Monday, September 05, 2011

தெரிஞ்சுக்கோங்க - கண்ணாடியின் வரலாறு

                          * கண்ணாடியின் வரலாறு *


ணிணியும், தகவல் தொழில்நுட்பமும் இருபத்தியோராம் நூற்றாண்டின் அறிவியல் திசை வழியை மாற்றி அமைத்தன. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் உலக மக்களின் சிந்தனைப் போக்கினை மாற்றியமைத்தது மட்டுமில்லாமல் மிகப்பெரிய கலாச்சார அதிர்வினையும் ஏற்படுத்தியது. அதைப்போல பத்தொன்பதாம் நூற்றாண்டில் நவீனப்படுத்தப்பட்ட மின்சாரமும் கண்ணாடியின் பயன்பாட்டு தொழில் நுட்பமும் மனித சமூகத்தின் அன்றாட வாழ்க்கை முறையை புதிய கோணத்தில் சிந்திக்க வைத்தது. மிக முக்கியமாக கண்ணாடியின் பயன்பாடு அரண்மனை மற்றும் தேவாலயங்களில் இருந்து சாமான்யனுக்கு வந்து சேர இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலானது.

முகம் திருத்திக் கொள்ளவும், முடி நறுக்கிக் கொள்ளவும், உடை அணிந்து கொள்ளவுமான கண்ணாடியின் பயன்பாடுகள் புழக்கத்திற்கு வந்திருக்காவிட்டால் நம் புறத்தோற்றம் பிற மனிதர்களின் பார்வையை சார்ந்தே அமைந்திருக்கும். அதைப்போல நம் உள் அவயங்களின் தோற்றம், பலம், பலவீனம் ஆகியவை கண்ணாடியின் பிரதிபலிப்புகளின் மூலமாகவே மருத்துவர்களுக்குச் சுலபமாக அறிய முடிந்துள்ளது. இதுவரையிலான மருத்துவக் கண்டுபிடிப்புகளில் தனி மனிதனின் அகத்திற்கும், புறத்திற்கும் ஒருங்கே பயனளித்தது கண்ணாடியே ஆகும். இத்தகைய கண்ணாடியின் தோற்றமும் வளர்ச்சியும் கிறிஸ்து பிறப்பதற்கு சற்று முன்பிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளாக மெல்ல, மெல்ல விறுவிறுப்பான மாற்றங்களுடன் விரிந்து பரந்துள்ளது.
 

 
வழுவழுப்பும், மின்னும் திறனும் கொண்ட ஒரு எளிய வேதியியல் கலவைதான் கண்ணாடி ஆகும். மணலை மூலப்பொருளாக கொண்ட ஒளியை ஊடுருவச் செய்யவும், பிம்பங்களை பிரதிபலிக்கச் செய்யவும் ஆற்றல் கொண்ட கண்ணாடியின் குணங்கள் ஐரோப்பியாவிலிருந்து மெல்ல, மெல்ல உலகெங்கும் பரவியது. எல்லாக் கண்டுபிடிப்புகளையும் போல கண்ணாடியும் மகாராஜாக்களிடமிருந்தும் தேவாலயங்களிலிருந்தும் மக்களைச் சென்றடைய ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனது.

மனிதன் இயற்கையோடு இயைந்து வாழ்ந்து கொண்டிருந்த கற்காலத்தில் தெளிந்த நீர், பளபளப்பான பாறை, குளிர்ந்து போன எரிமலைக் குழம்புகள் மற்றும் எரிகற்கள், மின்னல் உருவாகும்பொழுது பாறைகளில் உண்டான பளபளப்பு ஆகியவற்றின் மூலம் தன் பிம்பத்தைத் தானே பார்த்து பயந்திருக்கின்றான்.

மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகவும் சுவாரஸ்யமான, அத்தியாவசியமான பொருள் கண்ணாடியாகும். இக்கண்ணாடியின் கண்டுபிடிப்பு கி.மு. 5000-வது ஆண்டு சிரியா தேசத்து கடற்கரையில் மிகவும் தற்செயலாக நிகழ்ந்தது. கட்டிடங்களைக் கட்டுவதற்குரிய பாறைக் கற்களை விற்பதற்காக வந்த வணிகர்கள் சமைப்பதற்காக இரண்டு கற்களை அடுப்பு போல மணலில் வைத்து அதற்கு மேல் பாத்திரத்தை வைத்து தீ மூட்டினர். பின் நீண்ட நேரம் அதைக் கவனிக்காமல் விட்டதால் கற்கள் மிகவும் சூடாகி மணலில் வழிந்து, கலந்து ஒளி ஊடுருவாத ஒரு பளபளப்பான பொருள் உண்டானது. ரோம் தேசத்தின் வரலாற்றாசிரியர் பிலினி (கி.பி.23-79) இந்த நிகழ்வினைத்தான் கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டதற்கான ஆரம்பமாக குறிப்பிடுகின்றார். 

 

இந்த நிகழ்வில் மணலில் கலந்துள்ள சிலிக்கான் டை ஆக்ஸைடுடன் பாறையிலிருந்து வெளி வந்த வெப்பம் மிகுந்த நைட்ரேட் கலந்து உருகி குளிர்ந்தவுடன் பளபளப்பான திரவம் (கண்ணாடி) உருவானது. அதற்குப்பின் கி.மு. 3500 வரை கண்ணாடி பீங்கான் பாத்திரங்களின் வெளிப்புறத்தில் பளபளப்புக்காக சிறு சிறு துகள்களாக ஒட்டப்பட்டது. இக்காலகட்டத்தில் கால்சியம் கலந்த இரும்புத் தாது அதிகளவில் உள்ள மணல் துகள்கள் கொதிகலனில் சூடேற்றப்பட்டு அதனுடன் சோடா எனப்படும் சலவை உப்பைக் கலந்து வண்ணமாக்கி கண்ணாடித் துகள்களை உருவாக்கினர்.

அதற்குப்பின் கி.மு. 1500ஆம் ஆண்டில் எகிப்திய கலைஞர்கள் கெட்டியான மணல் அச்சுகளை செய்து அவற்றை உருகிய கண்ணாடி திரவத்தில் மூழ்க வைத்து அச்சைச் சுழற்றி அச்சுகளின் வடிவத்தில் கண்ணாடி பாத்திரங்களை உருவாக்க ஆரம்பித்தனர். ஒருவேளை அச்சில் கண்ணாடி திரவம் சரியாக, ஒழுங்கான வடிவத்தில் ஒட்டாமல் இருந்தால் அவற்றை பளபளப்பான கல் பாளத்தில் உருட்டி அழகுபடுத்தினர். இந்த எளிய தொழில் நுட்பம் மெசபடோமியா, அலெக்ஸாண்டிரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பரவ ஆரம்பித்தது.
 

ஏறத்தாழ ஆயிரம் வருடங்கள் எந்தவகையான மாற்றமும் இன்றி இதே முறையே நீடித்தது. முதலாம் நூற்றாண்டுவாக்கில் சிரியா நாட்டில் தோன்றிய ஊதுகுழல் தொழில்நுட்பம் கண்ணாடியின் பயன்பாட்டில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு நீண்ட இரும்புக் குழாயின் கீழ்ப்பகுதியை திரவ நிலையிலிருக்கும் கண்ணாடியின் மேற்பரப்பில் வைத்து மேலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக, விட்டு விட்டு ஊதும் பொழுது சூடான திரவம் நகர்ந்து சென்று ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட அச்சில் நுழைந்து குளிர்ந்து விதம் விதமான வடிவங்களை அடைகின்றது.

இத்தொழில்நுட்பத்தில் உருவான கண்ணாடிப் பொருட்கள், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு ரோம் நகரில் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்டது. இம்முறையை அடிப்படையாகக் கொண்ட திறன்களை வளர்க்க அமெரிக்காவில் ஒரு இயக்கம் தொடங்கப்பட்டு பல்வேறு நாடுகளுக்குப் பரவி ஒரு கலையாக வளர்த்தெடுக்கப்பட்டு வருகின்றது. நம் கற்பனைக்கேற்றார் போல் வீட்டிருந்தபடியே வெவ்வேறு வடிவங்களை உருவாக்கும் இக்கலை “மாடர்னிஸம்” என்ற பெயரில் ஓவியம், சிற்பம், நிழற்படங்கள் ஆகியவற்றின் வரிசையில் தனித்து இன்று வரை நடைபோடுகின்றது.

