Thursday, August 11, 2011

மற்றவை - திரையுலகில் வாழ்ந்து கெட்டவர்கள்

              * திரையுலகில் வாழ்ந்து கெட்டவர்கள் *

ன்று எதேச்சையாக சிவாஜி , சாவித்திரி நடித்த பாசமலர் படத்தில் வரும் "மலர்ந்து மலராத" பாடலை டி.வி.யில் பார்த்தேன். சாவித்திரியின் நடிப்பைப் பார்த்து வியந்தேன். அப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகையின் திரையுலக வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கைப் பற்றிய கட்டுரைகளை இணையத்தில்  தேடிப்பார்த்தேன். படித்தவற்றை தொகுத்து கொடுத்திருக்கிறேன். படித்த பின் புத்திசாலித்தனம் இல்லாமல் அப்பாவியாக இருந்ததால்தான் நடிகை சாவித்திரியின் பிற்பகுதி வாழ்க்கை மிகவும் சோகமாக போனது என்ற விசயம் என் மனதிற்கு தோணியது.

படித்துப் பாருங்கள்.



* நடிகை சாவித்திரி ஆந்திராவின் குண்டுர் மாவட்டத்தில் உள்ள சிறாயூரில் பிறந்தவர். நாடகதுறையில் அறிமுகமாகி அங்கிருந்து சினிமாவிற்கு வந்தவர். எட்டாம் வகுப்புவரை படித்திருக்கிறார்.

* எல்.வி. பிரசாத்தின் சம்சாரம் என்ற படத்தில் அறிமுகமானார்.

* தமிழ் தெலுங்கு ஹிந்தி என்று முந்நூற்று பதினெட்டு படங்களில் நடித்திருக்கிறார்.

* தமிழில் குழந்தை உள்ளம் பிராப்தம் ஆகிய இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். தெலுங்கிலும் நான்கு படங்களை இயக்கியிருக்கிறார்.

* மகாகவி பாரதியின் மீது மரியாதை கொண்டு எட்டயபுரத்தில் குடிநீர்க் கிணறு ஒன்றை உருவாக்கி தந்திருக்கிறார் சாவித்திரி.



திரையுலகில் கொடி கட்டிப் பறந்த அவர் காதல் மன்னன் என்றழைக்கப்படும் ஜெமினி கணேசனை "மணம் போல் மாங்கல்யம்" என்ற படத்தில் நடித்த போதுதான் காதலிக்க ஆரம்பித்தார்.   கி.பி. 1956-ல் அவரை ரகசிய திருமணம் செய்து கொண்டார். அன்றைய நாட்களில் வெளி வந்த லக்ஸ் விளம்பர அட்டையில் சாவித்திரி கணேசன் என்று கையெழுத்துப் போடும் போதுதான் ஜெமினி கணேசனை திருமணம் செய்தது அனைவருக்கும் தெரிந்தது. ஏற்கனவே திருமணமான ஜெமினி கணேசனை அவர் இரண்டாம் திருமணம் செய்த பின் சில காலம் சந்தோசமாகச் சென்றது. அவர் விஜய சாமுண்டேஸ்வரி மற்றும் சதீஸ் என்ற இரண்டு குழந்தைகள் பெற்றெடுத்தார். குழந்தைகள் வளர்ப்பில் ஸ்டிரிக்டாகவும், ஒழுக்கமாகவும், மிகுந்த அன்பாகவும் இருந்தார். தொலைகாட்சிகளே இல்லாத அந்தக் காலத்தில் தனது குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக 16MM புரஜெக்டரை வீட்டில் வைத்திருந்தார். இடது கை பழக்கம் உடையவர். கிரிக்கெட் மேல் அலாதி பிரியம் கொண்டவர். சென்னையில் சிவாஜி கணேசனுடன் ஸ்டார் கிரிக்கெட் மேட்சில் கலந்து விளையாடி இருக்கிறார். சாவித்திரி பொதுவாக இரக்க சுபாவம் உடையவர். எல்லோருடனும் அன்பாகவும், மரியாதையாகவும் பழகுவார். ஆனால் அப்பாவி. நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர்.  அவரது அப்பாவித்தனத்தை நிறைய பேர் சுயலாபத்துக்காக பயன்படுத்தினர். உதவும் மனப் பான்மை கொண்டவர். ஒரு முறை பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியைச் சந்தித்து தனது தங்க, வைர நகைகளை பிரதமரின் ரிலீஃப் பண்ட்-க்காக கொடுத்திருக்கிறார்.

சாவித்திரி வசதியாக இருந்த போது, காலில் தங்கக்கொலுசு அணிந்தார். 
"தங்க நகை என்பது லட்சுமிக்கு சமம். தங்க நகைகளை கழுத்திலும், கையிலும் அணியலாம். காலில் அணியக்கூடாது" என்று பெரியவர்கள் கூறியதைத் தொடர்ந்து, தங்கக் கொலுசுகளைக் கழற்றிவிட்டு, வெள்ளிக்கொலுசு அணியலானார்.

இந்த சமயத்தில் தனது காதல் கணவர் , தன்னை விட்டு பிரிந்து, முதல் மனைவியிடம் சென்றபின். நொடித்துப் போனார். அப்புறம் கடன் வாங்கி சொந்தமாகப் படங்கள் எடுத்து நஷ்டப்பட்டு, இருந்த வீடு, சொத்துக்களை விற்று அண்ணா நகரில் வாடகை வீடு எடுத்து குடியிருந்தார்.ஜெமினிகணேசனைப் பிரிய நேரிட்டதாலும் மனம் உடைந்த அவர், துக்கத்தை மறப்பதற்காக மது அருந்தலானார். நாளடைவில் மதுவுக்கு அடிமையானார். அதனால் அவர் உடல் நலம் சீர்கெட்டது.

இடையில் "புகுந்தவீடு", "வல்லவனுக்கு வல்லவன்" ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்தார்.

சுருக்கமாகச் சொன்னால், "பிராப்தம்" படத்துடன் தமிழ்ப்பட உலகில் சாவித்திரி சகாப்தம் முடிந்து விட்டது.
01-05-1980  அன்று மைசூரில் நடைபெறும் சினிமா படப்பிடிப்பிற்காக நடிகை சாவித்திரி பெங்களூர் சென்றார். பெங்களூரில் "சாளுக்கியா" என்ற ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார். உடல் நிலை சரியில்லாமல் அவர் அறையில் மயங்கி விட்டார்.

அப்புறம் அன்று காலை அவர் தனது அறையில் மயங்கிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சாவித்திரியை ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்தவர், சரோஜாதேவி. அன்றைய முதலமைச்சர் குண்டுராவை சந்தித்து, சாவித்திரிக்கு சிறந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.

உடனடியாக ஜெமினிகணேசன் பெங்களூருக்கு விரைந்து சென்றார். சாவித்திரியைப் பார்த்து கண் கலங்கி அருகிலேயே இருந்தார். கோமா நிலையில் இருந்த அவர் பின்னர் உணர்வு நிலைக்குத் திரும்பினார். இருப்பினும் சில மாதங்கள் சிகிச்சை தொடர்ந்து பெற்றார். இடையில் "ஆ..அம்மா" என்ற வார்த்தையை மட்டும்தான் உச்சரித்தார்.

