Wednesday, October 23, 2013

என்னைக் கவர்ந்த ஜப்பானிய மக்கள்


சென்னையில் இருக்கும் போது தினமும் பதிவு எழுதி வந்தேன். ஜப்பானுக்கு வந்த பின்பு பதிவு எழுதுவதற்கு நிறைய விசயங்கள் இருந்தும், ஏனோ பதிவு எழுத இயலவில்லை. சரி மனதிற்கு தோணும் போது எழுதலாமே என்று மனம் போன போக்கில் போய்க்கொண்டிருந்தேன். இன்றுதான் எழுத மனம் நினைத்தது.

சரி விசயத்திற்கு வருவோம்.

ஜப்பானுக்கு வந்து கிட்டதட்ட ஒரு வருடம் ஆகி விட்டது. இத்தனை நாட்களில், ஜப்பானில் ஆச்சர்யமான நிறைய அனுபவங்கள் பெற்றுக் கொண்டிருக்கிறேன் .  ஜப்பான் நாட்டைப் பற்றி,  ஜப்பானிய மக்களைப் பற்றின நிறைய விசயங்கள் என்னை மிகவும் அதிசயபட வைத்து விட்டன. இனி அவ்வப்போது, இங்கு நான் பெற்ற நேரடி அனுபவங்களை, ஒவ்வொன்றாக உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.



உண்மையிலேயே நம் இந்திய மக்கள் , குணத்திலும், பழக்க வழக்கத்திலும் மேன்மையானவர்களா? என்ற கேள்விக்கு தற்சமயம் என்னால் பதில் சொல்ல முடியவில்லை. காரணம் நிறைய விசயங்களில் மேன்மையாக இருக்கும் ஜப்பானிய மக்களிடம் நான் பெற்ற அனுபவங்கள்தான். கீழே ஒரு சில விசயங்களை சொல்லியிருக்கிறேன். அதனைப் படித்த பின், "நாம் எப்படி?" என்ற உண்மையை அறிய முடியும்.




ஜப்பானிய மக்களிடம் என்னைக் கவர்ந்த விசயங்கள்:

*நேர்மையாக இருப்பது. அதே நேர்மையை பழகுபவர்களிடமும் எதிர்பார்ப்பது.
பர்சனலாகவே பொய் பேசுவதை வெறுப்பது.

*அடுத்தவரின் விசயத்தில் மூக்கை நுழைக்காமல் தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பது.
 
*பொது இடங்களில், தன்னால் யாருக்கும் இடையூறு வந்து விடக்கூடாது என்ற விசயத்தில் மிகவும் கவனமாக இருப்பது.
 
*ரயில் பயணங்களில் செல்போன் பேசாமல் இருப்பது. முக்கியமாக சத்தம் போட்டு பேசாமல் இருப்பது. முடிந்த வரை பேசாமல் இருப்பது.
 
*தன் தாய்மொழியை அதிகமாக நேசிப்பது.
 
*ரயிலில் ஏறும்போதும் அல்லது பஸ்களில் ஏறும் போதும்(கூட்டமாக இருந்தாலும், இல்லாமல் இருந்தாலும்) யாருடைய உத்தரவின்றியும் தானாகவே க்யூவில் நின்று, பயணிகள் இறங்கியவுடன் ஒன்றன் பின் ஒன்றாக ஏறுவது.
 
*அலுவலகத்திற்கு குறித்த நேரத்திற்கு வருவது.
 

*வேலை நேரத்தில் செல்ஃபோன் பேசாமல் இருப்பது.
 
*12 மணி நேரம் வேலை செய்தாலும் சலிக்காமல் வேலை செய்வது. வேலை நேரத்தில் ஓ.பி அடிக்காமல் இருப்பது.
 
*எல்லா விசயங்களிலும் சிஸ்டமேட்டிக்காக இருப்பது.
 
*விடுமுறை நாட்களை பொழுது போக்கிற்கு நன்கு பயன்படுத்துவது.
 
*அடுத்தவர்களின் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பது.