அடிப்படையில் கால்சியமும் இரும்பும் அதிகமாக கலந்த மணல் குறைந்தபட்சம் 1700 சென்டிகிரேடுக்கு மேல் சூடாக்கப்படும் போது பளபளப்பான திரவம் உண்டாவதை ஏறக்குறைய கண்ணாடியாக சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகள் வரை பாவித்து வந்தனர். கி.பி. முதலாம் நூற்றாண்டு வாக்கில் சோடியம் கார்பனேட் எனப்படும் சலவைசோடாவையும் கால்சியம் கார்பனேட் எனப்படும் சுண்ணாம்புக் கலவையையும் மணலோடு சேர்த்து உருக்கும் இரசாயண முறையை கண்டுபிடித்ததும் கண்ணாடியின் உபயோகம் அதிகரிக்க ஆரம்பித்தது. சோடா என்னும் சலவை உப்பைச் சேர்த்து செய்யப்பட்டதால் சோடாக் கண்ணாடி என்று இன்று வரை அழைக்கப்படுகின்றது.

மிகவும் கெட்டியானதாகவும், ஒளி ஊடுருவும் தன்மை கொண்டதாகவும், எளிதில் விரும்பிய வடிவம் அமைக்கக் கூடியதாகவும் சோடா கண்ணாடி விளங்கியதால் அதன் உபயோகம் அதிகரிக்க ஆரம்பித்தது. முதலாம் நூற்றாண்டில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட இரும்புத் தாதுக்களை உருக்கும் உலை அல்லது சூளை சோடா கண்ணாடியின் உற்பத்தியை எளிமையாக்கியது. 
 

அதற்குப்பின் மேற்கூறிய சோடா கண்ணாடி கலவையுடன் மக்னீசியம் ஆக்ஸைடு சேர்க்கப்பட்டு முற்றிலும் ஒளி ஊடுருவி செல்லக் கூடிய கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டது. கண்ணாடி ஜன்னல்கள் அச்சில் வார்ப்பிக்கப்பட்டு ரோம் நகரின் மிக முக்கிய இல்லங்களில் பயன்படுத்தப்பட்டது. ஊதுகுழல் முறையில் செய்யப்பட்ட மெல்லிய கண்ணாடி அலங்கார பொருட்களும், கண்ணாடி ஜன்னல்களும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை உலகெங்கும் சென்ற கண்ணாடி தொழில்நுட்ப கலைஞர்களின் மூலமாக பரவியது.

கி.பி. பத்தாம் நூற்றாண்டுவரை மணல், சலவை சோடா, சுண்ணாம்புக்கல் மற்றும் மக்னீசியம் ஆக்ஸைடு ஆகிய கலவைகளோடு மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த கண்ணாடி தொழில்நுட்பம் மூலப்பொருட்கள் சரிவர கிடைக்காததால் திணற ஆரம்பித்தது. மரங்களை எரிப்பதால் கிடைக்கும் “பொட்டாஷ்” என்னும் மூலப்பொருள் கண்ணாடி தயாரிப்பில் பயன்படுத்தப்பட ஆரம்பித்ததும் சோடா கண்ணாடியின் உபயோகம் குறைந்து விட்டது.