டிசம்பர் 26, 1981 அன்று மறைந்து விட்டார்.

அவரின் கடைசி நேரத்தில் எடுத்த புகைப்படம் இது.


இவரைப் பற்றி ஒரு பிரபல எழுத்தாளர் சிவசங்கரி தனது அனுபவத்தை எழுதியுள்ளார்……..கீழே வெளியிட்டுள்ளேன்.

அன்று…
அப்போது எனக்கு என்ன வயசிருக்கும்?
பத்து..? பதினொன்று..?

என் ஸ்நேகிதிக்கும் எனக்கும் ரொம்ப நாட்களாக ஒரு ஆசை… குண்டு முகமும், வண்டுக் கண்களும், ஈர உதடுகளும், அருமையான நடிப்புமாய் இருக்கும் சாவித்திரியை எப்படியாவது நேரில் பார்த்து ஒரு சில வார்த்தைகளாவது பேச வேண்டும் என்று!

எங்கு பார்ப்பது? எப்படிப் பேசுவது?

”பாண்டிபஜார் ராஜகுமாரி தியேட்டருக்குப் பக்கத்துலதானாம் சாவித்திரி வீடு.” தெருப் பெயர், வீட்டு நம்பர் தெரியாது. யாரையாவது நிறுத்தி ‘நடிகை சாவித்திரி வீடு எது?’ என்று கேட்கக் கூச்சம். தணிகாசலம் செட்டி தெரு, டாக்டர் சிங்காரவேலு தெரு என்று ஒவ்வொன்றாகப் புகுந்து புறப்பட்டோம். பெரிசாய்க் காணப்பட்ட வீடுகளின் முன் நின்று, சாவித்திரியின் முகம் தெரிகிறதா என்று தேடினோம்.

எங்கள் அதிர்ஷ்டம்… மாரீஸ் மைனர் காரை தானே ஓட்டிக்கொண்டு சாவித்திரி எங்களைக் கடந்து சென்றார். ஓட்டமும் நடையுமாக அந்த வண்டியைத் தொடர்ந்தோம். நல்லவேளையாக, நாலாவது வீட்டு காம்பவுண்டுக்குள் அந்தக் கார் நுழைந்துவிட்டது.

பொசு பொசுவென்று மூச்சுவிட்டுக்கொண்டு, கேட்டைத் தாண்டி, போர்ட்டிகோவில் நின்றோம்.

”எவரும்மா அதி?” – தெலுங்கில் ஒரு பெரியவரின் வினவல்.

”சாவித்திரியைப் பார்க்கணும்.”

”அதெல்லாம் முடியாது. அவங்க வீட்டுல இல்லே!”

”இப்பப் பார்த்தோமே, தானே வண்டியை ஓட்டிண்டு வந்தாங்களே..!”

”அது சாவித்திரி இல்லே, அவங்க அக்கா! போங்க, போங்க..!”

மனுஷர் பொய் சொன்னதும் எங்களுக்கு அழுகையே வந்துவிட்டது. ஆனால், அடுத்த நிமிஷம்… யார் செய்த புண்ணியமோ, சாவித்திரியே வாசலுக்கு வந்து விட்டார்.

மேக்கப் போட்ட முகம்; கோடு போட்ட ஷிபானோ ஏதோ… மெல்லிய புடவை; திலகம்; சிரிப்பு; அழகு.

”யாரும்மா?”

”நாங்க உங்க ஃபேன்ஸ். ரொம்ப நேரமா வெயில்ல காத்திட்டிருக்கோம்.”

”அப்படியா? ஷூட்டிங்லேர்ந்து நேரா இப்பதான் வரேன். சாப்டுட்டுத் திரும்பப்
போகணும். சொல்லுங்க, என்ன வேணும்?”

”ஆட்டோகிராப்…”

”அவ்வளவுதானே… கொடுங்க.”

நீட்டிய புத்தகத்தை மாரீஸ் மைனர் கார் மேல் வைத்து ‘சாவித்திரி’ என்று இடது கையால் கையெழுத்துப் போட்டார்.

கிட்டத்தில் – ரொம்பக்கிட்டத்தில், அவர் சேலை நம் மேல் படுமளவுக்குக் கிட்டத்தில் நின்று பார்த்தபோது பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

நாங்கள் ”மனம்போல மாங்கல்யத்தில் உங்க நடிப்பு பிரமாதம்” என்று சொல்லவும், அவர் சிரித்தார். ”தாங்க்ஸ்” என்றார்.

அந்தச் சிரிப்பும் குரலும் ரொம்ப நாட்களுக்கு மனசில் பசுமையாக இருந்தது நிஜம்.

இன்று…

சாவித்திரி உடம்பு சரியில்லாமல் படுத்து ஒரு வருஷமாகிவிட்டது!

அண்ணா நகர்; சின்ன வீடு; வாசலில் பழசாகி, உதிரும் நிலையில் ஒருதென்னங்கீற்றுப் பந்தல்.

நுழைந்ததும் ஒரு ஹால்.

மேஜை மேல் – ஒருக்களித்து உட்கார்ந்து, தலையை மேலே நிமிர்த்தி, கூலிங்கிளாஸ், பூப்போட்ட சேலையில் அழகாய்க் காட்சி தரும் சாவித்திரியின் படம். ஈரம் பளபளக்கும் உதடுகளோடு சிரிக்கும் சாவித்திரியின் இன்னொரு ஓவியம்! மங்கி,
பாலீஷ் இழந்த கேடயங்கள் ஓரிரண்டு…

கிழிந்த அழுக்கு சோபாக்கள், காற்றில் ஆடும் பழைய கர்ட்டன்கள், சொறி பிடித்த வெள்ளை நாய் ஒன்று….

முன்கூட்டியே தெரிவித்துவிட்டுச் சென்றதால் மகன் சதீஷூம், உறவினர்
வெங்கடரத்தினம் பாபுவும் வரவேற்று அமரச் சொன்னார்கள்.

”அம்மகாருவைப் பார்க்கிறீங்களா?”

உள்ளே இன்னொரு அறைக்குள் நுழைகிறோம்.

படுக்கையில் எலும்புச்சுருளாக அவர். ரொம்ப சூம்பிப் போன கை, கால்கள்…
கறுத்துப்போன தோல்… மூன்று வயசுப் பிள்ளையின் வளர்த்தி. மூடின கண்கள்; மூக்கிலிருந்து ஓடும் ரப்பர் குழாய்; மழமழவென்று வாரி இரட்டைப் பின்னலாகப் பின்னி, மடித்துக் கட்டப்பட்ட முடி; சிவப்புப் பொட்டு.

”அம்மகாரு ச்சூடு… அம்மகாரு இக்கட ச்சூடு! மீ ப்ரெண்ட் ஒச்சுண்டாரு…
ச்சூடும்மா” என்று நர்ஸூம் பாபுவும் குனிந்து குரல் கொடுக்க, சாவித்திரி
மெதுவாகக் கண்களைத் திறக்கிறார்.

