Sunday, February 17, 2013

எனது படைப்புகள் : ஜப்பானில் ஒரு இனிய பயணம் - 2

                       * பனி மழையில் ஓர் ஆனந்தம்*
 
ன்று ஞாயிற்றுக் கிழமை. காலை நேரம். அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது, எனது நண்பரின் செல்ஃபோன் ஒலித்தது. ஃபோனில் அலுவலக நண்பர் "எழுந்து வெளியில் எட்டிப் பார். ஸ்னோ(Snow) வருகிறது.", என்று சொல்லி நண்பரை எழுப்பி விட்டார். அவரின் குரலைக் கேட்டு நானும் எழுந்து வெளியில் எட்டிப் பார்த்தால், வெளியில் இலேசான தூறல் விழுந்து கொண்டிருந்தது. ஸ்னோ எப்படி இருக்கும் என்பதை அறிந்திருந்தாலும் ஒரு நேரடி அனுபவத்தினைப் பெற நானும் ஆவலாக இருந்தேன்.



கொஞ்ச நேரம் மழையையே பார்த்துக் கொண்டிருந்தேன். சில நிமிடங்களில் மழையோடு கொஞ்சம் பனிச்சிதறல்களும் கீழே விழ ஆரம்பித்தன.

ஆஹா!. அற்புதமாகத்தான் இருக்கிறது. பனி பொழியும் காட்சிகளை ஆரம்பம் முதல் இறுதி வரை நிச்சயம் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தவாறே எனது கேமராவை எடுக்கத் தயாரனேன்.

சிறு குழந்தையைப் போல் நானும் எனது நண்பரும் கைகளை வெளியில் நீட்டிக் கொண்டே கைகளில் விழும் ஒவ்வொரு சிறு சிறு பனிச்சிதறல்களை கண்டு உற்சாகமடைந்தோம்!. முதன் முதலில் பெற்ற அனுபவமாதலால், கொஞ்சம் ஒவராகப் பட்டாலும், அதனைக் கண்டுக்காமல் பனியுடனான எங்கள் உற்சாகத்தை தொடர்ந்தோம்.

ஒரு மணி நேரம் கடந்த பின்பு, பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாகி விட்டது. வீட்டின் மேற்கூரையை பனி முழுவதுமாக மூடிவிட்டது. ரோடு முழுவதும் ஒரே வெண்ணிறம். இன்று முழுவதும் ஆனந்தமாக பனிப்பொழிவை கொண்டாடலாம் என்று நினைத்த போதுதான் சட்டென்று ஞாபகம் வந்தது. இன்று ஆபிஸ் உண்டல்லவா?  என்ன செய்வது? என்று நினைத்துக் கொண்டு,  டோக்கியோ Weather Report- ஐப் பார்த்தேன். severe snow என்று போட்டிருந்தது. சரி எப்படி இருந்தாலும் இன்று ஆபிஸ் போகத்தான் வேண்டும் என்றெண்ணி கிளம்பத் தயாரனோம்.
 
வீட்டை விட்டு வெளியில் வந்து சாலையில் நடக்கும் போதுதான் தெரிந்தது. என்ன ஒரு குளிர்!. யப்பா!., கைகள் எல்லாம் விறைக்க ஆரம்பித்து விட்டன. அவசர அவசரமாக க்ளவுஸ் போட்டுக் கொண்டு சாலையில் நடக்க ஆரம்பித்தோம். பனிப்பொழிவு மிகவும் தீவிரமாக இருந்தது. கையில் வைத்திருந்த குடையில் மேல் பனிபடர்ந்து குடையின் எடையை வேறு அதிகப்படுத்தியது. பனியில் நடந்து நடந்து, காலில் போட்டிருந்த ஷூ-வையும் மீறி குளிர், பாதத்தை தாக்க ஆரம்பித்தது. இருந்தாலும் ஒரு கையில் குடையை பிடித்துக் கொண்டு, மறு கையில் கேமராவைப் பிடித்துக் கொண்டு பனிப் பொழிவை ரெக்கார்ட்(Record) செய்து கொண்டே நடந்தேன்.

                                        Before                                                After

கண்ணுக்கெட்டிய தூரம் எங்கும் வெள்ளை நிறம். எங்கும் பனிதான். நடுங்கும் குளிரில்(ஜெர்க்கின் போட்டிருந்தும் கூட) அந்தக் க்ளைமேட்டும், சூழலும் அற்புதமாக இருந்தது.

அலுவலகம் செல்லும் வழியில் எப்போதும் நான் பார்த்துக் கொண்டே செல்லும் அந்த சின்ன தோட்டத்தை இப்போது பார்த்தேன். பனி முழுவதுமாக ஆக்ரமித்து விட்டிருந்தது. நன்றாக விளைந்திருந்த முள்ளங்கி செடிகளும், ப்ரகோலி செடிகளும் இப்போது காணாமல் போய் விட்டிருந்தது. கிட்டத்தட்ட இரண்டு மீட்டர் அளவிற்கு, பனி தோட்டத்து நிலத்தை மறைத்து விட்டிருந்தது.
 
                                 Before                                                    After
 
சாலையில் நடக்கும் போது சில இடங்களில் கால் வழுக்கியது. வேகமாக நடக்காமல் கொஞ்சம் மெதுவாகவே நடந்து சென்றோம். அலுவலகம் சென்றதும், பனியின்மேல் இருந்த கவனத்தை ஒதுக்கி விட்டு, வேலையினை தொடர ஆரம்பித்தேன். இருந்தாலும் சில சமயங்களில் கண்கள் ஜன்னலுக்கு வெளியே பொழிந்து கொண்டிருக்கும் பனியினையே பார்த்தது.
 
இடையில் கிடைத்த ப்ரேக்கில் வெளியில் சென்று நானும் எனது நண்பரும்,  கொஞ்சம் நேரம் பனியுடன் விளையாடினோம். சில போட்டோக்களையும் மறக்காமல் எடுத்துக் கொண்டோம்.

இனி மீண்டும் இப்படி ஒரு நிகழ்வு கிடைக்குமா? என்று மனம் அப்போது நினைத்தது. ஆச்சர்யமாக அடுத்த வாரமே மீண்டும் ஒரு முறை பனி பொழிவு வந்தது. இருந்தாலும் முன்பிருந்த தீவிரம் இல்லை. அதற்கப்புறம் சில சமயங்களில் பனி மழை வந்தது. ஆனால் வெளியில் சென்று கைகளை நீட்டி பனியினை தொட்டுப் பார்க்கும் அளவிற்கு மனது இப்போது வரவில்லை. முதல் முறை அற்புதம்!., ஆனந்தம்!., என்றெல்லாம் அதிசயத்த அதே மனது இப்போது எதுவும் செய்யாது வெறுமே வேடிக்கைப் பார்க்கும் அளவிற்கு வந்து விட்டது. இதுதான் மனித மனதின் இயல்போ? அல்லது இயற்கையோ?. எதுவோ இருந்தாலும் இதுதான் வாழ்வியல் உண்மை.

மீண்டும் ஒரு இனிய பயண அனுபவத்தை எழுதுகிறேன்.

################################################################

1 comment:

Unknown said...

ம்ம்ம்ம் அப்போயா யப்பான் போன சந்தோசத்தோட ஒரு பதிவு சுகமில்லாம போகிறது

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...