கி.பி. பதினோறாம் நூற்றாண்டில் ஜெர்மன் தொழில்நுட்ப நிபுணர்களால் புதுவகையில் உருவாக்கப்பட்ட கண்ணாடி தகடுகள் தயாரிப்பு முறை வெனிஸ் நகர நிபுணர்களால் மேம்படுத்தப்பட்டது. உருகிய கண்ணாடி திரவத்தை நீண்ட கண்ணாடிக் குழலின் மூலமாக தொடர் காற்றழுத்தத்தைச் செலுத்தி மேலிருந்து கீழாக இழுத்து வந்து 45செ.மீ. அகலமும் 3மீ நீளமும் கொண்ட கண்ணாடித் தகடுகள் உருவாக்கப்பட்டன. இந்த முறையில் ஆரம்பமும் முடிவும் சற்று சுருண்டு இருக்கும் என்பதால் இரண்டு முனைகளிலும் சிறிதளவு வெட்டிச் சமமான சீரான கண்ணாடி தகடுகள் உருவாக்கப்பட்டன. இவ்வகைத் தடிமன் குறைந்த கண்ணாடித் தகடுகள் சர்ச்சுகள் மற்றும் பிரபுக்கள் அரண்மனைகளில் வெவ்வேறு வடிவங்களில் குறைக்கப்பட்டு ஜன்னல்களாக பயன்படுத்தப்பட்டன.

கண்ணாடி தொழில்நுட்பத்தில் வெனிஸ் நகர மக்கள் மிகவும் சிறந்து விளங்கினர். அந்நகரத்தில் மட்டும் சுமார் 8000க்கும் மேற்பட்ட கண்ணாடி தொழில் சார்ந்த நிபுணர்கள் இருந்தனராம். அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு வெளிநாட்டுக் கண்ணாடி பொருட்கள் மற்றும் தொழில்நுட்பம் தடை செய்யப்பட்டிருந்தது.

அதற்குப்பின் பதினாறாம் நூற்றாண்டில் இங்கிலாந்து தேசத்தின் ஜார்ஜ் ராவென்ஸ்கராப் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு காப்புரிமை பெறப்பட்ட காரீயம் கலந்த கிரிஸ்டல்கள் தயாரிக்கப்பட்டது. கிரிஸ்டல் கண்ணாடிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின் கண்ணாடியின் உபயோகம் பல்வேறு துறைகளுக்கு பயன்பட ஆரம்பித்தது. குவார்ட்ஸ் மணலில் பொட்டாசியத்துக்கு பதில் காரீய ஆக்ஸைடுகள் பயன்படுத்தப் பட்டதால் கடினமாக்கப்பட்டு, இயந்திரங்களின் உதவியால் வெட்டவும், செதுக்கவும், அறுக்கவும் முடிந்தது. மேலும் இவ்வகை கண்ணாடிகள் விஞ்ஞானத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உதவின. ஒளியைப் பெறவும் ஒளியை இழுத்துக் கொள்ளவும் மட்டுமே பயன்பட்டு வந்த கண்ணாடி ஒளியை திசை மாற்றும் திறன் கொண்டதாக அறியப்பட்டது.

பதினாறாம் நூற்றாண்டின் முடிவில் முகம் பார்க்கும் கண்ணாடிகளின் தயாரிப்பு உச்ச கட்ட தொழில் நுட்பத்தைப் பெற்றது. உருகிய கண்ணாடி திரவம் உருளைகளின் வழியே செலுத்தப்பட்டு இரண்டு அல்லது மூன்று செ.மீ அளவிலான கண்ணாடித் தகடுகளாக உருவாக்கப்பட்டது. பின் அவை இன்னொரு மேசையில் வைக்கப்பட்டது. மெல்லிய குறு மணலால் உருவாக்கப்பட்ட கிரைண்டர்களின் உதவியால் கண்ணாடியின் மேல் பகுதி பளபளப்பாக்கப்பட்டது. எளிதில் உருகக்கூடிய பூச்சுகளின் உதவியால் ஒரு பக்கம் மறைக்கப்பட்டு ஒளி எதிரொலிக்கும் திறன் மேம்படுத்தப்பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு மத்தியில் பிரெபிரிக் சீமென்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட உயர் வெப்ப எரிகலன்கள் குறைந்த நேரத்தில் அதிகபட்ச கண்ணாடித் திரவங்களை தயாரிக்கப் பயன்பட்டது. அதற்குப்பின் மெல்ல மெல்ல கண்ணாடித் தயாரிப்பு முறை முற்றிலும் இயந்திர மயமாக்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் ஓவென்ஸ் என்பவர் கண்டுபிடித்த தானியங்கிக் கண்ணாடிப் பாட்டில்கள் தயாரிக்கும் இயந்திரம் வெற்றியடைந்து ஐரோப்பா முழுவதும் இருநூறுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன.