உள்ளுக்குள் என்னமோ வேதனை இருக்கிற தினுசில் கைகளை இப்படியும், அப்படியும் சுழற்றுகிறார்; மஞ்சள் ஏறிப்போன பற்களை ‘நக் நக்’ கென்று கடிக்கிறார்; அரை நிமிஷம் என்னை உறுத்துப் பார்க்கிறார். திரும்ப கண்களை மூடி, அமைதியாகிறார்.

ஹோ… சாவித்திரியா! இவரா!

நவரசங்களையும் விழியோரத்தில் நிறுத்தி, உதட்டசைவால் அனைவரையும் ஆக்கிரமித்து, நடிகையர் திலகம் என்ற பட்டப் பெயரோடு பவனி வந்த சாவித்திரி இவரா?

இல்லை, இல்லை… நம்பமாட்டேன்! சத்தியம் பண்ணினாலும் இது சாவித்திரி என்று ஒப்புக் கொள்ளமாட்டேன்.

கண்ணில் ஊறிவிட்ட ஜலத்தைச் சமாளிப்பதற்காகத் தலையைக் குனிந்து கொள்கிறேன். கவனத்தை அறையின் மற்ற விவரங்களில் செலுத்துகிறேன்.

ஒரு பக்கமாய் ஸ்டெரலைஸ் செய்யும் பாத்திரம்… ஒரு மேஜையில் காம்ப்ளான், ப்ரொடீனெக்ஸ், மருந்துகள்… உடம்புப் புண்களைத் தவிர்க்க ‘ஆல்ஃபாபெட்’ என்ற படுக்கையை உபயோகிக்கிறார்கள்.

இது குமிழ் குமிழான ரப்பராலான படுக்கை. மின்சாரத்தில் இயங்கி, சிறு அலைகளை உண்டாக்குவதன் மூலம் காற்றோட்டத்தை உண்டாக்கி, நோயாளியின் உடம்பை ரணத்திலிருந்து காக்கிறது.

”இந்தப் படுக்கை இல்லேன்னா அம்மகாரு நிலைமை மோசமா ஆகி யிருக்கும்…”

இதைத் தவிர டானிக், மருந்து வகையறா… முழு நேர நர்ஸ் ஒருவர்…

சாவித்திரிக்கு பெங்களூரில் கோமா வந்தபோது அதை முதலில் பார்த்த நபர் சாவித்திரியின் பதினாறு வயசு மகன் சதீஷ் தான்.

”ஒரு வாரமா ராப்பகலா ஷூட்டிங் இருந்ததால, அம்மா இன்ஸூலின் போட்டுக்காம விட்டுட்டாங்க. பெங்களூர் போன அன்னிக்கு ராத்திரி வெறும் வயித்தோட இஞ்ஜெக்ஷன் போட்டுக்கிட்டுப் படுத்துட்டாங்க. மூணு மணி சுமாருக்கு நான் பாத்ரூம் போக எழுந்தப்ப அம்மா வாயில நுரையோட, நினைவிழந்து படுத்திருந்தாங்க. இதுக்கு முன்னால இரண்டு மூணு தடவை அம்மாவுக்கு ‘கோமா’ வந்து, உடனே கவனிச்சதுலே சரியாயிருக்கு. இந்த முறைதான் ஏனோ இப்படிப் பெரிசா படுத்துட்டாங்க” என்கிறார்.

நாலு பேராய், பத்துப் பேராய் சாவித்திரிஅபிமானிகள் யார் யாரோ வந்து, ஜன்னல் வழியாக சாவித்திரியைப் பார்த்து விட்டுப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

இத்தனை பேரின் அன்புக்கும் பரிவுக்கும் பிரார்த்தனைக்கும் பலன் இருக்கவேண்டும். தனித்துத் தவிக்கும் பிள்ளைக்காகவாவது சாவித்திரி மயக்கத்திலிருந்து மீண்டு வரவேண்டும்.


** சிவசங்கரி **

அவரின் நினைவாக இந்திய அஞ்சல் துறை நினைவு தபால் தலையை பிப்ரவரி 13 2011 அன்று வெளியிட்டது.

அவரின் வாழ்க்கையைப் படித்துப் பார்க்கும் போது, எனக்கு ஒன்று மட்டும் புரிகிறது. புத்திசாலித்தனமாக பிழைக்க வேண்டும். எது நடந்தாலும் நொடித்துப் போகக் கூடாது.

Wednesday, August 10, 2011

தெரிஞ்சுக்கோங்க - போதி தர்மரும் 'ஏழாம் அறிவு' சூர்யாவும்


சூர்யாவின் முப்பரிமாண நடிப்பில் விரைவில் வெளி வரும் 'ஏழாம் அறிவு’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் போதி தர்மர் என்ற யோகியின் கதாபாத்திரம். அந்த போதி தர்மர் கதாபாத்திரம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு காஞ்சிபுரத்தில் பிறந்த ஒரு தமிழனுடைய வரலாற்றைச் சொல்கிறது. அவரின் சரித்திரத்தைக் கொஞ்சம் பார்ப்போமா..

போதி தருமன் - 1887ஆம் ஆண்டு யோஷிடோஷி என்ற கலைஞரால் வரையப்பட்ட ஒரு படம்


காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த பல்லவ மன்னனான கந்தவர்மன் IV-க்கு மூன்றாவதாகப் பிறந்த குழந்தைதான் போதிதர்மர். இவரின் இயற்பெயர் புத்த வர்மன்(பௌத்தவர்மப் பல்லவன்).  கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்:

1. நந்திவர்மன் I
2. குமாரவிஷ்ணு II
3. புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)

அக்காலத்தில் பல்லவ வம்சத்தில் பிறந்த கடைசிக் குழந்தையை புத்த மதத்திற்கு அர்ப்பணிப்பது மரபு. எனவே  பல்லவ மன்னன் கந்தவர்மன் IV, மகனின் குருகுல வாழ்க்கைக்காக பிரஜ் என்கிற சமய குருவிடம் சேர்த்திருக்கிறார் . இவர் காஞ்சியில் தங்கி பௌத்த சிந்தனைகளைப் பரப்பி வந்தவர். சிறுவன் போதியின்  அபார ஞானத்தைப் பார்த்து பிரமித்த பிரஜ், தனக்கு அடுத்த வாரிசாக 28வது குருவாக போதியை  நியமிக்கிறார். காலப்போக்கில் போதி தர்மர் காஞ்சிபுரத்திலிருந்தபடியே பல கலைகளைக் கற்றுத் தேர்கிறார்.  இதில் களறி, வர்மம் போன்ற அதிரடிக் கலைகளும் உண்டு. காஞ்சியிலிருந்து நாலந்தா சென்று அங்கிருந்து கி.பி.526-ல் தெற்கு சீனாவிற்குச் செல்கிறார் போதி தர்மர்.போதிதர்மாவின் காலம்  கி.பி.475-550 என்று பதிவுகள் கூறுகின்றன.

