Sunday, March 31, 2013

எனது படைப்புகள் : தமிழ் ஈழ மக்களுக்காக ஜப்பானில் உண்ணாவிரதப் போராட்டம்


2009,மே 18 அன்று விடுதலைப் புலிகளின் தலைவர் திரு பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை நான் அறிந்த போது, இத்தனை வருடங்களாக தமிழ் ஈழ மக்களின் நலனுக்காக போராடிய தலைவன் இறந்தவிட்டார். இனி மேல் அம்மக்களின் கதி என்ன? என்பதனை நினைத்துக் கொண்டே இருந்தேன். அப்போதே சிங்கள இராணுவத்தினர் தமிழ் ஈழ விடுதலை போர் வீரர்களையும், வீராங்கணைகளையும் , அப்பாவி மக்களையும் துன்புறுத்தி கொலை செய்யும் படங்களையும் வீடியோக்களை இணையத்தில் நான் பார்த்திருந்தேன். மனதிற்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஏன் இப்படி கொடூர மனதுடன் சிங்கள இராணுவத்தினர் செய்கின்றனர்?  மனித உயிரை எடுப்பது அவ்வளவு சுலபமா அவர்களுக்கு?
    
                             

தலைவனில்லா ஈழ மக்களின் நிலைமை இனி என்னவாகப் போகிறது? என்றெல்லாம் நினைத்தபோது, ஐ.நா சபையினர் இலங்கை அரசின் மீது போர் குற்றம் சாட்டி ஏராளமான தகவல்களை அவ்வப்போது ஊடகங்கள் வாயிலாகவும், இணையங்கள் வாயிலாகவும் காட்டிக் கொண்டிருந்தனர்.
ஆனால் இந்த வருடம் வரை சிங்கள அரசின் மீது எவ்வித நடவடிக்கையும் அவர்களால் எடுக்க முடியவில்லை. மேலும் நம் தமிழகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள் சிங்கள அரசின் செய்ல்பாடுகளை எதிர்த்து அரசியல் செய்து கொண்டிருந்தாலும், தமிழக மக்களின் மனதில் தமிழ் ஈழ மக்களைப் பற்றியும், ஈழ மக்கள் படும் துயரங்கள் பற்றியும் எவ்வித புரிதலும் இல்லாமல்தான் இருக்கிறது.
2013, மார்ச் 11 அன்று 8 மாணவர்கள் சேர்ந்து  "சிங்கள அரசின் இனப் படுகொலை எதிர்ப்பு மற்றும் ஈழ மக்களும் நல்வாழ்வு" -க்காக ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் பல்லாயிரக்கணக்கான மாணவர்களை ஒன்று சேர்த்தது. அத்தனை பேரும் சேர்த்து குரலெழுப்பியதன் பலனாக தமிழக அரசும் தமது பங்களிப்பை தர ஆரம்பித்தது.

மாணவர் புரட்சி எப்போதுமே தோற்றதில்லை என்பதற்கு சமீபத்திய நிகழ்வும் ஒரு உதாரணம்.

எனது நண்பர் பத்மநாபன் அவர்கள், டோக்கியோவில் வாழும் ஜப்பான் வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி, சிங்கள அரசும், சிங்கள இராணுவமும் செய்யும் தமிழ் ஈழ மக்கள் மீதான கொடுமைகளை எதிர்த்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தப்படுவதாக என்னிடம் கூறினார். செய்தியைக் கேட்ட எனக்கு, மனதிற்குள் நிச்சயம் இதில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

நேற்று ஞாயிறு 31-03-2013 காலை 9 மணி முதல் மாலை 5.00 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் அமைதியாக நடந்தது.
                            


இந்த உண்ணாவிரத போராட்ட நிகழ்வைக் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்  நண்பர் செந்தில்குமார்வெளியிட்ட செய்தி இது...