குடுவைக்குள் இருக்கும் பொருள் எளிதில் தெரியும்படியாகவும் எடை குறைவாகவும் இருந்ததால் கண்ணாடிக் குடுவைகள் வெற்றியடைந்தன. மருந்துப் பொருட்கள், இரசாயணங்கள், மதுபானங்கள் ஆகியவற்றை நிரப்பி எளிதாக எடுத்துச் செல்லவும், விலை குறைவாகவும் இருந்ததால் தயாரிப்பு நிறுவனங்களும், பொதுமக்களும் கண்ணாடிக் குடுவைகளுக்கு மிகுந்த ஆதரவை அளித்தனர்.
 

இதே பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலங்களில் கண்ணாடித் தகடுகளின் உற்பத்தியும் நவீனமயமாக்கப்பட்டது. உருகிய நிலையில் உள்ள கண்ணாடி திரவம் மேலிருந்து கீழே இரண்டு உருளைகளின் வழியாக வெளியேற்றப்பட்டு சமஅளவு தடிமனான பளபளப்பான தகடுகள் உருவாக்கப்பட்டன. இவ்வகைக் கண்ணாடித் தகடுகளை மெல்லிய எடை குறைந்த செல்லுலாஸ்ட் பொருட்களுக்கு இடையில் வைத்து அழுத்தி லேமினேட்டட் கண்ணாடிகள் உருவாக்கப்பட்டன.

இவ்வகைக் கண்ணாடிகள் உறுதியாகவும் ஒளி ஊடுறுவும் தன்மை கொண்டவையாகவும், எடை குறைந்தவையாகவும் விளங்கின. லேமினேட்டட் கண்ணாடித் தயாரிப்பு முறையைக் கண்டறிந்த பிரெஞ்ச் விஞ்ஞானி “பெனடிக்ட்ஸ்” என்பவர் கண்டுபிடித்த கண்ணாடிகள் வாகனம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தன.

ஆசிய நாடுகளைப் பொறுத்த அளவில் கிறிஸ்து பிறப்பதற்கு ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே மேற்கு ஆசிய நாடுகளில் கண்ணாடித் தொழில்நுட்பம் பிறந்து வளர ஆரம்பித்திருந்தது. சிந்துவெளி நாகரீக காலத்திலே இருந்து நமக்கு மத்திய, மேற்கு ஆசிய நாடுகளில் வணிக தொடர்பு இருந்திருப்பதை வரலாற்று நூல்களில் நாம் காண்கின்றோம். உடைகள், வாசனை திரவியங்கள், திரைச்சீலைகள், அழகு சாதனப் பொருட்களை இறக்குமதி செய்யவும் அவற்றின் தொழில் நுட்பங்களை அறிந்து நமது நாட்டிலேயே உற்பத்தி செய்யவும் மிகவும் ஆர்வமுடன் இருந்து வந்துள்ளோம். ஆனால் கண்ணாடித் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்து இங்கேயே தயாரிக்கும் முயற்சியை இந்தியர்கள் ஆர்வமுடன் தொடங்காததை மிகவும் ஆச்சர்யத்துடன் வரலாற்று ஆய்வாளர்கள் கவனிக்கின்றனர்.

கண்ணாடிக் குடுவைகள் இரசாயண ஆய்வுகளுக்கு மிகவும் பொருத்தமுடையவை என்பது நாம் அறிந்ததே. இரசாயண மாற்றம் நடக்கும் முறைகளையும், அளவையும் காலத்தையும் கண்ணாடி குடுவைகள் மூலம் நேரடியாக நாம் கவனிக்க முடியும். ஆனால் மருத்துவ இரசாயணம் மற்றும் தொழிற்சாலை இரசாயணம் ஆகியவற்றில் பாரம்பரிய அறிவும் முன்னோடியான சிந்தனையும் கொண்ட நம் முன்னோர்கள் களிமண்ணால் செய்து சுடப்பட்ட குடுவைகளையே பயன்படுத்தி வந்துள்ளனர். உலக நாடுகளின் ஏனைய பகுதிகளில் கண்ணாடியை ஏற்றுக்கொண்ட அளவிற்கு நம் இந்தியர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. உலோகத்திற்கும், மண் குடுவைக்கும் கொடுத்த சமூக அந்தஸ்தை நம் முன்னோர்கள் கண்ணாடிப் பொருட்களுக்கு கொடுக்கவில்லை.