அன்றைய சீனப் பேரரசராக இருந்தவர் "லியாங் வு டீ".புத்த மதத்தில் கொண்ட ஈடுபாட்டால் பௌத்த  ஆலயங்களையும் விகாரங்களையும் நிறுவிய சீனப் பேரரசர். தமிழகத்திலிருந்து வந்த புத்தத் துறவியான  போதி தர்மரை கேள்விப்பட்டு மிகுந்த மரியாதையோடும், அன்போடும் உபசரித்து சீனாவில் தங்கிவிட  வேண்டுகிறார். அங்கு ஷாஓலின் என்ற இடத்தில் தங்கி பௌத்த மதத்தைப் பரப்பிய போதி தர்மர், தமிழகத்தில் தான் கற்ற கலைகளையும் சீனர்களுக்குப் பயிற்றுவித்தார். அப்படி போதிதர்மர் கற்றுக் கொடுத்த கலைகளில் ஒன்றுதான் குங்ஃபூ.


போதிதர்மர் சீனாவில் இருந்த காலத்தில் புத்தபிக்குகள் பிச்சை எடுத்துக்கொண்டு பலவீனமானவர்களாகவும் சமுதாயத்திற்கே பாரமாகவும் இருந்தார்கள். மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டுக்கொண்டு பயந்தே வாழ்ந்திருந்தார்கள். ஆனால் போதிதர்மர் தம்முடைய சீடர்களுக்கு மூச்சுப்பயிற்சியின் சில நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார். அந்தப் பயிற்சிகளின் மூலம் மனதின் இயக்கத்தையும் உடலின் செயல்பாட்டையும் அடக்கமுடியும். இன்னொரு பயிற்சியின்மூலம் உடலை வலுவாக்கி அசுரபலத்தைப் பெறமுடியும். மனதை தீட்சண்யமாகச் செயல்படுத்த முடியும். உடற்பயிற்சிகளையும் சொல்லிக்கொடுத்தார். அத்துடன் அரிய நுட்பக்கலையான வர்ம சாஸ்திரத்தையும் சொல்லிக்கொடுத்தார்.

அவர்களுக்கு விவசாயம், சிறுதொழில்கள் போன்றவற்றைச் செய்யச் சொல்லிக் கொடுத்தார். தங்களது கோயில்களைச் சுற்றிலும் தங்களுக்குத் தேவையான உணவை அவர்களே விளைவித்துக்கொண்டார்கள். சமுதாயத்திடம் பிச்சையெடுப்பதில்லை. உடல் உறுதி அசுரபலம் ஆகியவற்றைக்கொண்டு சில தற்காப்பு முறைகளையும், தாக்குதல் முறைகளையும், ஆயுதங்களிலிருந்து பாதுக்காத்துக்கொள்ளும் முறைகளையும், உடலில் காயம் ஏற்படா முறைகளையும் கற்றுக்கொடுத்தார். பிற்காலத்தில் புத்தபிக்குக்கள், சமுதாயத்தின் உழைப்பின் பலன்களையெல்லாம் பிடுங்கித் தின்றுவிடுகிறார்கள் என்ற ஆத்திரத்தோடு சீனச்சக்கரவர்த்திகள் சிலர், பிக்குக்களை அடித்துக் கொல்வித்தபோது போதிதர்மரின் சீடபரம்பரையும் கோயில்களும் மட்டும் தப்பின.

அவ்வாறு போதிதர்மர் தோற்றுவித்த பௌத்தக்கோயில்களை ஷாஓலின்(Shaolin) கோயில்கள் என்பார்கள்.


போதி தர்மர் வாழ்ந்த இடத்தை சீனாவில் "ஷாஓலின் கோயில்" என்று இன்றைக்கும் வணங்கி வருகிறார்கள்.  அந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டில் ‘தென் இந்தியாவிலிருந்து வந்த போதி தர்மர் கற்றுத் தந்த கலை  குங்ஃபூ’ என்று குறிக்கப்பட்டுள்ளது. அவரை சீன மக்கள் "போ-ட்டி-தாமா" என்றுதான் செல்லமாக அழைக்கின்றனர். இந்த ஆதாரத்துடன் ஏழாம் அறிவு படத்தை மிரட்டலாக எடுத்திருக்கின்றனர்.

குங்ஃபு கலையை சீனாவிற்கு அறிமுகப்படுத்தியது ஒரு தமிழன் என்ற விசயம் நிச்சயம் பெருமையான விசயம்.  போதி தர்மர் வளர்த்த கலையை இன்றும் சீனாவில் தலைமுறை தலைமுறையாக கற்று வருகின்றனர்.

இந்த பதிவுடன் போதி தர்மர் கற்றுக் கொடுத்த குங்ஃபூ கலையின் முழு நீள டாக்குமெண்டரி வீடியோவை வெளியிட்டுள்ளேன். இதில் வரும் ஆக்சன் காட்சிகளைக் காணும் போது ஆச்சர்யமாக இருக்கிறது.

நம்ம சூர்யா வீடியோவில் வருவதைப் போல சண்டை போடுவாரா?. அப்ப படம் நிச்சயம் சூப்பராக இருக்கும். மேலும் எந்தக் கேரக்டரைக் கொடுத்தாலும் அதில் பர்பெக்ஷ்னாக நடிப்பவர் சூர்யா. இந்தக் கதாபாத்திரத்தின் மூலம் அவரின் ஆக்சன் காட்சிகளைக் காண மிகுந்த ஆவலாக இருக்கிறது. பார்க்கலாம் எப்படி நடித்திருக்கிறார் என்று.


***********************************************

Monday, August 08, 2011

எ.பி.க 11 - மேலை நாட்டுக் கானல் நீர்


வெளி நாட்டின் கலப்பு தமிழ் மண்ணில் கலந்ததை நினைத்து எழுதிய இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்த கவிதை.
                                               
                   * மேலை நாட்டுக் கானல் நீர் *



எள்ளளவு தமிழ் -
கொள்ளையளவு ஆங்கிலம் - அதுவே
தங்கிலீஷ் எனும் தமிங்கிலம் ;
காட்சி ஊடக கடல்களில்
அதிகம் ஆளும் இந்தத் திமிங்கிலம்...!

மொழியின் நலிவு -
மொழிக் கலப்பில் துவக்கம் ; - ஓர்
இனத்தின் அழிவு -
மொழியின் நலிவினில் துவக்கம்...!

மொழியில் மட்டுமா கலப்பு - இன்று
அனைத்திலும் மேலை நாட்டுக் கலப்பு ;
உணவில் கலப்பு -
நோயின் பிறப்பு ;
பண்பாட்டில் கலப்பு - சமூக
சீரழிவின் தொகுப்பு ; - இவையே
இன்றைய தீரா அருவருப்பு...!

பிறமொழிகளின் ஆளுமைக்கு காரணம் - அவை
வருமானம் தரும் மொழிகளாம் ;
வருமானம் தரும் - ஆனால்
அவை தன்மானம் தருமா...?
அதைப் பற்றி - இங்கு
யாருக்கு கவலை...!?

வருமானம் தரும்
மொழி... -  அது
ஒரு புறம் இருக்கட்டும் ;

ஆயினும் - இந்த
நாறிய மேலை நாட்டு -
நாகரிகம் என்ன தரும்...?! 
 