* சுற்றுப் புறத்தை மிகச் சுத்தமாக பேணிக் காப்பது,(உதாரணத்திற்கு குப்பைகளை எல்லாம் மட்கும்/மட்காத குப்பைகளாக பிரித்து கார்ப்பேஜில் போடுவது.ரோட்டில் எச்சில் துப்பாமல் இருப்பது,ரோட்டில் எவ்வித அசுத்தமும் செய்யாமல் இருப்பது, ரோட்டில் புகை பிடிக்காமல் இருப்பது, எஸ்கலேட்டர், அலுவலக படிக்கட்டுகளில் போகும் போது ஓரமாக நின்று கொண்டு, அவசரமாக செல்போருக்கு எப்போதும் வழி விட்டு செல்வது. மொழி தெரியாத நபர்கள் கேட்கும் விசயத்தை சலிக்காமல் கேட்டு அவர்களுக்கு உதவி செய்வது. உதாரணம். ஏ.டி.எம் செல்ல வழி கேட்டால் அந்த இடத்திற்கு அழைத்து சென்று விடுவது) 


 
*எவ்வளவு சரக்கடித்தாலும் கரெக்டாக ரயிலேறி வீட்டிற்கு போவது.


உதாரணத்திற்கு எனக்கு நிகழ்ந்த ஒரு சம்பவம்:

சில மாதங்களுக்கு முன்பு, ஒரு பார்க்கிற்கு நானும் எனது நண்பர்களும் சென்றிருந்தோம். என்னுடைய கேமாராவையும் நான் எடுத்து சென்றிருந்தேன்.

அன்று ஒரு ஜப்பானிய பண்டிகை நாளாக இருந்ததால், அங்கு நிறைய கூட்டம் இருந்தது. ஒரு சில இடங்களுக்கு சென்று விட்டு, வேரொறு இடத்திற்குச் சென்று கொண்டிருக்கும் போதுதான் எனக்கு, இடுப்பில் கட்டி வைத்திருந்த என் கேமரா கழன்று எங்கேயோ விழுந்து விட்டதை அறிந்தேன்.

ஆசைப்பட்டு சுமார் 250000.00 ரூபாய் மதிப்பில் வாங்கின கேமரா, காணாமல் போய் விட்டதே? என்று புலம்பிக் கொண்டு எல்லா பக்கமும் தேடிப்பார்த்தோம்.கிடைக்கவேயில்லை. சரி அதற்கு ஆயுள் அவ்வளவுதான் என்று நினைத்து விட்டு, மனதைத் தேற்றிக் கொண்டு வீட்டிற்கு செல்ல நினைத்த போது, எனது நண்பர் ஜப்பானில் எந்த பொருள் காணாமல் போனாலும் அது திரும்ப கிடைத்து விடும். மக்களின் குணம் அப்படி என்று சொன்ன போது சரி ட்ரை பண்ணலாம் என்று பக்கத்தில் இருக்கும் போலிஸ் ஸ்டேசன் சென்று ஒரு கம்ப்ளெயிண்ட் செய்தோம். அந்தப் போலிஸ்காரர் சில நிமிடங்கள் எங்களை வெயிட் பண்ணச் சொல்லி விட்டு, யாருக்கோ ஃபோன் செய்து பேசினார்.

சில நிமிடத்தில், ஒரு வேறொரு போலிஸ் ஸ்டேசன் இடத்தைச் சொல்லி, அங்கு சில கேமராக்கள் சில மணி நேரம் முன்பு கிடைத்திருப்பதாகச் சொல்லி, அங்கு போகச் சொன்னார். முகவரி தெரியாததால், எங்களுக்கு அந்த இடத்தின் முகவரி மற்றும் செல்லும் வழிமுறையும் சொல்லி, ஒரு டாக்ஸி பிடித்து அனுப்பி வைத்தார். அவர் சொன்ன இடத்திற்கு சென்று , தொலைத்த எனது கேமராவை திரும்ப பெற்றுக் கொண்டேன்.  நாங்கள் சென்ற பார்க் பக்கத்தில் இருக்கும் ஒரு அரசு பாதுகாப்பு அலுவலகத்தில், எனது கேமராவை ஒரு ஜப்பானிய நபர் கண்டு எடுத்து கொடுத்ததாக அந்த ஸ்டேசன் போலிஸ் அதிகாரிகள் சொன்னார்கள். அன்றுதான் நமது ஊரையும், ஜப்பானையும் நான் மனதில் நினைத்துப் பார்த்தேன்.




நமது மக்களும் இவர்களைப் போல் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?. என்றுதான் மாறும் இந்த நிலை நம் நாட்டில்? இந்தக் கேள்விதான் எனக்குத் தோன்றியது அப்போது.

இன்றைய பதிவு அவ்வளவுதான்.மீண்டும் ஒரு சிறப்பான அனுபவத்தை எழுதுகிறேன்.

#################################################################









1 comment:

Unknown said...

வாழ்த்துக்கள் ஜப்பானிய மக்களோடு மக்களாய்

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...