இந்தியாவின் அனைத்து வரலாற்று ஆய்வாளர்களாலும் ஒத்துக் கொள்ளப்பட்ட மொகஞ்சதாரோ-ஹரப்பா அகழ்வாராய்ச்சிகளில் கண்ணாடி போன்ற பொருட்களின் பயன்பாடு கண்டுபிடிக்கப்பட்டதே அன்றி முழுமையான வடிவில் ‘கண்ணாடி’ பொருட்கள் காணக் கிடைக்கவில்லை. ஆனால் நம் நாட்டின் பழமையான மொழியான சமஸ்கிருதத்தில் படைக்கப்பட்ட “சதபத பிரம்மனா” என்ற வேத நூலில் கண்ணாடியை “கக்கா” என்று குறிப்பிடுகின்றனர்.

ஹரப்பா மற்றும் கங்கைச் சமவெளி நாகரிக மக்கள் கண்ணாடித் துகள்கள் பொருத்தப்பட்ட பீங்கான் பாத்திரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். கி.பி. நான்காம் நூற்றாண்டில் இருந்து கைவளையல்கள், காது வளையங்கள், மூக்குத்திகள் ஆகியவற்றுக்கு கண்ணாடி குமிழ்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர். முழுமையான கண்ணாடி மூலப் பொருட்களில் செய்யப்பட்ட “கண்ணாடி தொழில்நுட்பம்” நம் நாட்டின் பிரத்யேக கலையாக ஐந்தாம் நூற்றாண்டில்தான் வளர்ந்து வந்தது.

பாஸ்பேட், பொட்டாசியம் மற்றும் இரும்பு தாதுக்கள் கலந்த வண்ணமயமான கண்ணாடிகள் ஹஸ்தினாபுரம், தக்ஷசீலம் ஆகிய இடங்களில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளது. ரோமானியர்களால் தயாரிக்கப்பட்ட கண்ணாடி ஜன்னல்களும், தரை மொசைக்குகளும் மௌரியப் பேரரசரால் பயன்படுத்தப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் அரிக்கமேடு, மஸ்கி, பிரம்மகிரி ஆகிய இடங்களிலும் வடஇந்தியாவில் அஹிசத்திரம், மஹேஸ்வர், நாசிக், பிரகாஷ், தேர், கௌந்தியாபுரம், உஜ்ஜைனி, நாலந்தா ஆகிய இடங்களிலும் கண்ணாடி மணிகள் கிடைத்துள்ளன. இவற்றிலிருந்து பார்க்கும் பொழுது கண்ணாடியில் வண்ணமாக்கும் நுட்பத்தையும் மற்றும் கண்ணாடி திரவத்தில் காப்பர், அலுமினியம், காரீயம் ஆகிய தனிமங்களைக் கலக்கும் வித்தையையும் இந்தியர்கள் அறிந்திருந்தனர் என தெரிய வருகின்றது.

தமிழ்நாட்டின் அரிக்கமேடு என்ற இடத்தில் தோண்டப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கி.பி. இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டில் புழங்கிய கிரேக்க ரோமானிய கண்ணாடிப் பாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் வட இந்தியாவில் மொகலாய மன்னர்களின் காலத்தில் பாரசீக வல்லுநர்களால் தயாரிக்கப்பட்ட முகம் பார்க்கும் கண்ணாடிகள், உணவுப் பண்டங்களை மூடி வைக்கும் மூடிகள், எச்சில் துப்பும் பாத்திரங்கள் ஆகியவை புழக்கத்தில் இருந்து வந்துள்ளன.

