட்டேன் என்று சொன்னான். ‘இல்லை. அங்கே பார்’ என்று சுட்டிக் காட்ட, அங்கே சில இலைகள் விழுந்து கிடந்தன. உடனே ஓடிப் போய் அந்த பழுத்த இலைகளையெல்லாம் அகற்றினான். மறுபடியும் குருவிடம் வந்து தோட்டம் சுத்தமாகி விட்டது என்று சொன்னான்.

அவர் இடது புறம் பார்த்து ‘இங்கே பார்’ என்று சொன்னார். அங்கே ஓடிப் போய் ஒரே ஒரு சுள்ளியை அப்புறப்படுத்தினான். இந்த குருவுக்கு ‘கழுகு கண் எவ்வளவு சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று நினைக்கிறார்’ என்று அலுத்துக்கொண்டான். மறுபடியும் குருவிடம் ஓடி வந்து சுத்தம் செய்து விட்டேன் என்று கூறினான். குரு எட்டிப் பார்த்துவிட்டு ‘இல்லை. தோட்டம் சுத்தமாக இல்லை’ என்று சொன்னார். ‘ஒரு குப்பைகூட இல்லையே. சுத்தமாக இருக்கிறதே’ என்று கேட்டான். ‘இல்லை. தோட்டம் நன்றாக இல்லை’ என்று சொன்னார். அவனுக்கு கோபம் வந்துவிட்டது.

‘என்ன நினைத்துகொண்டிருக்கிறாய். நீ பைத்தியக்காரனா, நான் பைத்தியக்காரனா. இவ்வளவு சுத்தம் செய்திருக்கிறேன் வேண்டுமென்றாலும் தோட்டம் நன்றாக இல்லை என்று சொல்கிறாயே’ என்று சொல்ல, குரு மறுபடியும் ‘ஆமாம். தோட்டம் நனறாக இல்லை’ என்று சொன்னார். ‘போடா’ என்று அவரைக் கண்டபடி ஏசி விட்டு குருவை விட்டுப் போனான். ‘நீயே சுத்தம் செய்துகொள்’ என்று சொன்னான்.

குரு கீழே இறங்கினார். சீடன் வியப்போடு பார்த்தான். குரு தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் கீழே போய் அதை உலுக்கினார். பனித்துளிகளும், இலைகளும் விழுந்தன. இன்னொரு முறையும் உலுக்கினார். இன்னும் இலைகளும், பூக்களும் விழுந்தன. இன்னொரு செடியைப் போய் உலுக்கினார். அங்கிருந்தும் இலைகளும், பூக்களும் உதிர்ந்தன. இன்னொரு செடியைப் போய் உலுக்கினார். அங்கிருந்தும் இலைகளும், பூக்களும், பிஞ்சுகளும் உதிர்ந்தன.குரு தன்னிடத்திற்கு வந்தார். எட்டிப்பார்த்தார். ‘இப்பொழுது தோட்டம் நன்றாக இருக்கிறது’ என்றார். சிஷ்யன் திகைத்தான். மறுபடி பார்த்தான். ‘எனக்கு புரியவில்லையே’ என்று பணிவோடு கேட்டான். ‘ஒரு தோட்டம் இலைகளோடும், பூக்களோடும், பிஞ்சுகளோடும், காய்களோடும் இருப்பதே இயல்பு. மிகச் சுத்தமாக இருப்பது ஒரு தோட்டத்தின் இயல்பல்ல. இயல்பாக இரு என்று சொன்னார். சிஷ்யன் தலைக்குனிந்து இயல்பாக இருப்பதற்கு அன்றிலிருந்து முயற்சி செய்தான்.

**************************************************

7 comments:

RAMA RAVI (RAMVI) said...

நல்ல பகிர்வு குணா. தொடர்ந்து இம்மதிரியான கதைகளை எழுதுங்கள்.நாங்களும் ஸென் கதைகளை பற்றி தெரிந்து கொள்கிறோம்.

இராஜராஜேஸ்வரி said...

உள்ளே காலியாக இருக்கிறது என்று எவனுக்கு தெரிகிறதோ அவனே ஞானி. /

நல்ல பகிர்வு

Yaathoramani.blogspot.com said...

கதையும் அதற்கு நீங்கள் சுருக்கமாக
கொடுத்திருந்த விளக்கமும் மிக மிக அருமை
தொடர்ந்து தருவீர்கள் என நினைக்கிறேன்
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து
வாழ்த்துக்களுடன்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஞானிகள் என்றுமே பின்பற்றபட வேண்டியவர்கள்...

ஜென் கதைகளுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்..
அழகிய படைப்பு.. தொடர்ந்து பகிருங்கள்..


font மாற்றி தாருங்கள் படிப்பதற்க்கு கடினமாக இருக்கிறது

Rathnavel Natarajan said...

அருமை.

N.H. Narasimma Prasad said...

அருமையான கதைகள். பகிர்வுக்கு நன்றி.

kowsy said...

நன்றி குணா! தொடர்ந்து எழுதுங்கள். வாசிப்பதற்கு நாங்கள் தயார்.

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...