Monday, January 23, 2012

தெரிஞ்சுக்கோங்க - எதற்காக லஞ்சம் கொடுக்க வேண்டும்?


விவரம் தெரிஞ்ச வயதிலிருந்து, இலஞ்சம் என்ற வார்த்தையை நம் தினசரி வாழ்வில் அன்றாடம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். வித விதமான வகைகளில் அதனைப் பற்றி இன்னமும் விவாதித்துக் கொண்டுதான் இருக்கிறோம். நிறைய ஊடகங்கள், நிறைய திரைப்படங்கள் இலஞ்சத்தைப் பற்றி புத்திசாலித்தனமாக காட்சிகளைக் காட்டி, படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கி தனது வருமானத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர். இப்படி இலஞ்சத்தால் குளிர் காய்பவர்கள் ஏராளம்..ஏராளம்..


இலஞ்சத்தை ஒழிக்க முடியுமா?முடியாதா?

இந்தக் கேள்வியை ஒவ்வொரு இந்தியக் குடிமகன்களிடம் கேட்டால், "முடியும்.. ஆனா முடியாது.." என்று ஒரு திரைப்பட வசனத்தைப் போன்ற நடையில் பதில் சொல்வார்கள். ஒவ்வொரு வீட்டிலிருக்கும் குடும்பத்தலைவனும் குடும்பத்தலைவியும் இலஞ்சம் கொடுக்கக் கூடாது..பெறவும் கூடாது என்ற உறுதி மொழியை எடுத்து அதன் படி வாழ்ந்து காட்டினால் இலஞ்சத்தை ஒழிக்கலாம் என்று நமது முன்னால் குடியரசு தலைவர் அப்துல்கலாம் வழிகூட சொல்லியிருக்கிறார்.

சரி.அவர் சொல்றது மாதிரி செய்ய முடியுமா?

அங்கதான் இருக்கு பிரச்சனை. இப்போது இருக்கும் விலைவாசி உயர்வுக்கேற்ற சம்பளம் இல்லை.. அதனால் வேறு வழியில்லை..குடும்பத்தை நடத்த வேண்டுமே?..பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டுமே.?.என்று அரசு துறைகளில் வேலை செய்பவர்கள் இலஞ்சம் வாங்குவதற்கான காரணத்தைச் சொல்கின்றனர்.


என்னதான் அவர்கள் இப்படி ஒரு காரணத்தைச் சொன்னாலும், அவர்களது மனசாட்சிக்குத் தெரியும் "இலஞ்சம் வாங்குவதும்...கொடுப்பதும் குற்றம்தான்" என்பது.

இலஞ்சம் வாங்கிய பணத்தைக் கொண்டு சோறு சாப்பிடும் சமயம், எங்கேனும் "இப்படியெல்லாம் இலஞ்சம் வாங்கி சோறு சாப்பிட்டா நிச்சயம் அது உடம்பில் ஒட்டாது.வியாதிதான் வரும். எங்க வயித்தில் அடிச்சிட்டு..அவன் சாப்பிட்டானா நிச்சயம் அந்த சாபம் சும்மா விடாது" என்று யாரேனும் காது பட பேசிக்கொண்டால் நிச்சயம் , இலஞ்சம் வாங்கியவனின் தொண்டைக்குள் சென்ற சாப்பாடு சில நிமிடம் அப்படியே நின்று விடும்.அதுதான் மனசாட்சி என்பது. அதனால்தான் சொல்கிறேன்.


தன் கடமையைச் சரியாகச் செய்து விட்டு அதற்காக மாதாமாதம் அரசு தரும் சம்பளத்தை மட்டும் வாங்கி தன் குடும்பத்தை வழி நடத்தும் ஒவ்வொரு நபரும் நிச்சயம் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்கள்தான். பாராட்டப்பட வேண்டிய மேன்மக்கள் அவர்கள்.  அப்படி இல்லாமல், இலஞ்சத்தை வாங்குபவர்கள் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வாழாதவர்கள்தான். தன் நலம், தன் குடும்ப நலம் மட்டுமே அவர்களது குறிக்கோள்.
         