அதைப்போல உததிரப்பிரதேசத்தின் அனோமா நதிக்கரையோரம் அமைந்துள்ள கோப்பியா நகரில் மிகப்பெரிய கண்ணாடி பாளங்கள் (கி.பி. மூன்றாம் நூற்றாண்டு) கண்டுபிடிக்கப்பட்டதை உற்று நோக்கும் பொழுது அங்கு மிகப்பெரிய கண்ணாடித் தொழிற்சாலை அமைந்திருக்கலாம் எனத் தெரிய வருகின்றது. நமது இந்தியர்கள் இன்றுவரை கண்ணாடியை ஒருவகை ஆடம்பரமான அழகுப் பொருளாக மட்டுமே அங்கீகரித்துள்ளனர். இன்றும் இந்தியாவின் கிராமப் பகுதிகளில் கண்ணாடி குடுவைகளில் பானம் அருந்துவதை கௌரவக் குறைச்சலாகவே கருதி வருகின்றனர். இவ்வகையான மனத்தடைதான் நம் இந்தியர்கள் கண்ணாடித் தொழில்நுட்பத்தை தாமதமாக ஏற்றுக் கொண்டதற்கான காரணமாகக் கொள்ளலாம். மருத்துவம், இரசாயணம், அறுவை சிகிச்சை, கணிதம், கட்டிடக்கலை, ஆகியவற்றில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை கி.பி. பத்தாம் நூற்றாண்டில் தோற்றுவித்த நாம் கண்ணாடித் தொழிலில் கவனம் செலுத்தி மாற்றங்களை ஏற்படுத்தாதற்கு காரணம் நம் பாரம்பரிய பண்பாடும் கலாச்சாரமுமே ஆகும்.

இந்தியாவில் நடந்த எத்தனையோ ஆகழ்வாராய்ச்சிகளில் நம் பாண்டிச்சேரிக்கு தெற்கே கிழக்கு கடற்கரையில் 1930 மற்றும் 1940 களில் தோண்டியெடுக்கப்பட்டவை முற்றிலும் கண்ணாடி மற்றும் கற்களால் ஆன பொருட்கள் ஆகும். 16ஆம் நூற்றாண்டு வரை அரிக்கமேடு என்னும் கடற்கரைப்பகுதி இந்தியாவின் மிக முக்கியத் துறைமுகமாக ரோமானியர்களுக்கு பயன்பட்டது. பிரெஞ்ச் தேசத்தின் மிக முக்கிய அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் ஆர்.இ.எம்.வீலர் மற்றும் ஜே.எம்.காசல் ஆகியோரால் இவை கண்டுபிடிக்கப்பட்டது.

பாண்டிச்சேரி மியூசியத்தில் உள்ள செராமிக் பொருட்களின் தொன்மையைக் கண்டு வியந்த பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தின் விமலா மெக்லி அவர்கள் அங்கே இருந்த கண்ணாடி மற்றும் கற்களால் ஆன பாசி மணிகள், குமிழ்கள் மற்றும் ஆபரணங்களைக் கண்டு வியந்து பக்கத்தில் உள்ள அரிக்கமேடு பகுதியை தேசிய தொல்பொருள் தலமாக மாற்றக் கோரினார். 1992 முதல் 1997 வரை பாண்டிச்சேரி மியூசியத்துடன் இணைந்து அரிக்கமேடு அகழ்வாராய்சி முடிவுகளை பெக்லி அவர்கள் புத்தகமாக வெளியிட்டார்.

அரிக்கமேடு பகுதி ரோமானியர்கள் இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பிருந்தே கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து சிறந்த கடற்கரை நகரமாய் இருந்துள்ளது. நீண்ட கண்ணாடி குழாயிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட சிறுசிறு கண்ணாடித் துண்டுகள் இந்நகரத்தில் ரோம் நகரில் இருந்து வந்திறங்கிய கண்ணாடித் தொழில்நுட்பக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. பின்னர் அரிக்கமேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இத்தொழில்நுட்பத்தைப் பழகி தாங்களே சொந்தமாக கண்ணாடிப் பாசிகளையும், ஆபரணங்களையும் அழகுப் பொருட்களையும் தயாரித்துள்ளனர்.