நடையில், உடையில்
பழகும் பண்பில், பாசத்தில் -
சிறந்த நட்பில் -
அழகிய காதலில் - இனிய
உறவில் - அட
அன்பில் கூட - நாம்
அன்னியப்பட்டுப் போனோம் - நம்
பழம்பெரும் உயர் பண்பாடு மறந்து !

கவின்மிகு - நம்
பண்பாட்டுச் சோலை ;
ஏன்...? - இந்த
மேலைக் கானல் நீர் -
பாய்ச்சும் வேலை...!

நன்றி - நா. இதயா ஏனாதி

Thursday, August 04, 2011

கேள்வி - பதில் : 7

            * கேள்வி - பதில் :  7 *

1. கேள்வி : மரணம் என்றாலே மனதிற்குள் ஒரு நடுக்கம் வந்து விடுகிறது. அப்படி இருக்கும் போது நாட்டிற்காக எல்லையில் காவல் காக்கும் இராணுவ வீரர்களின் மனநிலை எப்படி இருக்கும்?
[சுரேஷ் கிரிம்,ஜப்பான்]


பதில் :
நம்மைப் போல் மரணம் பற்றிய பயம் நிச்சயம் இராணுவ வீரர்களுக்கு இருக்காது. பயிற்சியின் போதே மரணத்தைப் பற்றிய பயத்தையும் போக்கி விடுவதாக கேள்விப் பட்டிருக்கிறேன். அவர்களெல்லாம்  "தில்"லானவர்கள். ஒரு வேளை, அவர்கள் சண்டையில் இறந்தால் அரசு அவர்களின் குடும்பங்களைக் கவனித்துக் கொள்ளும். அதனால் அவர்கள் அதைப் பற்றிக் கவலைப் பட மாட்டார்கள். மேலும் மரணம் பற்றிய பயம் இருந்தால் அவன் சிறந்த போர் வீரனாக இருக்க முடியாது.

2. கேள்வி : B.C. -  Before Christ; A.D.- After Death. இது பள்ளியில் நான் படித்தது. ஆனால், A.D. என்றால் டிக்ஷ்னரியில் Anno Domini என்று போட்டிருக்கிறது, அதன் அர்த்தம் என்ன?
[பென்னி அருள்சிங், கரூர்]

 
பதில் : B.C. அர்த்தம் சரி. Anno Domini என்றால் After Death அல்ல. 'இயேசு நாதர் அவதரித்த ஆண்டிலிருந்து' (In the year of our Lord) என்று அர்த்தம்.

3. கேள்வி : நம் அனைவருக்கும் ஒவ்வொரு வயதில் ஒவ்வொரு விசயமும் கற்றுக் கொடுக்கப் படுகிறது. அப்படியிருக்கையில் கற்றுக் கொடுக்காமலே டீன்-ஏஜ் பருவத்தில் காதல் உணர்வு எப்படி வருகிறது?
[சுரேஷ் கிரிம்,ஜப்பான்]

 
பதில் : யார் சொன்னது, காதல் பற்றி கற்றுக் கொடுக்கப் படவில்லையென்று. நாம் சிறு வயது முதலே டி.வி, சினிமா பார்க்க ஆரம்பித்து விடுகிறோம். காதல் கதை இல்லாத சினிமாவும், சீரியலும் உண்டா?.டீன்-ஏஜ் பருவத்திற்கு முன்னர், டி.வி அல்லது காதல் சம்பந்தமான காட்சிகள் வந்தால் அக்கறை இல்லாமல் பார்த்துக் கொண்டிருப்போம். ஆணுக்கும், பெண்ணுக்கும் காதல் உணர்வு தருகிற ஹார்மோன்ஸ் "ஆண்ட்ரோஜனும், டெஸ்ட்ரோஜனும்",  அளவிற்கதிகமாக வளர்வது டீன்-ஏஜ்-ல் தான். அந்த பருவத்தில், அதுதான் காதல் பற்றிய காட்சிகள் டி.வி அல்லது சினிமாவில் வரும் போது நம் மனதை ஈர்க்க  வைக்கிறது. மேலும் இந்த சமூகமும் காதல் பற்றி நிறைய சொல்லித் தருகிறது.

4. ' சில்மிஷம் ' - சைவமா? அசைவமா?
 [ரமேஷ், கோவை]
 
 
பதில் :  காதலியிடம் என்றால் மட்டும் சைவம்!

5. கேள்வி : சாதாரண மனிதர்களுக்கும், உண்மையான ஞானிகளுக்கும் என்ன வித்தியாசம்?
[மதுவந்தி, ஈரோடு]
 

பதில் :
ஒரு குட்டிக் கதை! ஜப்பானில் வாழ்ந்த ஒரு தூய்மையான ஜென் ஞானி ஹக்கூயின், அவருக்கு ஒரு பிரச்சனை வந்தது. அதே ஊரில் வசித்த அழகிய பெண் ஒருத்தி கர்ப்பமடைந்தாள். பெற்றோர் எவ்வளவு மிரட்டியும் யார் அதற்குக் காரணம் என்று சொல்ல மறுத்த அவள், கடைசியில்  தயக்கத்துடன் 'ஹக்கூயின்' என்றாள். ஊர்மக்கள் திரண்டு போய் அந்த ஞானியை ஏசி விசாரித்த போது, 'அப்படியா?' என்றார் அந்தத் துறவி மென்மையாக. குழந்தை பிறந்த பிறகு பெண்ணின் உறவினர்கள் அதை எடுத்து அவரிடம் வந்து, 'இந்தக் குழந்தையை நீங்கள்தான் வளர்க்க வேண்டும்!' என்றனர். 'அப்படியா?' என்று புன்னகையுடன் கேட்டு, அந்தக் குழந்தையை ஹக்கூயின் ஓராண்டு காலம் ஒரு தாயைப் போல கண்ணுங்கருத்துமாக வளர்த்தார். அந்த ஓராண்டில் ஊரே அவரை ஒதுக்கி வைத்தது. 
 
இது கண்டு குற்ற உணர்வினால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மனம் வருந்தி, பெற்றொரிடம் 'நான் தப்பு செய்து விட்டேன். என் குழந்தைக்குத் தந்தை, காய்கறி மார்க்கெட்டில் வேலை பார்க்கும் ஒரு இளைஞன்!' என்றாள்.

ஊர்மக்கள் ஓடிச்சென்று ஹக்கூயினிடம் மன்னிப்புக் கேட்டார்கள். 'தவறு செய்து விட்டோம். குழந்தையைத் திருப்பித் தந்து விடுங்கள்' என்றார்கள். 'அப்படியா?' என்று அதே மென்மையான புன்னகையுடன் குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தார் ஹக்கூயின்.

சாதாரண மனிதனால் ஹக்கூயினைப் போல் இருக்க முடியுமா?அதுதான் வித்தியாசம்.

***********************************************



Wednesday, August 03, 2011

                              * மன்னிச்சு.... *

இன்று காலை சிறிது வேலை இருப்பதால் , எனது பதிவை மாலை வெளியிடுகிறேன். தாமதத்திற்கு மன்னிச்சு....