" இணைய தளங்கள் வாயிலாகவும், சமூகவலைத் தளங்கள் மூலமும், நாம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற ஒருமித்த கருத்துடன், டோக்கியோ வாழ், இந்திய தமிழர்கள் பெருமளவில் இந்திய தூதரகம் முன்பாக திரண்டனர். இன்று காலை ஜப்பான் நேரம் 9 மணிக்கு சரியாக உண்ணாநிலை அறப்போராட்டம் தொடங்கியது. டோக்கியோவில் இருக்கும் இந்திய தூதரகத்தில் இன்று சகுரா கொண்டாட்டங்கள் நிகழ்ந்தமையால், இந்தியர்களும், ஜப்பானியர்களும் அங்கு திரண்டிருந்தனர். ஈழதமிழர்கள் 60 ஆண்டுகாலமாக அனுபவித்து வரும் துயரம் குறித்தும், 2009ல் ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலை குறித்தும் பலகைகளில் எழுதி ஏந்தி நின்றனர் எமது போராட்டகாரர்கள். இது மிகப் பெரிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

வானிலை அறிக்கை, மழை நிச்சயம் பொழியும் என்று அறிவித்திருந்தது. கடுங்குளிர் எலும்பை உறைய செய்யும் வகையில் வாட்டிக் கொண்டிருந்தது. இருப்பினும் நெஞ்சிலே தீயை ஏந்தி நிற்கும் எமது தமிழ் சிங்கங்களை இவை என்ன செய்யும்?

1. 2009 மே மாதம் நிகழ்ந்த இனபடுகொலை மற்றும் போர்குற்றங்கள் குறித்து, ஐக்கிய நாட்டு சபையின் மூலம் சுதந்திரமான முறையில் விசாரணை மேற்கொள்ளபட்டு, குற்றவாளிகள் தண்டிக்கபடவேண்டும்(ACCOUNTABILITY). இந்த விசாரணைக்கு, இந்திய அரசாங்கம், முயற்சியெடுக்க வேண்டும்.

2. உலக நாடுகளின் மேற்பார்வையில், ஈழதமிழர்களிடையில் பொது வாக்கெடுப்பு (UN REFERENDUM) எடுக்கபபட்டு, அவர்களின் எதிர்காலத்தை அவர்களே முடிவு செய்யும் வகையில் சுய நிர்ணய உரிமை வழங்கபட வேண்டும். இதற்க்கான முயற்சிகளை இந்தியாவே முன்னெடுக்க வேண்டும்.

3. தமிழர்களின் பூர்வீக தாயகமான வடகிழக்கு பகுதியில் சிங்களர் குடியேற்றம் தடுத்து நிறுத்தபட வேண்டும் (STOP THE ETHNIC CLEANSING).

4. இலங்கையில் பத்திரிக்கை சுதந்திரம் பாதுகாக்கப்பட்டு, தமிழர்களின் பூர்வீக தாயகமான வடகிழக்கு பகுதியில் நிகழும் நிகழ்வுகள், வெளி உலகிற்க்கு தெரியபடுத்தபட வேண்டும். (Reinstate the Press Freedom)

5. இலங்கையில் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வரை, இலங்கையின் இனவாத அரசுக்கு, இந்திய அரசாங்கம் செய்து வரும் எல்லா உதவிகளையும் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். (Stop all Aid)

6. இலங்கைக்கு, இந்தியா செய்து வரும் ராணுவ ரீதியிலான உதவிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இது குறித்த எல்லா ஒப்பந்தங்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். (Stop Military Aid)

7. 60 ஆண்டுகாலமாக தொடரும் போராட்டத்தினாலும், இனபடுகொலை சம்பவங்களினாலும், இனி தமிழர்களும், சிங்கள மக்களும் இணைந்து வாழ்வது என்பது சாத்தியமில்லாத நிலையை எட்டியுள்ளது. இதை இந்தியா புரிந்துக் கொண்டு, தமிழர்களின் நீண்ட கால கோரிக்கையான தமிழ் ஈழம் குறித்து, ஈழ தமிழர்களிடையில் பொது வாக்கெடுப்பு எடுக்க உதவ முன்வர வேண்டும்.