அரிக்கமேடு பகுதியில் கண்ணாடித் தொழில்நுட்பத்தை கற்றிருந்த தமிழக மீனவர்கள் இலங்கை, வியட்நாம், மலேசியா, தாய்லாந்து, சுமத்ரா ஆகிய நாடுகளுக்கு சென்று கண்ணாடிப் பொருட்களை அங்கேயே தயாரித்து விற்பனை செய்துள்ளனர். அரிக்கமேடு பகுதியில் தயாரிக்கப்பட்ட கண்ணாடி மணிகள் மாணிக்கக் கற்கள் என்ற பெயரில் இந்தியா முழுக்க விற்பனை செய்யப்பட்டுள்ளது. கற்களால் ஆன மிகவும் நுட்பமான சிறிய, பெரிய அளவிலான கலைப் பொருட்களை செய்வதில் மிகவும் திறன் பெற்றிருந்த இந்தியர்கள் கண்ணாடிப் பொருட்களைச் செய்வதிலும் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தனர். தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொடுத்த ரோமானியர்களே அரிக்கமேடு பகுதியினரின் திறமையைக் கண்டு வியந்து அவற்றை வாங்கிப் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர்.
 

பதினாறாம் நூற்றாண்டில் அரிக்கமேடு பகுதி ஏறத்தாழ அழிந்து விட்டது எனலாம். அங்கிருந்த ஒரு பகுதி மீனவர்களும் விவசாயிகளும் சற்றி தள்ளி உள்ள விராம்பட்டினம் கடற்கரைக் கிராமத்திற்கும் இன்னொரு பகுதி கண்ணாடி தொழிநுட்பம் தெரிந்தவர்கள் ஆந்திராவில் ரேணுகுண்டாவிற்கு அருகில் உள்ள பாப்பநாயுடு பேட்டைக்குப் புலம் பெயர்ந்தனர். மேலும் கற்சிற்பங்கள் செய்ய தெரிந்த கலைஞர்கள் தமிழ்நாட்டின் வேலூர், தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்கும் இடம் பெயர்ந்தனர். தமிழ்நாட்டின் அரிக்கமேடு பகுதியில் வாழ்ந்தவர்களின் வாரிசுகள் மீனவர்களாக விராம்பட்டினத்தில் இன்றும் உள்ளனர். அதைப்போல பாப்பநாயுடு பேட்டையில் கண்ணாடித் தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறு தொழிற்சாலைகளும் சென்ற நூற்றாண்டு வரை இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.

கி.பி. இரண்டாம் நூ}ற்றாண்டில் இந்தியாவிற்கு வந்தடைந்த கண்ணாடித் தொழில்நுட்பம் பொது மக்கள் மத்தியிலும், கட்டிடக் கலைஞர்கள் மற்றும் மருத்துவ விஞ்ஞானிகள் மத்தியிலும் செல்வாக்கு பெற்றது. தமிழ்நாட்டில் பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய வள்ளலாரின் பக்தி இயக்கம் கண்ணாடியின் பிரதிபலித்த ஜோதியின் வடிவத்தை கடவுள் உருவமாய் கண்டது.

நன்றி - -எஸ். எஸ்.பொன்முடி.

****************************************************************

6 comments:

இராஜராஜேஸ்வரி said...

மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகவும் சுவாரஸ்யமான, அத்தியாவசியமான பொருள் கண்ணாடியாகும்//

Thank you for sharing useful post.

RAMA RAVI (RAMVI) said...

ஒரு கண்ணாடில இவ்வளவு விஷயமா??
அருமையான தகவல்.படங்கள் அருமை, அதிலும் அந்த இரண்டு குழந்தை படங்களும் ரொம்ப அழகு.

தமிழ் உதயம் said...

கண்ணாடி குறித்து அருமையான தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.

மகேந்திரன் said...

கண்ணாடி தன் பிம்பம் எதிரொலிக்கிறது தங்கள் பதிவில்
கண்ணாடியின் விளக்கமும் அதன் வரலாறும் அற்புதம்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உலகின் மிக அரிதான கண்டுப்பிடிப்புகளில் கண்ணாடியும் ஒன்று...


கண்ணாடியும் மனமும் ஒன்றுதான்
பிரிதிபலிப்பதினால்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்ல தகவல்கள்தான்...

இன்னும் கொஞ்சம் சுருக்கி கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...