 
இந்த இலஞ்சம் என்ற ராட்சஸனை எப்படி அழிப்பது என்று யோசிக்கும் போது, தினமலரில் இன்று வெளியான ஒரு கட்டுரை அதற்கான விடையைத் தந்தது. இந்தக் கட்டுரையை நீங்களும் படித்துப் பாருங்கள்.. நீங்கள் இலஞ்சத்தால் பாதிக்கப்பட்டால் , எங்கு?..எப்போது..?எப்படி.?.யாரிடம்? என்ற கேள்விக்கான விளக்கங்களோடு ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சோஷியல் நெட்வொர்க்கிங்க் சைட்ஸ் மற்றும் தினமலர் போன்ற பத்திரிக்கைகளில் அதற்கான பகுதிகளில் தைரியமாக பதிவு செய்யுங்கள்..நிச்சயம் ஒரு விழிப்புணர்வு கிடைக்கும். மாற்றமும் வரும்.

   Frustrated Villager dumps Snakes in Office over alleged delay in allotment of land and demands for bribe.


தினமலரில் சிறப்புபகுதியில் இலஞ்சம் சம்பந்தமான மக்களின் குமுறல்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றனர். இப்படி ஒரு பகுதியை ஆரம்பித்தமைக்கு
ஒரு இந்தியக் குடிமகன் என்ற முறையில் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதைப் போன்று அனைத்து ஊடகங்களும் தத்தம் பணியைச் செய்தால் நிச்சயம் நம் அடுத்த தலைமுறையாவது இலஞ்சத்தின் பிடியிலிருந்து தப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

தினமலரில் வெளியான கட்டுரையின் லிங்க் :
 http://www.dinamalar.com/News_detail.asp?id=390125

இந்தப் பதிவைப் படிக்கும் சக நண்பர்கள், நண்பிகள் நிச்சயம் இந்தக் கட்டுரையை உங்களைச் சார்ந்த நபர்களுக்கு தெரியப்படுத்துங்கள். எப்போதும் போல  ஜஸ்ட் லைக் தட் போல இருக்க வேண்டாம். ஏனெனில் இந்த பதிவின் நோக்கம் நீங்கள் படிப்பதற்கு மட்டுமல்ல..எல்லோரும் படித்து ஒரு விழிப்புணர்வை உருவாக்கவேண்டும் என்பதுதான்..

கட்டுரை:

ரசுத்துறையினருக்கு லஞ்சம் கொடுத்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்' என்று "தினமலர்' அழைப்பு விடுத்ததுதான் பாக்கி... கணக்கில்லா கடிதங்களை எழுதி, குமுறலை கொட்டித் தீர்த்து குவித்து விட்டனர் நமது வாசகர்கள். அந்த அளவுக்கு, சமுதாயத்தின் எல்லா மட்டங்களிலும் லஞ்சம் புரையோடிப் போய்விட்டது. லஞ்சம் வாங்குவதை கண்டு மனம் குமுறும் நம்மில் பலரும், சந்தர்ப்ப சூழ்நிலைகளால், லஞ்சம் கொடுத்தேனும் காரியத்தை முடிக்கவும் தயங்குவதில்லை என்பதே கசப்பான உண்மை. இந்நிலை மாறவேண்டும்.

லஞ்சப் பணத்தால் கிடைக்கின்ற சுகமும், சொத்துக்களும் நம் சந்ததிக்கு ஊட்டுகிற நஞ்சுப்பால் என்பதை, லஞ்சம் வாங்குவதை வழக்கமாக கொண்டிருப்போர் உணர்ந்தால் மட்டுமே லஞ்சத்தின் ஆணிவேரையும் அடியோடு அறுத்தெறிய முடியும். ஆம், அதற்கான சூளுரையை அனைவரும் ஏற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எது, எதற்கெல்லாம் லஞ்சம் கொடுக்க நேர்ந்தது என, வாசகர்கள் எழுதித் தள்ளிய வாக்குமூலங்கள் ஒவ்வொன்றாக இனி, இப்பகுதியில் வெளியாகும். இதன் நோக்கம், லஞ்சத்தை முற்றிலுமாக ஒழித்தாக வேண்டும் என்பதே. லஞ்சம் வாங்கியவர்கள் திருந்த வேண்டும்; லஞ்ச மறுப்பு துணிச்சல் ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும்.
 