***********************************************

Tuesday, August 02, 2011

எ.பி.க - 10

                * எ.பி.க - 10 *

விதை வகைகளில் ஒவ்வொன்றும் ஒரு விதம். அது மரபுக்கவிதையாகட்டும், புதுக்கவிதையாகட்டும். ஹைக்கூ  வகைக் கவிதைகள் கூட ரசிக்க வைக்கும்.  மரபுக்கவிதையின் சந்தங்கள் அதை வாசிக்கும் போதே நயமாக வெளிப்படும். எளிமையான புதுக்கவிதைகள் படிக்கும் போது அதன் பொருளும், வார்த்தைகளும் ரசிக்கும் விதத்தில் இருக்கும்.

ஹைக்கூ வகைக் கவிதைகள்  மிக மிக எளிமையாக இருக்கும். அதன் அர்த்தங்கள் ஷார்ப்பாக(Sharp) இருக்கும். பொதுவாக கவிதைகள் படிக்கும் போது ஒவ்வொரு வரிகளுக்கும் கொஞ்சம் கற்பனையை நினைத்துக் கொண்டால் நிச்சயம் ரசிக்கும் வகையில் இருக்கும்.

கவிதைகள் எழுதும் பழக்கம்  ப்ளஸ் டூ படிக்கும் போதே எனக்கு ஆரம்பித்து விட்டது. எனது தமிழாசிரியரின் ஊக்குவிப்பில் நான் மரபுக்கவிதைகள் கூட எழுத ஆரம்பித்தேன். அறுசீர் ஆசிரிய விருத்தத்தில் கவிதைகள் எழுதுவது எனது அப்போதைய வழக்கம். எனது பதிவை வாசிக்கும் நண்பர்களுக்கு பின்னொரு நாளில் எனது மரபுக்கவிதை படைப்புகளை வெளியிடுகிறேன்.
இன்று நான் ரசித்த கவிதைகளை வெளியிடுகிறேன்.

ஹைக்கூ - 1

கறுத்த முகம்


யார் திட்டியது?
கறுத்து கிடக்கிறது
மேகத்தின் முகம்!

-சி.கலைவாணி

ஹைக்கூ - 2

உழைப்பு

நா வறண்டு
நிற்கிறான்
தண்ணீ­ர் பாக்கெட் விற்பவன்!

-பொதக்குடி ஜெ.வெற்றிமுரசு

ஹைக்கூ - 3

ஜன்னல்



மெல்லத் திறந்தது கதவு
தேவி தரிசனம்
'எதிர் வீட்டு ஜன்னல்'

-பி.என்.ஜெய்சங்கர், திருவாரூர்

ஹைக்கூ - 4

அழுகை
பூமி அழுக்காவதைக் கண்டு
மேகம் அழுகிறது....
மழை!

-ந.சிவநேசன்

ரேவா(வித்யாசமான பெயர்) என்பவர் உரை நடை வடிவில் எழுதிய அவரது வருங்கால கணவன்(காதலன்) பற்றின இந்தப் புதுக் கவிதையில் யதார்த்தமான பெண்ணின் மன எண்ணங்களை அழகாக சொல்லியிருக்கிறார்.

முகம் தெரியா என் காதல் கணவனுக்கு!!!!!?...



 ரவிவர்மன் ஓவியம் போல்
என் மனதில் நான் வரைந்துவைத்த
கற்பனைக் காவியமே...
கண்ணிறைந்த காதலனே...

காலங்கள் கரைந்தோட,
கனவுகளும் எனையாள,-என்
கற்பனை நாயகனே,
என் காத்திருக்க வைப்பதேனோ?...

 அன்னையாக வருவாயோ?
எனையாளும் தந்தையாக வருவாயோ?
தோள்கொடுத்து அரவணைக்கும்
தோழனாக வருவாயோ?
மாயங்கள் தான் புரிந்து,
என் வாழ்வில் மாற்றங்கள் தருவாயோ?

 மருமகனாய் வந்து
மகனாகிப் போவாயா?
இல்லை,
இருக்கின்ற கூட்டத்தில்
நீயும் ஒன்றாகிப் போவாயோ?

என் கற்பனை வாழ்விற்க்கு
தூரிகையாய் இருப்பாயா?
இல்லை,
துயர்கொண்டு நிறைக்கும்
துன்பமாய்ப் போவாயோ?...

தூங்காமல் நான் சேர்த்துவைத்த
இரவெல்லாம் காதல் கொண்டு நிறைப்பாயா?
இல்லை,
தூக்கத்தை தூக்கிலேற்றி
துயர் கொண்டு நிறைப்பாயோ?

 இதுவரை வாழ்த்த வாழ்க்கை
வீணென்று சொல்வாயா?
இல்லை,
உனைப் பார்க்காமல் இருந்திருந்த
காலமே மேல் என்று சொல்வாயோ?

 நம் குடும்பத்தின்
வேராய் அன்போடு படர்வாயா?
இல்லை,
உன் குடும்பம் வேறு,
நம் குடும்பம் வேறு என்று
வேறு வேறாய்ப் பிரிப்பாயோ?

 எனக்கென்ற என் திறமைதனை
தட்டிகொடுத்து வளர்ப்பாயா?
இல்லை,
தனித் திறமை என்பதெல்லாம்
தனக்கு ஒத்துவாராதென்று,
தார்மீக தடைதனை விதிப்பாயோ?

சண்டைகள் வரும்போதெல்லாம்
சமாதனம் செய்வாயா?
இல்லை,
" சனியன் " வந்த வேலையென,
தாய்வீடு அனுப்புவாயோ?

அந்திநேரம் என் மடிசாய்ந்து
உன் அலுவலக கதைதனைச்
சொல்வாயா?
இல்லை,
ஆண்மகன் நானென்று ஆணாதிக்கம்
புரிவாயோ?

 எது எப்படியோ ...
முகம் தெரியா என் காதல்
கணவனே...
வருகின்ற காலத்தில்,
காதலோடு நானிருப்பேன்...
உனக்கொரு துயர் என்றால்
என் உயிர்க்கொண்டு
உன் துயர்  துடைப்பேன்...
உன் தாரமாக இல்லாமல்
உனக்கொரு தாயாக நானிருப்பேன்..
என் அன்னைக்கு மேல்
இவள் என்ற பெயர் எடுப்பேன்...
காதல் கொண்டே
நம் காலம் முடிப்பேன்..

ரவிவர்மன் ஓவியம் போல்
என் மனதில் நான் வரைந்துவைத்த
கற்பனைக் காவியமே...
கண்ணிறைந்த காதலனே..   
முகம் தெரியா தூயவனே
உனக்கே தான் இக்கவிதை..
உனக்கே தான் இக்கவிதை..
காத்திருக்கு காதலோடு...

- ரேவா

பணத்திற்காக எழுதும் தரம் கெட்ட படைப்பாளிகளை ஒருவர் சாடுகின்ற மரபுக்கவிதை படைப்பு இது. அவரின் கருத்தைப் பற்றிச் சொல்ல நான் இதை வெளியிடவில்லை. மரபுக்கவிதையின் நயத்தை சொல்வதற்காக வெளியிடுகிறேன். படியுங்கள்..