8. நிறவெறி கொள்கையினால் முன்பு தென்னாப்பிரிக்கா அரசை உலக அரங்கில் தனிமைபடுத்த எடுக்கபட்ட முயற்சிகளுக்கு இந்திய அரசாங்கமே தலைமை தாங்கியது. அதே போல் இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசை உலக அரங்கில் தனிமைபடுத்தும் முயற்சிகளில் இந்திய அரசாங்கமே முன்னெடுக்க வேண்டும்.

9. 2009 மே மாதம் நிகழ்ந்த இனபடுகொலைக்கான ஆதாரங்கள் வெளிவந்த பிறகும், இலங்கை அரசை, நட்பு நாடு என்று இந்தியா தொடர்ந்து அழைப்பது, வெந்த புண்ணில், வேலை பாய்ச்சும் செயலாகவே தமிழர்களை பொறுத்த வரையில் இருக்கிறது என்பதை இந்தியா புரிந்துக் கொள்ள வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தியே இந்த உண்ணாநிலை அறப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மொத்தம் 82 இந்தியர்கள் இந்த உண்ணாநிலை அறப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்திய தூதரகத்திற்க்கு கொடுப்பதற்க்காக தயார் செய்யப்பட்ட மனுவில் கையெழுத்திட்டனர். இடைப்பட்ட நேரத்தில், அருள், பாலா, கலை, கோவிந்த், சதிஷ், சசிகுமார், செந்தில்குமார், வேல்முருகன், ரகுபதி என பலரும் ஈழபோராட்டத்தின் வரலாற்று குறித்து ஒவ்வொருவரும் தமது புரிதல்களை விளக்கினார்கள். நீண்ட நெடிய போராட்டம் குறித்த இந்த தொடர் விளக்கங்கள், பெரும்பாலானவருக்கு மிக நல்ல திறப்பாக இருந்தது. பாலசந்திரனின் புகைப்படமே என்னை இந்த போராட்டத்திற்க்கு அழைத்து வந்தது என்று கலந்து கொண்ட குழலி என்ற குடும்ப தலைவி நெகிழ்ச்சியுடன் கூறினார். தொடர்ந்து இது மாதிரியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று சசி மற்றும் ரவிசந்திரன் வலியுறுத்தினார்கள். எமது கோரிக்கைகளின் முன் வடிவத்தை முன்மொழிந்த குகன், அறிவிப்பு பலகைகள் தயார் செய்த துரை மற்றும் சேயோன் செந்தமிழன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தமது புதிய திரைப்படத்திற்க்காக, படபிடிப்பு தளங்களை தேர்ந்தெடுப்பதற்காக, ஜப்பான் வந்திருந்த இயக்குனர் பி. வாசு, எமது போராட்டம் குறித்து ஹரி அவர்கள் மூலம் அறிந்து, தாமும் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வால் உந்தப்பட்டு, தமது டோயோமா பயணத்தை ஒரு நாள் முன்னதாகவே முடித்துக் கொண்டு டோக்கியோ வந்திருந்து போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். ஹரி கணேசன் அவர்கள் இனி தாம் நடத்தும் விழாக்களில் எல்லாம், தமிழீழ பிரச்சனை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சில நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதாக கூறினார்.

முடிவாக நன்றி கூறி ஐந்து மணிக்கு உண்ணாநிலை போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது."

இந்தப் போராட்டத்தின் மூலம் நான் அறிந்த விசயம், தமிழர்கள் ஒன்று கூடி, உலகத்தின் ஆன்மாவை உலுக்க தயாராகிவிட்டனர் என்பதே...!
புதிய தலைமுறையில் இந்தப் போராட்டத்தைப் பற்றின செய்தி இது..

இந்தப் போராட்டத்தில் நிறைய சிங்களத்தைப் பற்றியும், ஈழத்தமிழ் மக்கள், இந்திய அரசுப் பற்றி நிறைய கருத்துக்கள் பரிமாறினர். அடுத்தப் பதிவில் அதனைப் பற்றி எழுதுகிறேன்...

2 comments:

Vinay Vk said...

haha filmyscope.com

Ramanan Ramana said...

ம்ம இப்படி தமிழரின் நிலை

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...