இதெல்லாம் ஒரு பிழைப்பா...?:
 
நீலகிரி மாவட்ட விவசாயிகள் சார்பில் ஒருவர் எழுதுகிறார்...
சிங்காநல்லூர் உழவர் சந்தையில், நீலகிரி மலைக்காய்கறிகளை விற்கும் விவசாயிகள் 20 பேர் இருக்கிறோம்; மலைக்காய்கறிகள், கோவை மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்க வேண்டுமென்ற நோக்கில்தான், எங்களை இங்கு வந்து காய்கறி விற்பதற்கு அரசு ஊக்குவித்தது. ஆட்சி மாற்றத்துக்குப் பின், இங்கே பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.


உழவர் சந்தையில் பணி புரியும் உதவி நிர்வாக அலுவலர்கள், இப்போது எங்களிடம் ஒரு கடைக்கு தினமும் 20 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை லஞ்சம் கேட்கின்றனர்; தராத விவசாயிகளின் அடையாள அட்டையை ரத்து செய்வோம் என்று மிரட்டுகின்றனர்.
பொங்கலுக்கு ஒரு கடைக்கு ஐநூறு ரூபாய் கேட்டனர்; சிலர் தந்தனர்; பலர் தரவில்லை; உழைப்பவனிடம் பறிப்பது என்ன பிழைப்போ?
ரயிலில் பறக்கும் லஞ்சக்கொடி: கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்த வாசகரின் அனுபவம்...
நான் ஒரு சீனியர் சிட்டிசன்; ரயில்வே பயணச்சீட்டில் எனக்கு சலுகைக்கட்டணம் உண்டு. கடந்த 4ம் தேதியன்று, கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்வதற்காக, கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரிலுள்ள ஐ.ஆர்.சி.டி.சி., டிக்கெட்டிங் சர்வீஸ் மையத்தில் டிக்கெட் எடுத்தேன்; அதில், எனக்குரிய கட்டணத் தொகையுடன், 100 ரூபாய் சர்வீஸ் சார்ஜ் எடுத்தனர்.
ஆனால், 10 ரூபாய் மட்டுமே எடுத்ததாக ரசீது கொடுத்தனர்; இதுபற்றி கேட்டதற்கு, "அப்படித்தான் வாங்குவோம்' என்று கூறி விட்டனர்; ரயில்வே ஸ்டேஷன் கண்காணிப்பாளரிடம் சென்று கூறியதற்கு, "நீங்கள் ஏன் அங்கே போய் டிக்கெட் வாங்கினீர்கள்?; எங்களால் எதுவும் செய்ய முடியாது,' என்று "பொறுப்பாக' பதில் கொடுத்தார்.
ரயில்வே ஏஜன்சிகள் இப்படி பகிரங்க கொள்ளை அடிப்பதற்குக் காரணம், ரயில்வே உயரதிகாரிகளுக்குப் போகும் லஞ்சம்தான். ரயில்வே இ-டிக்கெட்டிலேயே சர்வீஸ் சார்ஜ் சேர்த்து, போட்டுக் கொடுத்தால், ஏஜன்சிகள் இத்தகைய அத்துமீறலில் ஈடுபட முடியாது; அதை ஏன் ரயில்வே நிர்வாகம் செய்வதில்லை?
லஞ்சத்தை பதிவு பண்ணுங்க!: லஞ்சத்தை ஒழிக்க குறிச்சி கருப்புசாமி சொல்லும் ஆலோசனை...
அதிகமாக லஞ்சம் விளையாடும் அரசு அலுவலகங்களுக்கு அருகிலோ, கோவில் போன்ற பொது இடங்களிலோ, லஞ்சம் கொடுத்தது பற்றிய தகவல்களை பொது மக்கள் பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்யலாம்; இதற்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் பயன் படுத்திக்கொள்ளலாம். இந்த பட்டியலை பத்திரிக்கைகள் மற்றும் இணையதளங்களில் வெளியிட்டு, அதன் அடிப்படையில் அந்த அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தலாம்; அதனால், லஞ்சத்தை ஒழிக்க முடியாவிட்டாலும் கொஞ்சமாவது குறைக்கலாம்.
பட்டா மாறுதல் செய்வதற்கு சில நேரங்களில், கட்டுக் கட்டாய் லஞ்சம் கை மாறுகிறது; அதனை "கட்' பண்ணுவதற்கு ஆலோசனை தருகிறார் திருப்பூரைச் சேர்ந்த முருகராஜ்...
ஒருவர் பூமியை கிரயம் செய்யும்போது, பட்டா மாறுதல் மனுவில், வாங்குபவரும், விற்பவரும் கையெழுத்திட்டு, சார்பதிவாளர் அலுவலகத்தில் தருகின்றனர்; முன்பெல்லாம், இந்த மனு, தாலுகா அலுவலகத்துக்கு வந்து அவர்களாகவே பட்டா மாறுதல் செய்து கொள்வர்; தற்போது, இதனை அனுப்புவதில்லை. இதுவே, வருவாய்த்துறையினருக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.
தாலுகா அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றை "இன்டர்நெட்' மூலம் இணைத்தால் இதற்கு தீர்வு காணலாம்; கிரயம் முடிந்து, பத்திரம் "ஸ்கேன்' செய்யும்போது, அந்தந்த வருவாய் கிராமங்களில் சர்வே எண்களில் வாங்குபவர், விற்பவர், செய்தால், அதனை 30 விஸ்தீரணம் போன்றவற்றை பதிவு செய்யவேண்டும்.