பொன்னென்றும் பூவென்றும் புதுப்பாட்டுத் தேனென்றும்
பொழுதெல்லாம் பாடிநிற்பான் – அவன்
புகழ்க்கூட்டம் கூடிநிற்பான் – அந்தத்
திண்ணென்ற தடியன்தான் திறம்கெட்டத் தமிழன்தான்
திசையெங்கும் மோடிவைப்பான் – தாய்க்கு
வசையெங்கும் தேடிவைப்பான்

எடுப்பார்கைப் பிள்ளைபோல் இருக்கின்றான் இவனாலே
இங்கிலீசு கூத்தாடுது – தமிழ்
இதுகண்டு வேர்த்தாடுது – உதை
கொடுப்பார்கள் கொடுத்தால்தான் குரங்காட்டம் நிற்குமெனில்
கொடுப்போமே எத்தாவது – ஓங்கிக்
கொடுப்போமே குத்தாவது!



******************************************

Monday, August 01, 2011

தெரிஞ்சுக்கோங்க - 108

    * தெரிஞ்சுக்கோங்க - 108 *



108 என்ற நம்பர் நம் மக்கள் அனைவருக்கும் பரிச்சயமான நம்பர். எங்கு விபத்து நேர்ந்தாலும், ஏதேனும் அவசர சிகிச்சை தேவைப்படுமாயின் உடனடியாக இந்த நம்பருக்கு டயல் செய்தால் அடுத்த சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து விடும். அது நகரமாக இருந்தாலும் சரி. கிராமமாக இருந்தாலும் சரி.

நமக்கெல்லாம் இப்படி ஒரு வசதி கிடைத்தது பாராட்டத்தக்க விசயம்தான். அப்படிப்பட்ட 108 என்ற எண் கொண்ட ஆம்புலன்ஸ் வாகனத்தின் ஓட்டுனர்கள் + பணியாளர்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

தமிழகம் முழுவதும் பரபரப்பாக செயல்பட்டுவரும், தமிழக அரசின் 108 அவசர உதவி வாகனத்தில் பணியற்றும் ஊழியர்களுக்கு அவசர உதவி தேவைப்படுவதாக சொல்லி சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூசனத்திடம் மனு கொடுத்துவிட்டு வந்தார்கள் 108 ஆம்புலன்சை ஓட்டும் பைலட்டுகள்.

என்ன உங்களின் பிரச்சனை..? என்று நக்கீரன் நிருபர்கள் அவர்களைப் பேட்டியெடுக்கச் சென்ற போது கேட்டார்கள். அதற்கு அவர்கள் சொன்ன பதில் இவைதான்..
 


ஒன்னா... இரண்டா சார்....., தினம் தினம் பிரச்சனை தான் கொஞ்சம் கேளுங்க சார் என்றார்கள்.

2008-ல் இந்த திட்டம் துவங்கப்பட்டபோது எங்களுக்கு அடிப்படை சம்பளம் ஐந்தாயிரம், மற்றும் வருடத்திற்கு ஒருமுறை இருபது பர்சென்ட் இன்கிரிமெண்ட் தருவதாக சொன்னாங்க சார்.

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனமான இ.எம்.ஆர்.ஐ நிறுவனம்  தான் எங்களை வேலைக்கு சேர்த்தது. ஒரே ஆண்டில் அந்த நிறுவனம் மூடப்பட்டதால், அந்திராவில் உள்ள ஜி.வி.கே என்ற நிறுவனம் இப்போது 108 ஆம்புலன்ஸ் சேவையை செய்துகொண்டிருக்கிறது. தமிழக அரசிடமிருந்து வாங்கும் பணத்தில் எங்களுக்கு சம்பளம் கொடுக்கிறது.


காலை எட்டு மணிக்கும், இரவு எட்டு மணிக்கும் நங்கள் டியூட்டி மாத்திக்கணும், எங்க வீட்டுல இருந்து வண்டி நிக்கற எடத்துக்கு போக நாங்க ஒரு மணிநேரம் முன்னாலையே கிளம்பவேண்டும், அப்ப எங்களுக்கு காலை மதியம் என இரண்டு வேலைச் சாப்பாடும் கடையில் தான் சாப்பிட வேண்டும்.


இரவு பணிக்கு போகிறவர்களுக்கும் இதே போல இரண்டு வேலை கடை சாப்பாடு கடையில்தான்.   அனால், எங்களுக்கு சம்பளம் ஆறாயிரம் ரூபாயும், மருத்துவ உதவியாளர்களுக்கு ஏழாயிரம் ரூபாயும் கொடுக்கிறார்கள். இதில எப்படி சார் இரண்டு வேலை கடையில சாப்பிடமுடியும்.


உலகத்துல எல்லா நாட்டிலேயும் எட்டு மணி நேரம்தான் வேலை. ஆனால், எங்களுக்கு மட்டும் 12 மணி நேரம் வேலை வாங்குகிறார்கள். அந்த நான்கு மணி நேரத்துக்கு கூடுதல் சம்பளம் கொடுத்தால் பரவாயில்லை. அதுவும் தருவதில்லை.

மற்ற எல்லா இடங்களிலும், வேலை ஆட்களுக்கு, அரசு விடுமுறை நாட்கள், பொங்கல், பண்டிகை போன்ற விசேச நாட்களில் வேலை செய்யும் போது இரு மடங்கு சம்பளம் கொடுகிறார்கள். எங்களுக்கு அப்படி எந்த சலுகையும் கொடுப்பது இல்லை.


இந்த திட்டம் தொடங்கப்பட்டு நான்காண்டுகள் ஆகிவிட்டது, ஆனால், ஆம்புலன்ஸ் வண்டி நிறுத்த இடமில்லை, எங்களுக்கு உட்கார இடமில்லை;  தண்ணி குடிக்க இடமில்லை, வெய்யில் அடித்தாலும், மழை பெய்தாலும் வண்டிக்குள்ளேயே இருக்க வேண்டியது தான்.


அதிலும் எங்களுடன் பணியாற்றும் பெண்களின் நிலைமை மிகவும் மோசம். போலிஸ் ஸ்டேஷன், அரசு மருத்துவமனை, பஞ்சாயத்து ஆபிஸ் இப்படி பல எடத்துல நாங்க வண்டிய நிப்பாட்டிட்டு உக்காந்திருக்கிறோம்.


சாலை விபத்து ஏற்பட்டால், நாங்க அடிபட்டவர்களை எடுத்து போகும் போது  வண்டிக்குள்ள இரத்தம் பட்டுட்டா அதை கழுவிவிட தண்ணி எங்களுக்கு கிடைப்பதில்லை.


கொண்டலம்பட்டி காவல் நிலையத்திலும், அம்மாபேட்டை காவல் நிலையத்திலும் தண்ணீர் வசதியில்லை. அங்கு வேலை செய்யும் போலிஸ் காரர்களே தண்ணியில்லாமல் இருக்கும் போது எங்களுக்கு வண்டி கழுவ தண்ணீருக்கு எங்கே போவது.