அப்போதே அனைத்து அலுவலகங்களிலும் உள்ள பட்டாவில் பதிவாகி, நேரடியாக வேறு பெயருக்கு பட்டா மாறுதலாகி விடும். அதற்கு சார்பதிவாளர் மற்றும் வருவாய்த்துறையினர் ஒப்புதல் அளித்தாலே போதுமானது. கிரயம் பெற்றவர், வருவாய்த்துறையை அணுகி, தனது பெயர் பட்டாவில் வந்த விபரத்துக்கு கணினி சிட்டா மனுச் செய்து, உண்மை நகலை பெற்றுக்கொள்ளலாம்.
இதனை தமிழக அரசு செயல்படுத்தினால், வருவாய்த்துறையிலும், பட்டா மாறுதலிலும் லஞ்சம் பெருவாரியாகக் குறையும். தொழில் நுட்ப வசதிகளைப் பயன் படுத்தினால், இதே போல பல துறைகளில் லஞ்சத்தையும், முறைகேடுகளையும் ஒழிக்க முடியும்; யோசிக்குமா தமிழக அரசு?
ஒரு மாதத்தில் டிஸ்மிஸ்: பொள்ளாச்சி கோமங்கலம்புதூர் திருநாவுக்கரசு எழுதியுள்ள கடிதம்...
அரசு அலுவலகங்களில் லஞ்சத்தைக் குறைக்க வேண்டுமெனில், ஒவ்வொரு வேலைக்கும் ஒரு கால வரையறை செய்ய வேண்டும்; குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் பணி முடியாவிட்டால், அதற்கான காரணம், விண்ணப்பதாரர்க்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்; அரசுக் கணக்கில் செலுத்தப்படும் தொகைக்கு, உடனுக்குடன் ரசீது தரப்பட வேண்டும்.
இந்த நடவடிக்கைகளுக்கு முரணாக செயல்படும் லஞ்ச அதிகாரிகளின் மீது வழக்குகள் பதிவு நாட்களுக்குள் விசாரித்து முடித்து, தீர்ப்பளிக்க வேண்டும். லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்க்கு மேல் முறையீடு வாய்ப்பு எதுவும் தராமல், பணியிலிருந்தும் "டிஸ்மிஸ்' செய்ய வேண்டும்.
பறிக்கப்படுவதே...லஞ்சம்: கோவை எஸ்.எம்.பாளையம் ஆசிரியர் காலனியிலிருந்து எழுதுகிறார் ஜெயராமன்...
புது வீடுக்கான "பிளான் அப்ரூவல்' வாங்க இரண்டாயிரம் ரூபாய், மின் இணைப்புக்கு மூவாயிரம் ரூபாய், சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கச் சான்று வாங்க மூன்று முறை தலா 200 ரூபாய், எனது மூன்று பேரக்குழந்தைகளுக்கு பிறப்புச்சான்று வாங்க 300 ரூபாய்...என நிறைய லஞ்சம் கொடுத்துள்ளேன்; எனது அனுபவத்தில் லஞ்சம் தரப்படவில்லை; பறிக்கப்பட்டதே உண்மை.
ரயில்களில் டிக்கெட் வாங்க கணினி மயமாவதற்கு முன், அங்கிருந்த "புக்கிங் கிளார்க்' சொல்வதையே நம்ப வேண்டியிருந்தது; இன்றைக்கு, தொழில்நுட்ப முன்னேற்றம் அங்கே நடந்த முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. எல்லாத்துறைகளிலும் "மின் ஆளுமை'யை கொண்டு வந்தால், லஞ்சத்தையும், முறைகேட்டையும் பெருமளவில் தடுக்க முடியும்.
நேர்மையாளர்கள் பத்து சதவீதம்: சட்டங்களை கடுமையாக்குவதைத் தவிர, லஞ்சத்தை ஒழிக்க வேறு வழியே இல்லை என்கிறார் ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.பி., வெள்ளிங்கிரி. அவரது கருத்துப் பகிர்வு...
லஞ்சம் இல்லாத துறை இல்லை. நூற்றுக்கு 90 சதவீதம் பேர், லஞ்சம் வாங்கித்தான் பிழைப்பு நடத்துகிறார்கள். லஞ்சம் கொடுக்காமல், எந்த அலுவலகத்திலும் எந்த வேலையுமே நடப்பதில்லை. லஞ்சம் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலையில், அரசு அலுவலர்கள் உள்ளனர்.
நேரடியாக பலர் லஞ்சம் வாங்குகின்றனர்; சில அதிகாரிகள், தங்களுக்குக் கீழுள்ள அலுவலர்கள் அல்லது இடைத்தரகர்கள் மூலமாகவும், உறவினர், நண்பர்கள் மூலமாகவும் லஞ்சம் வாங்குவதைப்  ரவலாகப் பார்க்க முடிகிறது; இவை எதுவுமே இல்லாமல், தெரிந்த இடங்களில் கொண்டு போய், லஞ்சம் கொடுக்கச் சொல்லும் அதிகாரிகளும் இருக்கின்றனர்.
லஞ்சம் இல்லாத வாழ்க்கையே வாழ முடியாதா என்றால் வாழ முடியும்; அதற்கு நமது சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்; சட்டங்கள் கடுமையானால்தான், லஞ்சம் உள்ளிட்ட எல்லா குற்றங்களும் குறையும். எந்தெந்த வகையில், சட்டம் கடுமையாக்கப்பட வேண்டுமென்று நீதித்துறைக்கு பல கடிதங்கள் எழுதியிருக்கிறேன்; இப்போது சட்ட கமிஷனுக்கும் தெரியப்படுத்தியுள்ளேன்.
காத்திருக்க நேரமில்லை: அத்தைக்கு எப்போது மீசை முளைப்பது; சித்தப்பா என்று எப்போது அழைப்பது? என்கிற கதையாக, "சட்டங்கள் என்றைக்கு கடுமையாவது, அதுவரை லஞ்சம் தர வேண்டுமா' என்கிறார் லஞ்ச ஒழிப்புத்துறையைச் சேர்ந்த ஓர் உயர் அதிகாரி. அவரது கருத்து...
சட்டம் கடுமையாகும் என்று காத்திருப்பது, கானல் நீரிலே தாகம் தணிக்க நினைப்பது போன்றது; என்றோ கிடைக்கும் தீர்வுக்காக, இன்று நடக்கும் பிரச்னையை கண்டு கொள்ளாமலிருக்க முடியாது.
இப்போது வாங்கும்லஞ்சத்தை இப்போதேதான் பிடிக்க வேண்டும். லஞ்சம் வாங்குவோரைத் தண்டிக்க, தற்போதுள்ள சட்டங்களே போதுமானதாக இல்லை என்பது ஓரளவு உண்மைதான்.
ஆனால், இந்த சட்டத்தின்படியே, ஏராளமானவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் மறுக்க முடியாது. லஞ்சம் பரவலானதைப் போல, அதை எதிர்ப்பவர்களும் பரவலாகவில்லை என்பதுதான் சமூக முரணாக இருக்கிறது. இந்த விகிதாச்சாரத்திலுள்ள இடைவெளியைக் குறைக்கின்ற பொறுப்பு, ஊடகங்களுக்கும் உள்ளது.
எந்தத் துறையில், எந்த அலுவலகத்தில் லஞ்சம் அதிகமாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினால், மக்களும், மேலதிகாரிகளும் கொஞ்சம் விழிப்படைவார்கள்; மக்களும் கொஞ்சம் ஒத்துழைக்க முன் வரும்பட்சத்தில்தான், அந்த இடத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்; மீண்டும் மீண்டும் நாங்கள் வேண்டுவது, மக்களின் ஒத்துழைப்பைத்தான்.
வராவிட்டாலும் தரமாட்டேன்: இந்த முதியவரின் உறுதி, எல்லோருக்கும் வந்தால் எங்கே போகும் லஞ்சம்...?
எனது பெயர் சுப்பிரமணியம் (71); ஓய்வு பெற்ற நூலகர்; நீலகிரி மாவட்டம் செருமுள்ளியில் வசிக்கிறேன். எனது 35 ஆண்டு கால நூலகப் பணியில், ஒரு குறிப்பட்ட அரசாணைப்படி, எனக்கு பணப்பலன் கிடைக்க வாய்ப்புள்ளதா என்று தகவல் உரிமைச்சட்டத்தில் கேட்டிருந்தேன். அதற்கு, பொது நூலக இயக்குனர் அனுமதித்தவுடன் நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று பதில் வந்தது.
உரிய சான்றுகளுடன் நூலக இயக்குனருக்கு விண்ணப்பித்தேன்; அதற்கு எந்த பதிலும் வரவில்லை. லஞ்சம் கொடுத்தால், இந்த நிலுவைத் தொகை நிச்சயமாக எனக்குக் கிடைத்திருக்கும்; அப்படி வாங்குவதற்கு எனக்கு மனமில்லாததால், ஓராண்டுக்கும் மேலாக போராடி வருகிறேன்.
இந்த போராட்டத்திலும், தகவல் உரிமைச் சட்டத்தின் பயன்பாடு குறித்து, எனக்கொரு திருப்தி; எனக்கு வர வேண்டிய நிலுவைத்தொகை கிடைக்குமா, கிடைக்காதா என்பது தெரியவில்லை; ஆனாலும், நான் நிச்சயமாக லஞ்சம் தர மாட்டேன்.