மல்லூர் காவல் நிலையத்தில் இருந்த வண்டியை ஒருமுறை போலிஸ் இன்ஸ்பெக்டர் அவசரத்துக்கு கூப்பிட்டிருக்கிறார், அந்த நேரம் வண்டி சேலம் போய்விட்டது.


 எங்களுக்கு உதவாத வண்டியை இங்க நிப்பாட்ட வேண்டாமுன்னு சொல்லி துரத்திவிட்டார்கள். இப்போது கெசல்நாயக்கன்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் நிறுத்தியுள்ளோம்.


இது எல்லாத்தையும் விட சமயத்தில் பொது மக்கள் வேறு விதமாக பிரச்சனை செய்கிறார்கள். தண்ணியை போட்டுவிட்டு கிடப்பவர்களை பார்த்துவிட்டு 108க்கு  தகவல் சொல்லிட்டு போயிடறாங்க.

நாங்க போய் குடிகாரன தூக்கிக்கிட்டு போய் மருத்துவமனையில் போட்டால் அங்க இருக்கறவங்க எங்களை திட்டுறாங்க..

சில இடங்களில் போதையில வாந்தி எடுத்திருப்பர்கள், இன்னும் மோசமா, சில இடத்துல படுத்தபடியே “மோசன்” போய் கிடக்குற கேசையெல்லாம் பார்த்துட்டு, எங்களுக்கு தகவல் சொல்லிவிட்டு போய்விடுகிறார்கள்.


ராத்திரி இரண்டு மணிக்கு போன் பண்ணி எம் புருசனுக்கு  மாரடைப்புன்னு சொல்லறாங்க.....   சரியா அட்ரசும் சொல்லமாட்டாங்க... தெருவில் வந்து நிக்க சொன்ன அதையும் செய்யமாட்டாங்க, தட்டு தடுமாறி நாங்க அவங்க வீட்ட கண்டுபிடுச்சு அங்க போனா, வீடு மூணாவது மாடியில இருக்கும்.    எங்களை வந்து தூக்கிக்கிட்டு போங்கன்னு சொல்லுவாங்க...


கிராமத்துல பரவயில்லை யாரவது துணைக்கு வருவாங்க... ஆனா  நகரத்துல யாரும் உதவிக்கு வருவதில்லை. சில இடங்களில், தண்ணிய போட்டுட்டு அடிதடி போட்டுக்கிறாங்க...  108 அம்புலன்சுல போனாத்தான் ஹாஸ்பிடல்ல அட்மிட் பன்னுவங்கன்னுட்டு எங்களுக்கு போன் போட்டு அய்யோ அய்யோன்னு... கத்துவாங்க கடைசியில நேருல போய் பார்த்தால் ஒரு சின்ன காயம் கூட இருக்காது. ஆனா நெஞ்சு வலிக்குது... உயிரே போகுதுன்னு கத்துவாங்க வேற வழியில்லாம நாங்க தூக்கிகிட்டு போகணும்.


முன்ன கொடுத்திருந்த வண்டிகள் டெம்போ டிராவலர் வேன்கள் கொஞ்சம் சிறிதாகவும் இருந்தது, புது வண்டியாக இருந்ததால் வேகமாகவும் போக முடியும்.    ஆனால் இப்போது முன்பு ஹெல்ப் லைன் 1056-க்கு ஓடிக்கொண்டிருந்த பழைய சுவராஜ் மஸ்தா வண்டியை பெயிண்ட் அடித்து கொடுத்து விட்டார்கள். இது பெரிதாக இருப்பதால் வண்டியை திருப்புவது சிரமம், சின்ன தெருவுக்குள், சந்துக்குள் எல்லாம் போக முடியாது.


ஆனால், பல இடங்களில் பொதுமக்கள், ஏன்டா போகமுடியாதுன்னு சொல்ரீங்கன்னு எங்களை அடிக்க வருவாங்க... பல இடங்களில் அடியும் வாங்கியிருக்கிறோம்.


பழைய சுவராஜ் மஸ்தா வண்டிக்கு ஏழு முதல் எட்டு கிலோ மீட்டர் தூரம் தான் ஓட்ட முடியும், அனால் ஒன்பது கிலோமீட்டருக்கு மேல் ஓட்டனும், மணிக்கு ஐம்பது கிலோ மீட்டர வேகத்துக்கு மேலே போகக்கூடாது, 40 ஆயிரம் கிலோ மீட்டர் ஓட்டவேண்டிய டயர்களை 80, ஆயிரம் கிலோமீட்டர் ஓட்டவேண்டும் என்று சொல்கிரார்கள் எங்கள் உயர்  அதிகாரிகள்.


அவசரத்துக்கு ஓட்டும் ஆம்புலன்சுக்கு மைலேஜ் கேட்ட எப்படி சார் கொடுக்க முடியும். ஏதாவது எதிர்த்து கேட்டால் எங்களை மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு தூக்கியடிக்கிறாங்க... இந்த சம்பளத்துக்கு எப்படி போய் வெளியூரில வேலை  செய்யமுடியும் என்று கேட்கிறார்கள் 108,ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள்.


களப்பணிக்கு வராமல், உட்கார்ந்த இடத்திலேயே, இவர்களுக்கு மேலே வேலை செய்யும்,  பிளிட், டி.எம், ஆர்.எம் போன்ற அதிகாரிகள் சாதரணமாக அறுபது ஆயிரம் என்பது ஆயிரம் என்று சம்பளம் வாங்குகிறார்கள்.


எங்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும், தொழிலாளர் சேமநிதி பணம் எங்களுடைய கணக்கில் கட்டப்படுகிறதா..? என்பது கூட எங்களுக்கு தெரியவில்லை, பணி நீக்கம் செய்யப்படும் உளியர்களுக்கு உத்தரவுகூட போன் மூலமே சொல்லப்படுகிறது. இழுத்து மூலமாக கொடுப்பதில்லை.


பல இடங்களில் நாங்கள் அடிவாங்கியுள்ளோம் அப்போதுகூட எங்களின் நிர்வாகம் எங்களுக்கு ஆறுதல் சொன்னது கிடையாது. போலீசில் புகார் கொடுக்க வழியில்லை.


செல் போன் மூலம் இயங்கும் நாங்கள் தேவையில்லாத போது போன் இணைப்பை போல  துண்டிக்கப்படுகிறோம். பொது மக்களின் உயிரை காக்கும் ஒரு உன்னதமான பணியை செய்கிறோம் என்ற சமூக அர்ப்பணிப்பில் பல சிக்கல்களை சமாளித்துக்கொண்டு பணியாற்றும் எங்களுக்கு மூன்று வேலையும் சாப்பிட தகுந்த அளவு ஊதியமாவது கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு வந்திருக்கிறோம் என்றார்கள்.


இவர்கள் மனு மீது நடவடிக்கை எடுக்குமா அரசு....?


விலைமதிப்பில்லா மனித உயிரைக் காப்பதில் இவர்களின் பங்கும் முக்கியமானது. இவர்களின் அன்றாட வாழ்க்கையில் இத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் இவர்களின் மனித நேயமிக்க சேவையை நாம் நிச்சயம் பாராட்ட வேண்டும்.
 
*******************************************************