 ************************************************************


4 comments:

ADMIN said...

நல்லதொரு விழிப்புணர்வு பதிவு..!! நன்றி குணா.

RAMA RAVI (RAMVI) said...

இந்தியாவில் லஞ்சம் வாங்குவதில் காவல் துறை முதலிடத்தில் இருப்பது மிகவும் வேதனை தரும் விஷயம்.

நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவு,குணா.நன்றி பகிர்வுக்கு.

N.H. Narasimma Prasad said...

நாம் என்ன தான் 'லஞ்சம், லஞ்சம்' என்று காட்டு கத்தல் கத்தினாலும், லஞ்சம் இப்போதைக்கு நிற்கப்போவதுமில்லை. அதற்க்கு சில காலங்கள் ஆகலாம். நமக்கு பின்னால் வரப்போகிற சந்ததிகள் காலத்தில் குறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் முற்றிலுமாக குறையாது. இதுவே நிதர்சனம். பகிர்வுக்கு நன்றி.

SS Music said...

உங்கள் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கியவர்களின் விவரங்கள்

www.nobribeintamilnadu.blogspot.com

தயவு செய்து உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுத்து அதில் ``Comment Option`` ல் கிளிக் செய்து
லஞ்சம் வாங்கியவரின் பெயர், பதவி, கொடுத்த லஞ்சம், எதற்காக,போன்ற விவரங்களை பதிவு செய்யவும்

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...